Published:Updated:

சினிமா விமர்சனம் : உதயன்

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : உதயன்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

'பழி ஓரிடம்; பாவம் ஓரிடம்’தான் 'உதயன்’.

அருள்நிதி, சென்னையில் தனியார் வங்கி ஊழியர். ப்ரணிதாவைத் துரத்தித் துரத்திக்காதலிக் கிறார். ப்ரணிதாவின் அப்பா கிருஷ்ணமூர்த்தி, தாதா சாய்ரவியின் ஆடிட்டர். அருள்நிதி - ப்ரணிதாவின் காதல் தெரிந்து, சாய் ரவியின் ஆட்கள் அருள்நிதியை 'எச்சரிக்கச்’ செல்கிறார்கள். அங்கே ''அண்ணே, ஏற்கெனவே நீங்க தூத்துக்குடியில கொன்ன ஆள்தான் இவன்'' என்று சாய் ரவியிடம் போனில் அலறுகிறார் அடியாள். இன்னொரு பக்கம், அருள்நிதியைத் தேடி வருகிறது ஆசிஷ் வித்யார்த்தி அண்டு கோ. உண்மை என்ன? 'உதயன்’ யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா விமர்சனம் : உதயன்

அடிதடி, அதிரடிப் படங்களுக்கான ஃபார்முலா கதையுடன் வந்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் சாப்ளின். முதல் பாதி காதல், இரண்டாம் பாதி ஆக்ஷன் என 50:50 காம்பினேஷன். படத்தின் முதல் பாதி காதல் காட்சிகள் யாவும் ஏற்கெனவே பார்த்தவை ரகம். என்றாலும், காமெடி டயலாக்ஸ், இளமைக் குறும்புகளும் அழகு. பேங்கில் பெர்சனல் லோனுக்கு ஷ்யூரிட்டி கொடுக்கும் ப்ரணிதா தவறான முகவரியைச் சொல்ல, அதைக் கேட்டபடி அருள்நிதி சரியான முகவரி எழுதிக் காட்டுவது... சுவாரஸ்யம்!

இரட்டை வேடத்தில் அருள்நிதி. வித்தியாசங்கள் எதுவும் இல்லை. அண்ணன் கலைந்த தலை. தம்பி சீவிய தலை. அவருக்கு பீடா, இவருக்கு விபூதி. சிட்டி குறும்பனுக்கு, அருள்நிதியின் அப்பாவி முகம் பொருத்தம். ஆனால், பட்டி முரடனாக அண்ணன் கேரக்டருக்கு... ம்ஹூம். வீ வான்ட் மோர் எமோஷன் பாஸ்!

அறிமுக ப்ரணிதா... அவ்வளவு அழகு. கடல் கண்கள் கரகாட்டம் ஆட... ஒரு ரவுண்ட் வருவீங்க!

சந்தானத்தின் காமெடிதான் முதல் பாதியின் 'முதல்’. பாரில், 'ஹாய் சந்துரு’, 'ஹாய் வசந்த்’ என்று சாக்லேட் விளம்பரத்தை இமிடேட் செய்வதும், 'கற்பழிச்சாக் கூட இவ்ளோ கத்த மாட்டாபோல... கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, இப்படிக் கத்துறாளே’ என்று டேட்டிங் கலாசாரத்தை டபாய்ப்பதுமாகத் திரையை அதிரவைக்கிறார்.

சினிமா விமர்சனம் : உதயன்

வில்லனாக வரும் சாய் ரவி, கமர்ஷியல் இலக்கணத்துக்கு ஏற்ப கண்கள் உருட்டுகிறார். கத்திக் கத்திப் பேசுகிறார். ஆசிஷ் வித்யார்த்தியும் 'உதயன்’ அருள்நிதியும் நல்லவங்களா, கெட்டவங்களாப்பா? பார்ப்பவர்களை எல்லாம் பரலோகத்துக்கு பார்சல் செய்கிறார்களே? வில்லனின் காருக்கு முன்னால், வழிவிடாமல் செல் பேசிக்கொண்டே பைக் ஓட்டும் 'உதயன்’ மேல்தானே தவறு? கோயில் கல்வெட்டில் அப்பா பெயர் போடவில்லை என்று பொதுமக்களை மிரட்டுவது என்ன ஹீரோயிஸம்?

விஜய் மில்டன் ஒளிப்பதிவில் சிட்டி, பட்டி இரண்டுமே ஜொலிஜொலிக்கிறது. மணிகாந்த் கத்ரி இசையில் 'இத்தனை யுகமாய்...’ பாடல் ஜிவ் மெலடி. 'எவன் இவன்...’ பாடல் கரகர மொறுமொறு வெஸ்டர்ன் மிக்ஸர்.  

படத்தில் வரும் எதிர்பாராத ட்விஸ்ட்கள், அழகு. ஆனால், பாதைதான்... ரொம்பப் பழசு!