Published:Updated:

''என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க!''

எம்.குணாபடம் : வி.செந்தில்குமார்

''என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க!''

எம்.குணாபடம் : வி.செந்தில்குமார்

Published:Updated:
##~##

'என் இனிய தமிழ் மக்களே...’ பாரதிராஜா பாசமாக விளிக்கும் கரகரப்ரியாவுக்கு தமிழகமே தலை சாய்க்கும். ஆனால், அவரது தலைமையில் இயங்கும் இயக்குநர் சங்கம் மட்டும் ஏனோ செவிசாய்க்கவில்லை. விளைவு... கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் நடக்கும் என்று அறிவித்தார்கள்.

 தலைவர் பதவிக்கு பாரதிராஜாவையே மீண்டும் போட்டியிடவைத்தனர். அவரை எதிர்த்து ஆர்.வி.உதயகுமார், முரளி, அமீர் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போதே ''நான் எலெக்ஷன்ல நிக்கலை. என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க'' என்று நொந்து பேசினார் பாரதிராஜா. ''நாங்க பார்த்துக்கிறோம்'' என்று சமாதானப்படுத்தியது ஆர்.கே.செல்வமணி குரூப். முதலில் உதயகுமாரைச் சமாதானம் செய்து, போட்டியில் இருந்து விலகச் செய்தார்கள். அடுத்தது முரளி. அவருக்கு செல்வமணி மீது கோபம். ''ஒவ்வொரு வருஷமும் சங்கத்தோட பொதுக் குழுவில் ஆடிட்டிங் கணக்கு காட்டணும். இதுவரைக்கும் செல்வமணி கணக்கு காட்டலை. அதனால், எலெக்ஷனை நிறுத்தணும்'' என்று கோர்ட்டில் கேஸ் போட்டார் முரளி. அந்த மனு 17-ம் தேதி தள்ளுபடியானது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க!''

''நான் வகிக்கும் செயலர் பதவியில் நீங்கள் போட்டியிடுங்கள். தலைவர் நாற்காலியை பாரதிராஜாவுக்குத் தந்துவிடுங்கள்'' என்று அமீர் மனசைக் கரைத்தார் செல்வமணி. அவரும் தலைவர் போட்டியில் இருந்து விலகி, பாரதிராஜாவின் ஒருங்கிணைந்த அணியில் பொதுச் செயலராகப் போட்டியிட்டார். பாரதிராஜா, அமீரை எதிர்த்து ஜனநாயக அணியின் சார்பில் முரளியும், மஜீத்தும் வரிந்து கட்டி நின்றனர். இணைச் செயலர்கள், செயற் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு, பாரதிராஜா அணிக்கு எதிராக ஜனநாயக அணி மற்றும் உதவி இயக்குநர்களின் 'புதிய அலைகள்’ அணி களம் இறங்கியது.

சென்னை வடபழனியில் இருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கத்தில், 19-ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் மொத்தம் 1,279 வாக்குகள் பதிவாகின. பாரதிராஜா 1,000 ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்று வென்றார். 'மற்ற பதவிகளுக்குப் பதிவான வாக்குகள் மறு நாள் எண்ணப்படும்’ என்று அறிவித்தனர்.

20-ம் தேதி காலையில் பொதுச் செயலர் பதவிக்குப் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அமீர் 900 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று ஜெயித்தார். இணை செயலர்கள் பதவியில் நின்ற நால்வரில் பிரபு சாலமன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, வேல்முருகன் மூவரும் பாரதிராஜா அணியே. தம்பிதுரை என்பவர் மட்டும் ஜனநாயக அணி சார்பாக வென்றார். இப்போது ஒட்டுமொத்தமாக பாரதிராஜா தலைமையில் ஆன அணி வெற்றி பெற்று இருக்கிறது.

தேர்தல் நடந்த அன்று வாக்களித்துவிட்டு நேராக வீட்டுக்குப் போய்விட்டார் பாரதிராஜா. அவர் வெற்றிபெற்றதை  போனில் சொன்னார்கள். பாரதிராஜாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. மறு நாள் நடந்த வாக்கு எண்ணிக்கைக்கும் அவர் வரவில்லை. 'அவர் ஏதோ மனக் கசப்பில் இருக்கிறார்’ என்பதை மட்டும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

''என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க!''

பாரதிராஜாவிடம் பேசினோம். ''நான் சினிமாவுக்கு வந்து 35 வருஷமாச்சு. இது வரைக்கும் நான் எனக்காக யார்கிட்டயும் எதுவும் கேட்டது இல்லை. ஒரு தடவை ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போ அவர் 'உனக்கு காலேஜ் கட்டிக்கிற ஃபாரத்துல கையெழுத்துப் போடுறேன். கட்டிக்கிறியா?’னு கேட்டார். அப்பவே 'அதெல்லாம் சரிப்பட்டு வராது’னு மறுத்தவன் நான். தலைவர் பதவிக்காக நான் யார்கிட்டேயும் ஓட்டுக் கேட்கலை. என்மீது அன்புகொண்டவர்கள் வாக்கு கேட்டார்கள். பாசத்தோடு 1,000 ஓட்டுக்கு மேல் வாக்களித்து என்னை ஜெயிக்க வைத்து இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டேன். என்னை நம்பிய மண்ணையும் மக்களையும் எப்போதும் உளமாற, உண்மையாக நேசித்தவன்... இப்போதும் நேசிக்கிறேன்'' என்று உணர்ச்சிப் பெருக்கோடு முடித்துக்கொண்டார்.

இரண்டு துருவங்களாக இருந்த பாரதிராஜா- அமீர் இனி இணைந்து செயல்படுவார்களா?

'' 'நீங்க என்ன கிராமப் படம் எடுத்துக் கிழிச்சீங்க... அந்தப் பையன் அமீர் எடுத்த 'பருத்தி வீரன்’ படத்தைப் பாருங்க. அதுதான் உண்மையான படம்’னு என் பொண்டாட்டி என்னைத் திட்டுறா. 'ஏன்டா, என்னைத் திட்டு வாங்கவைக்கிறே?’னு வெள்ளந்தியா சொல்லிச் சிரிச்சார் பாரதிராஜா. 'அமீருக்கும் வெளியில் கோபம் இருந்தாலும், பாரதிராஜாவைப் பார்த்ததுமே 'சார்... சார்’னு உருகிருவார். உண்மையில் பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் எந்த மனக் கசப்பும் இல்லை. இடையில் இருக்கும் சிலர் ரெண்டு பக்கமும் பத்தவெச்சுக் குளிர் காயப் பார்த்தாங்க. அது நடக்கலை’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள் நடுநிலையாளர்கள் சிலர்.

நல்லது நடந்தால் சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism