ஆ.அலெக்ஸ்பாண்டியன், நா.சிபிச்சக்கரவர்த்தி
அடுத்தடுத்த மாதங்களில் அகில உலக பரபரப்பு ஏற்படுத்த இருக்கும் பிரமாண்ட ஹாலிவுட் சினிமாக்களின் டிரெய்லர் கட்ஸ் இங்கே...

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புத்தகம் 'லாங் வாக் டு ஃப்ரீடம்’. அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு, அதே பெயரில் உருவாகும் சினிமா இது! இந்தப் படத்துக்கான ஐடியா, உழைப்பு அனைத்துமே இந்திய-ஆப்பிரிக்கரான ஆனந்த் சிங்குடையது. மண்டேலாவின் புகழ்பாடும் இந்தப் படத்தை, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் விரும்ப

மாட்டார்கள் என ஆப்பிரிக்க திரைத் துறை நினைக்க, திகீர் ட்விஸ்ட் அடித்தது நிலவரம். இந்தப் படத்தை அமெரிக்கக் குழந்தைகளுக்கென 'ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்’ செய்ய முடிவெடுத்து இருக்கிறது அமெரிக்கா. பிரான்ஸில் முதன்முறையாக ஆப்பிரிக்க சினிமா ஒன்றுக்கு 60 தியேட்டர்களை ஒதுக்கி இருக்கிறார்கள். 'படத்தின் கதைக்கரு, காட்சிகள் என அனைத்தும் மண்டேலாவிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டவை’ என்கிறார்கள் படக்குழுவினர். 'அப்படியும் அது எப்படி நடந்தது?’ என ஆச்சர்யப்படுகிறார்கள் மண்டேலா அபிமானிகள். காரணம், டிரெய்லரில் காட்டப்படும் மண்டேலா - வின்னீ மண்டேலா தம்பதிக்கு இடையிலான காதல் வசனங்களும், நெருக்கமான காட்சிகளும்தான். இப்போதே உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் இந்தப் படம் வரிசையாக விருதுகளைக் குவிக்க, 'ஆஸ்கர் கன்ஃபார்ம்’ என்று துள்ளிக் குதிக்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள்!

ஹாலிவுட் சினிமா ப்ரியர்கள், 'கேப்டன் அமெரிக்கா’ கேரக்டருக்கு சரமாரி லைக்கிடுவார்கள். பல்லாண்டு காலமாக அமெரிக்கர்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றப் போராடும் 'சூப்பர் ஹீரோ’தான் கேப்டன் அமெரிக்கா. 1941-ல் காமிக்ஸ் கதைகளில், ஹிட்லரின் குணாதிசயங்கள் கொண்ட எதிரியை ஒற்றை ஆளாக எதிர்த்துப் போராடி வென்ற மாவீரன் இவன். சினிமா வடிவிலும், லட்சத்தைக் கொட்டினால் கோடிகளைத் திருப்பிக் கொடுத்தான் அமெரிக்க கேப்டன்.

கடந்த ஆண்டு 'அவெஞ்சர்ஸ்’ படத்தில் அயர்ன் மேன், ஹல்க் போன்ற சூப்பர் ஹீரோக்களுடன் கூட்டணி போட்டு எதிரிகளைப் பந்தாடினார் கேப்டன். அந்தக் காய்ச்சலே இன்னும் விலகாத நிலையில், 'கேப்டன் அமெரிக்கா’வின் மூன்றாவது திரை சாகசமாக, 'கேப்டன் அமெரிக்கா : தி வின்டர் சோல்ஜர்’ தயாராகிவிட்டது. 'அதே ஹீரோ, அதே சவால், அதே சண்டை... இதுல என்னப்பா ஸ்பெஷல்?’ என்று கேட்பவர்களும் இருப்பார்கள்தானே? அவர்களுக்காகவே படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சனை நடிக்க வைத்திருக்கிறார்கள். உலகின் செக்ஸி பெண்ணாக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஸ்கார்லெட், கேப்டனுக்கு உதவும் (என்ன உதவிப்பா?) ஏஜென்ட்டாக நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் ஸ்கார்லெட் விவாகரத்து ஆனவர். கேப்டனாக நடிக்கும் கிரிஸ் இவான்ஸ் ஆணழகன். இருவருக்கும் படப்பிடிப்பில் நிஜமாகவே பற்றிக்கொண்டுவிட்டதாம். படத்தின் டிரெய்லரிலும் 'ஏ’ க்ளாஸ் காட்சிகள் இடம்பெற, இந்தமுறை கேப்டனின் சாகசங்களுடன் ரொமான்ஸையும் ரசிக்கக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

