Published:Updated:

ரஜினி ரிட்டர்ன்ஸ்!

இரா.சரவணன்

ரஜினி ரிட்டர்ன்ஸ்!

இரா.சரவணன்

Published:Updated:
##~##

''இந்த விஞ்ஞான உலகத்தில்கூட எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா... தலையான்னு தீர்மானிப்பது ஆண்டவன் வேலை!'' - படத்தில் அல்ல... படுக்கையில் இருந்தபடி ரஜினிகாந்த் சொன்ன வசனம் இது.

 சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், 'என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், மருத்துவம், மிகச் சிறந்த மருத்துவர்கள் என இருக்க... இன்னொரு பக்கம் நான் நலம் அடைய, பிரார்த்தனை கள், பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் ஆகியவைதான் என்னைக் காப்பாற்றின. ரஜினிக்கு எவ்வளவு மக்களின் அன்பு இருக்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டிவிட்டீர்கள். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை!’ என்று நெகிழ்ந்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினி ரிட்டர்ன்ஸ்!

ரஜினியிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என ஏங்கிய ரசிகனுக்கு, இது அடை மழை ஆனந்தம். சிறுநீரக மாற்று சிகிச்சை வரை அவசியம் என்கிற அளவுக்குப் பரபரக்கப்பட்ட ரஜினியின் உடல்நிலை இப்போது, டயாலிசிஸ்கூட அவசியம் இல்லை என்கிற அளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.  

இன்னும் 20 நாட்கள் சிங்கப்பூரில் ஓய்வு எடுக்க இருக்கும் ரஜினி, சென்னையில் கால் வைக்கும்போது 'பழைய ரஜினி’யின் சுறுசுறுப்பில் துளி அளவும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள ரஜினி விரும்ப, 'இப்போதைக்கு வேண்டாம்’ எனத் தவிர்த்தார்கள் மருத்துவர்கள். 'ரெஜு வெனேஷன் தெரபி’ மட்டுமே ரஜினிக்கு இப்போது வழங்கப்படுகிறது. குறைவான உணவு, பிரார்த்தனை, நல்ல தூக்கம், மாடி யில் வாக்கிங் என ரஜினியின் பொழுதுகள் இப்போது ஆரோக்கியமாகக் கழிகின்றன.

சென்னைக்குத் திரும்பிய உடன் செய்ய வேண்டிய வேலைகளாகப் பல முக்கிய விஷயங்களை ரஜினி பட்டியல் போட்டுவைத்து இருக்கிறார். இதோ அந்தப் பட்டியல்...

முதல்வரைச் சந்திக்கிறார்!

ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டபோது, 'அவருடைய உடல்நிலை குறித்த தகவல்களைத் தினமும் கார்டனுக்குச் சொல்லுங்கள்!’ என உத்தரவே போடப்பட்டது. ரஜினியின் சிகிச்சைக்கு அரசுத் தரப்பிலான எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் எனவும் கார்டனில் இருந்து சொல்லப்பட்டது. 'பழைய’ வருத்தங்களை எல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா காட்டிய இந்த அக்கறை ரஜினியை வியக்கவைத்தது. அதனால்தான், குணமான உடனேயே முதல் வேலையாக ஜெயலலிதாவுடன் பேசினார். சென்னைக்கு வந்த உடன் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக் கவும் இப்போதே தேதி கேட்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்!’ என கார்டனும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.

கருணாநிதிக்குப் பரிசு!

உடல்நிலை சரி இல்லை எனத் தெரிந்த உடனேயே முதல் ஆளாக ரஜினியைப் பார்க்க ஓடியவர் கருணாநிதிதான். இதற்கு நன்றி கூறி, சமீபத்தில் ரஜினி கருணாநிதிக்கு போன் செய்தார். அப்போது, கருணாநிதி பகிர்ந்து கொண்ட விஷயம் ரஜினியையே அதிரவைத்தது. ''உங்க உடம்புக்குப் பெரிய சிக்கல்னு டாக்டர்கள் மூலமா செய்தி வந்தது. 'அவரால் நடக்கவே முடியாது’ன்னு சொன்னாங்க. அதனால்தான் பதறி அடிச்சு ஓடி வந்தேன். உண்மையைச் சொல்ல ணும்னா, அன்னிக்கு எனக்கும் உடம்பு சரி இல்லை. மற்றபடி, கடந்த ஆட்சியில் என்னால் ஏதாவது சங்கடம் வந்திருந்தா, தவறா எடுத்துக்காதீங்க!'' என கருணாநிதி சூசகமாகச் சொல்ல, ரஜினி பதறிப்போனாராம். 'நேரில் சந்தித்து உங்களிடம் நிறையப் பேச வேண்டும்!’ என்று மட்டுமே சொன்ன ரஜினி, சென்னைக்கு வந்ததும் கோபாலபுரம் செல்கிறார். கருணாநிதிக்குக் கொடுப்பதற்காகவே விசேஷப் பரிசு ஒன்றும் இப்போது ரஜினி கையில்.

