ஆர்யா ரகசியம்
##~## |
2011-12ம் வருட விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள், முதல் பேட்டி எடுத்த பிரபலம்... ஆர்யா!
'' 'ஜம்ஷத்’ங்ற உங்க நிஜப் பேரே நல்லாத்தானே இருக்கு. ஏன் ஆர்யா?''
''நல்ல பேர்தான். ஆனா, 'உள்ளம் கேட்குமே’ படத் துல நடிச்சிட்டு இருந்தப்ப, நான் என் பேரை சினிமா ஆட்களிடம் சொல்றப்ப, 'அம்ஷத்’னு புரிஞ்சுப்பாங்க. சிலர் 'ஷர்பத்’னு சொல்லிக் காலி பண்ணாங்க. அதான் ஜீவா சார் ஜம்ஷத்தை 'ஆர்யா’ ஆக்கினார்!''
''உங்க கல்யாண டார்கெட்?''
''டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி ஏவுகணை தான் அனுப்ப முடியும். கல்யாணம் பண்ண முடியாது. வயசாயிடுச்சுன்னோ, வீட்ல கட்டாயப்படுத்துறாங்கன்னோ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அந்த வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யாரையாச்சும் மனசுக்குப் பிடிச்சு, இவங்ககூட வாழ்நாள் முழுக்கப் பேசலாம், சந்தோஷமா இருக்கலாம்னு தோணினா மட்டும் கல்யாணம் பண்ணலாம்!''

'' 'அவன்-இவன்’ விஷால், 'தெய்வத் திருமகள்’ விக்ரம்... தேசிய விருது யாருக்கு?''
''அதை ஜூரிக்கள்தானே சொல்லணும். ஆனா, உண்மையில் விக்ரமின் நடிப்பு ஃபென்டாஸ்டிக். நான்கூட கண்ணாடி முன்னாடி நின்னு அவரை மாதிரியே கையைக் காலை ஆட்டி ஆட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... சரியா வரலை. அது அவருக்குத்தான் சரி. விக்ரம், விஷால் ரெண்டு பேருமே எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். யாருக்கு விருது கிடைச்சாலும், எனக்குச் சந்தோஷம்தான்!''

''ஏன் டபுள் ஹீரோ சப்ஜெக்டா நடிக்கிறீங்க?''
''பாலிவுட்ல இப்போ அதுதாங்க ட்ரெண்ட். அங்கெல்லாம் நாலஞ்சு ஹீரோக்கள்கூட சேர்ந்து நடிக்கிறாங்க. சினிமா மாறிட்டே இருக்கு. இப்போ கேமரா பார்த்து பஞ்ச் டயலாக் பேசினா... தியேட்டர்லயே 'டேய்... போதும்டா’னு குரல் வருது. மாற்றங்களுக்கு ஏற்ப நாம மாறணும். அவ்வளவுதான்!''
''உண்மையைச் சொல்லுங்க... அமலா பால்கிட்ட செல் நம்பர் வாங்கிட்டீங்கதானே?''
''நான் ஏன் வாங்கணும்? அவங்களே வந்து நம்பர் கொடுத்தாங்க!''
''தமிழில் எந்த ஹீரோவின் நடிப்பு உங்களை இம்ப்ரெஸ் பண்ணிஇருக்கு?''
''இப்போ, 'ஆடுகளம்’ தனுஷ், 'அவன்- இவன்’ விஷால், 'தெய்வத் திருமகள்’ விக்ரம்!''
''யாருக்கு நன்றி சொல்ல நினைக்கிறீங்க... யாருக்கு ஸாரி?''
''ஸாரி நிறைய பேருக்குச் சொல்லணும்! நன்றி... நிச்சயம் என் அம்மா - அப்பாவுக்குத்தான். அவங்க எனக்குக் கொடுத்த சுதந்திரத்துக்கு எல்லையே இல்லை. ஸ்போர்ட்ஸ்மேன், கம்ப்யூட்டர் இன்ஜினீயர், மாடலிங், சினிமானு நான் தாவிக்கிட்டே இருந்தப்பலாம், என்னை ஒரு வார்த்தைகூடக் கேட்கலை. கிடைச்ச நல்ல வேலையை விட்டுட்டு, மூணு வருஷம் சும்மா உக்காந்து நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருந்தப்பவும், என்மேல நம்பிக்கைவெச்சுப் பொறுமையா இருந்தாங்க!''

''பொண்ணுங்களை கரெக்ட் பண்ணத் தெரியுமா?''
''கரெக்ட் பண்ணத் தெரியுமாங்கறது முக்கியம் இல்லை. நம்ம கரெக்ட் பண்றது மத்தவங்களுக்குத் தெரியாம கரெட் பண்ணணும். அதுதான் முக்கியம்!''
''உங்களை கரெக்ட் பண்றது எப்படி?''
''என்னை கரெக்ட் பண்றது ரொம்ப ஈஸிங்க. பக்கத்துல வந்து நின்னு, சின்னதா ஒரு 'ஹாய்’ சொன்னாலே, நான் கரெக்ட் ஆயிருவேன்!''