'ப்ளே ஸ்டேஷன்’, 'எக்ஸ் பாக்ஸ் 360’ என வீடியோ கேம் ரசிகர்களை ஈர்த்த சயின்ஸ், ஹாரர், த்ரில்லர் விளையாட்டு... ரெசிடென்ட் ஈவில். 'வீடியோ கேமில் இவ்வளவு கல்லா கட்டலாமா?’ என்று ஆச்சர்யப்படும் வகையில் மில்லியன் டாலர்களைக் கொட்டியது இந்த விளையாட்டு. அதைத் தழுவித் தயாரிக்கப்பட்ட 'ரெசிடென்ட் ஈவில்’ பட வரிசையும் வசூலைக் குவித்தது. சூப்பர் ஹீரோக்களுக்கு சவால்விடும் சூப்பர் ஹீரோயின் கதையின் ஐந்து பாகங்களிலும் 'ஆலிஸ்’ வேடத்தில் நடித்தது மில்லா ஜோவோவிச். முந்தைய ஐந்து பாகங்களையும் எழுதி தயாரித்த, ஆண்டர்சனுக்கும் மில்லாவுக்கும் நான்காம் பாகத் தயாரிப்பின்போது காதல் பலூன்கள் பறந்திருக்கின்றன. இப்போது தங்கள் குட்டிப் பாப்பாவுடன் ஆறாம் பாகத்தை உருவாக்குகிறார்கள் கணவனும் மனைவியும். படத்தின் கதை? கடந்த ஐந்து பாகங்களில் வந்த அதே கதைதான்! அம்பர்லா நிறுவனம் தயாரித்த கொடிய டி-வைரஸ் பாதித்த ஸோம்பிக்கள் உலகம் முழுக்கப் பரவுகின்றன. அதை தனி ஆளாக எதிர்த்துப் போராடுவார் ஆலிஸ். ஆறாம் பாகக் கதை ஏற்கெனவே வீடியோ கேம் வடிவில் வெளியாகி ஹிட் அடித்துவிட்டது. அத்தோடு இந்தப் பாகம்தான் ரெசிடென்ட் ஈவில் வரிசையில் கடைசி என்றும் இயக்குநர் சொல்லிவிட்டார். எதிர்பார்ப்பு ஏரோப்ளேன் றெக்கைக் கட்டிப் பறக்கிறது!

2004-ல் ஜப்பானில் வெளிவந்த 'All You Need Is Kill’ என்ற நாவல் அதிரிபுதிரி ஹிட். அந்த நாவல் வெளியான சில மாதங்களிலேயே அதன் உரிமையை மூன்று மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். அந்த நாவலின் கதைதான் 'எட்ஜ் ஆஃப் டுமாரோ’ படம். ஆனால், பொருத்தமான இயக்குநர், நடிகர்கள் சிக்காததால், கணினியிலேயே தூங்கிக்கொண்டிருந்தது கதை. நீண்ட இடைவெளிக்குப் பின், தனி அணி அமைத்து நாவலின் சில பகுதிகளை மட்டும் மாற்றி திரைக்கதையை வடிவமைத்தார்கள். பிரமாண்ட பட்ஜெட், அட்டகாச