மன்றத் தலைவர்களுக்கு அழைப்பு!

ரஜினி ரிட்டர்ன்ஸ்!

சௌந்தர்யா திருமணத்தின்போது ரசிகர்களுக்கு விருந்துவைப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால், ரசிகர்கள் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதைக் கணக்கிட முடியாததாலும், தேர்தல் பரபரப்பாலும் விருந்து தள்ளிப்போனது. ரசிகர்களின் பிரார்த்தனை களைக் கேள்விப்பட்டு சிலிர்த்துப்போன ரஜினி, அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். ரஜினிக்காகப் பிரார்த்தனை நடத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பட்டியலும் தீவிரமாகத் திரட்டப்படுகிறது. 'அரசியல் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம்!’ என மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.

'ராணா’வுக்குத் தயார்!

ஷூட்டிங்கில் கலந்துகொள்கிற அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. வேகமாக நடக்கவோ, விறுவிறுவெனப் பேசவோ ரஜினியால் முடியவில்லை. ஆனால், ஒரு மாத காலத்துக்குள் இதெல்லாம் சரியாகிவிடும் என உறுதியாக நம்புகிறார் ரஜினி. ரஜினிக்கு சிரமத்தை ஏற்படுத்தாதபடி 'ராணா’வின் கதை சற்றே மாற்றப்பட்டு வருகிறது. ரஜினியின் போர்ஷனும் குறைக்கப்படலாம் என்கிறார்கள்.

வடிவேலுவுக்கு வாய்ப்பு!

'ராணா’ படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டதால், ரஜினி குறித்து அவர் ஆவேசமாகச் சீறினார். தேர்தலுக்குப் பிறகு திரைத் துறையே வடிவேலுவை ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டது. தன்னை வசை பாடிய மனோரமா வுக்கு 'அருணாச்சலம்’ படத்தில் வாய்ப்பு அளித்து அசத்திய ரஜினி, அதே பாணியில் 'ராணா’வில் வடிவேலுவைச் சேர்க்கச் சொல்லி இருக்கிறார். வடிவேலு உடன் கஞ்சா கருப்புவும் படத்தில் இருப்பார் என்கிறது யூனிட். இது குறித்து வடிவேலுவுக்குத் தகவல் சொல்லப்பட... தழுதழுப்பே பதிலாக வந்ததாம்.

மருத்துவர்களுக்கு விருந்து!

தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கருதுவது டாக்டர்களைத்தான். இசபெல்லா, ராமச்சந்திரா மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை களில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் களை வீட்டுக்கு அழைத்து விருந்துவைக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், ''உங்களை எல்லாம் சென்னைக்கு அழைத்துப்போய் 'எனக்கு மறுவாழ்வு அளித்த தெய்வங்கள்’ எனச் சொல்ல வேண்டும்!'' என உருகினார் ரஜினி.

கடிதத்துக்கு ரியாக்ஷன்!

தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான ஒரு கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். 'இது உங்களுக்கு மறு பிறப்பு. போன பிறவி யில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள். மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும், அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்தப் பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் போராட வேண்டும். உங்களுக்குக் கிடைத்த உயரிய சிகிச்சைகள் சாதாரண குடி மகன்களுக்குக் கிடைப்பது சாத்தியம் இல்லை. அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதனைத் தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்!’ என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன்.

உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பி இருக்கிறதாம். சமூகம் சார்ந்த கைகோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடம் இருந்து கிளம்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism