Published:Updated:

சினிமா விமர்சனம் : ஈசன்

சினிமா விமர்சனம் : ஈசன்

சினிமா விமர்சனம் : ஈசன்

சினிமா விமர்சனம் : ஈசன்

Published:Updated:
##~##

இயக்குநர் சசிகுமாரின்இரண்டாவது இயக்கம் 'ஈசன்’!

'மதுரை!’ இமேஜை மாற்ற விரும்பியோ என்னவோ, மெட்ரோ சிட்டியின் இரவு வாழ்க்கையை, இளமையின் இருள் மர்மங்களைக் கதைக் களமாக்கி இருக்கிறார் சசி. டிஸ்கொதே இரவில் இருந்து கிளம்பும் ஒரு பெண்ணை காரில் துரத்துகிறது போதைக் கும்பல். விபத்துக்கு உள்ளாகி உயிர் துறக்கிறாள் அவள். போதைக் கும்பல், அமைச்சர் மகன்வைபவ்வின் நண்பர்கள் என்பதால், சுலபமாக வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்களின் அதிகார அநியாயங்களைத் தட்டிக் கேட்க முடியாமல் தவிக் கிறார் உதவி ஆணையர் சமுத்திரக்கனி. இப்படியான ஒரு 'நிகழ்காலநிதர்சன நிஜத்தைப்’ பிரதிபலிக்கும் சுவாரஸ்ய ஓப்பனிங்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகார மைய அமைச்சர், 'தீராத விளை(னை)யாட்டுப் பிள்ளை’ மகன்,ரியல் எஸ்டேட் தாதாயிஸம், அரசாங்க கமிஷன் கட்டிங் பேரம், வசதியான இளைஞர்களின் மோக வேகம்,மேல்தட்டுப் பெண்களின் 'ஜஸ்ட் லைக் தட்’ இயல்புகள் போன்ற வற்றைச் சூசகமாக உணர்த்திய வகையில் இயக்குநரின் துணிச்சல் புருவம் உயர்த்து கிறது. ஆனால், அந்த விவரணைகளிலேயே படம் அங்கங்கு தேங்கி, பலமான அஸ்தி வாரத்துக்குப் பிறகும் டாப் கியரில் எகிறா மல் தவிக்கிறது திரைக்கதை!  

சினிமா விமர்சனம் : ஈசன்

அல்லக்கை அருகில் நிற்க... பிசினஸ் பேச வந்தவர்கள் முன்னரே வேட்டி, சட்டையை, பட்டாபட்டி யைக் கழற்றி வீசும் அலட்சியத் தில் பளிச் கவனம் ஈர்க்கிறார் அமைச்சராக வரும் ஏ.எல்.அழகப்பன் (அறிமுகம்). ஒல்லி தேகம், கில்லிப் பேச்சு என வசீகரிக்கிறான் ரிஷி (அறிமுகம்). 'போய் பொறுக்கிக்கோங்க’ என்று அலட்சியமாகச் சிரிக்கும் காட்சியில் அசத்தல். வலியில் துடிக்கும்போதும், அப்பா கொடுக்கும் காபி சுவையின் அர்த்தம் புரிந்து குடிக்கும்போதும் அபிநயங்களிலேயே அபிநயாஉணர்த்தும் உணர்வுகள்... மென்சோகக் கவிதை! 'தெய்வமே’ ரிங்டோன், 'தெய்வமே’ சுமோ என்று வளைய வரும் நமோ நாராயணன்தான் படத்தின் காமெடி பஞ்சத்துக்கு அவ்வப்போது கானல் நீர் காட்டுகிறார்.  

சினிமா விமர்சனம் : ஈசன்

இரவு வெளிச்சத்தில் பெண் துரத்தப்படும்போது கார் கண்ணாடிகளில் மின்னும் நியான் மினுங்கல்கள் நம்முள்ளும் படபடப்பு கூட்டுவதுபோலப் படம் முழுக்க ஈர்க்கிறது எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு. 'மேயுறது வனமா இருந்தாலும், சேர்றது நம்ம இனமா இருக்கட்டும்!’ ஆங்காங்கே செம  சிக்ஸர் அடிக்கின்றன வசனங்கள். தோள் குலுக்கல்களிலேயே குத்தி எடுக்கிறது 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடலில் தினேஷின் நடன அசைவுகள்.

ஈசனின் பலவீனம்... நீளம். எளிதாக யூகிக்கவைக்கும் நீளமான க்ளைமாக்ஸ் உட்பட எங்கெங்கு காணினும் நீட்டி முழக்கல்!

முதலமைச்சரே அரண்டு மிரளும் அமைச்சர், 'கிரிக்கெட் அணி’ வைத்திருக்கும் பிசினஸ் தாதா... வார்த்தை பில்ட்-அப்கள்தானே தவிர, நச்சென்று ஒரு காட்சிகூட அவர்களின் 'அதிகாரத்தை’ உணர்த்துவதாக இல்லையே இயக்குநர் சார்? (அதிலும் அமைச்சர் ஒற்றை ஆளாக காரில் ஏறி அலுவலகம் செல்கிறார்!)  

அப்பா தனக்கென ஊற்றிவைத்த மதுவைக் குடிக்கும் மகள், அதிகாரத்துக்கு வளைந்துகொடுக்கும் அரசு இயந்திர நெளிவு சுளிவுகள், ஒற்றை நபரில் மையம்கொள்ளாமல், அவ்வப்போது தோள் மாறும் 'ஹீரோ’ பாத்திரம் என சுவாரஸ்யம் கோத்த வகையில் சசிகுமாரைப் பாராட்டலாம்.

சென்னை சிட்டி இளைஞர்களின் 'கேர்லஸ் கலாசார’ மனோபாவத்தைப் படித்து, கதை பிடித்த வகையில் மட்டும் ஈர்க்கிறான் ஈசன்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism