விகடன் விமர்சனக் குழு
##~## |
ஆர்யா... கும்பிடுறேன் சாமி. விஷால்... வால்டர் வணங்காமுடி. இருவருக்கும் அப்பா ஒருவர், அம்மாக்கள் வேறு வேறு. களவாணிப் பயல்களின் ரகளைகளே படம்!
கதை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தேனி ஏரியா, அசாதாரணமான இரண்டு ஹீரோக்கள், லூஸு ஹீரோயின்கள், ஈவ் டீசிங், நிறைய சாராயம், சலம்பல் கள், சோப்ளாங்கி போலீஸ், அய்யர் ஜட்ஜ், ரத்தம், சத்தம் என கொஞ்சம்கூட மாறாத கிளிஷேக்களோடு படம் எடுத்திருக்கிறார் பாலா. நாங்க மாறிட்டோம்... நீங்க எப்போ பாலா மாறப்போறீங்க?

பெண் வேடமிட்டு ஆடும் அதகள ஆட்டமே விஷாலுக்கு அட்ராசக்கை அறிமுகம் கொடுக்கிறது. பெண் வேடத்தில் திருடுவது, 'ஙே’ என்று வாய் பிளந்து, மாறு கண்ணை உருட்டிப் பார்ப்பது, நவரசங்களைக் கொட்டித் தீர்ப்பது என்று வால்டராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஷால். ஜனனி அய்யர் தன்னைக் 'கலைஞன்’ என்று சொன்னதும் வெட்கமும் மகிழ்ச்சியுமாகச் சிரிப்பதிலும், ஜி.எம்.குமார் உடலைப் பார்த்துக் கலங்கிக் கதறுவதிலும் உண்மையிலேயே தான் ஒரு புதிய 'கலைஞன்’ என்பதை நிரூபித்திருக்கிறார் விஷால்.
ஜாலித் திருடனாக ஆர்யா. ஜட்ஜ் வேண்டுகோள்படி லாக்கரைத் திறப்பது, பதிலுக்கு சைரன் வைத்த காரில் குவார்ட்டர் அடிப்பது என்று கொடுத்த வேலைகளைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். இருந்தாலும், ஆர்யா ஒவ்வொரு காட்சியிலும் நான்ஸ்டாப் நான்சென்ஸாகப் பேசிக்கொண்டே இருப்பது கொஞ்சம் எரிச்சல். வாழ்ந்து கெட்ட ஜமீன்தாராக ஜி.எம்.குமார். படத்தின் வெயிட்டான கேரக்டர்களில் ஒருவர். ஆனால், அவரை மற்ற கேரக்டர்கள் படம் முழுக்க 'யோவ் ஹைனஸ்ஸு’ என்று சர்வசாதாரணமாக டீல் பண்ணிக் காலி செய்கிறார்கள்.
கதாநாயகிகள் அவளும் இவளும் அவல் அளவுக்குக்கூடப் படத்தில் பயன் படுத்தப்படவில்லை. லூஸு போலீஸாக ஜனனி அய்யர். டுடோரியல் கல்லூரி மாணவியாக வரும் மது ஷாலினி கொஞ்சம் 'சேது’ அபிதாவை ஞாபகப்படுத்துகிறார். திருடர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடா வெட்டி விருந்துவைப்பது எல்லாம் எந்த ஊரில் நடக்கிறது பாலா? ஒரு பெண் போலீஸைப் பார்த்து, 'உங்க பேன்ட்ல ஜிப் இருக்கா?’ என்று கேட்டால் ஈவ் டீஸிங் கேஸ்தானே வர வேண்டும். ஆனால், படத்தில் காதல் வருகிறது சாமி! ஒரே ஒரு காட்சி என்றாலும் சங்கடமும் எதிர்பாராத சந்தோஷமும் என்று சரிவிகிதக் கலவையை முகத்தில் கொண்டு வந்திருப்பதில் வெல்டன் சூர்யா. போலீஸ் ஸ்டேஷனையே தன் சொந்த வீடு போல அந்நியோன்யத்தோடு புழங்கும் கிராமத்து போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் ராமராஜன்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் அறிமுக ஆட்டமும் இறுதிச் சாவு மேளமும் மட்டும் கவனிக்கவைக்கிறது. ஆர்தர் வில்சனின் கேமரா தேனியின் மலைக் காடுகளையும் மழைக் கோடு களையும் பளிச்சென்று அள்ளித் தருகிறது. விஷாலின் ஒன்றரைக் கண், ஜி.எம்.குமாரின் நிர்வாணம், மதுஷாலினியின் குட்டிக் கரணம் என்று தமிழ் சினிமா இதுவரைக்கும் பார்க்காத காட்சிகள் படத்தில் இருக்கின்றன. ஆனால், அது இருப்பதற்கான தேவையே படத்தில் இல்லை.
படத்தில் அவன், இவன் இருக்கிறார்கள்... பாலாதான் இல்லை!