திரைக்கதைக்கு ஹீரோவாக நடிக்க முதலில் பிராட் பிட்டிடம் கேட்டார்கள். ஆனால், 'இந்தக் கதையில் எனக்கு ஸ்கோப் இல்லை. திரைக்கதையை கொஞ்சம் மாற்றினால் நடிப்பேன்’ என்று சொல்ல, 'உங்க இஷ்டத்துக்குலாம் கதையை மாத்த முடியாது’ என அவரை விலக்கிவிட்டு, டாம் க்ரூஸைப் பிடித்துப் போட்டுவிட்டார்கள். கிளாமர் கில்லி எமிலி ப்ளன்ட்தான் நாயகி. பரபர ஆக்ஷன் உஷ்ணங்களுக்கு இடையே, டாம் க்ரூஸ்-எமிலி இடையிலான ரொமான்ஸ், செம சூடு பறக்கும் என்கிறார்கள். சரி, இத்தனை பில்டப்புகளுடன் தயாராகி இருக்கும் படத்தின் கதை என்ன?
பூமியை அழிக்கவரும் வேற்றுக் கிரகவாசிகளிடம் இருந்து அமெரிக்க ராணுவ வீரர் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் கதையாம்! பாஸ், டாம் க்ரூஸை வெச்சு காமெடிப் பண்றீங்களா?

தமிழ் சேட்டிலைட் சேனல்கள் வரை 'ரிப்பீட் ஹிட்’ அடித்த '300’ படத்தின் இரண்டாம் பாகம் '300 : ரைஸ் ஆஃப் அன் எம்பயர்’. முதல் பாகத்தில் 300 போர் வீரர்கள் போருக்குப் புறப்படும்போது, விளையாடிக் கொண்டிருந்த ஹீரோவின் குழந்தைதான் இரண்டாம் பாகத்தில் ஹீரோ. அப்பாவைக் கொன்ற ஏழு அடி வில்லனை தொம்சமாக்க, அப்பாவைப் போலவே 300 வீரர்களுடன் புறப்படுகிறான் மகன். 'அட... அந்தப் படத்தோட ஜெராக்ஸ்தானா?’ என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். இந்த முறை 300 போர் வீரர்களில் ஒருவராக வருகிறார் ஹாலிவுட் ஹனி ஈவா க்ரீன். 'காசினோ ராயல்’ படத்தில் சட்சட்டென ஆடைகளைக் களைந்து ஜேம்ஸ்பாண்டை சொக்கவைத்த அந்த அழகி, இப்போது வாள் பிடித்து எதிரிகளை வேட்டையாட இருக்கிறார். இரண்டாம் பாகத்தின் இயக்குநர் நோம் முரோ இதற்குமுன் இயக்கிய ஒரு படம் வெளியாகவே இல்லை. இரண்டாவதாக இயக்கிய படத்தின் ரிசல்ட்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அதனால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்த கொலைவெறியுடன் வேலை செய்திருக்கிறாராம்!

ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் டிவைன் ஜான்சன் (தி ராக்) போர் வீரனாக நடிக்கும் கி.மு. காலத்துக் காவியம் 'ஹெர்குலிஸ் : தி த்ரேசியன் வார்ஸ்’. கிரேக்கர்கள் 'இடியின் கடவுள்’ என வணங்கும் சீயஸ் கடவுளின் மகன்தான் ஹெர்குலிஸ். ஆனால், அந்த சூப்பர் கடவுள், அடையாளம் எதுவும் இல்லாமல் த்ரேசியஸ் மன்னனிடம் அடிமையாக வேலை செய்யும் ஹெர்குலிஸின் கதை இது. நியாயத்தை நிலைநாட்ட, அடிமைகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற அரசரையே எதிர்த்து

வெற்றிபெறும் மாமூல் ஹீரோயிஸ கதை. ஆனால், படத்தில் கிராஃபிக்ஸ் இல்லாமல் ரியல் ஆக்ஷன் இருக்க வேண்டுமென்று பளபள செட்கள் அமைத்தும், தொடர்ந்து 16 மணி நேரம் சண்டைக் காட்சிகளைப் படம் பிடித்தும் மசாலா சேர்த்திருக்கிறார்கள். 'ஒரே ஒரு காட்சிக்காக 12 நாட்கள் உழைத்தோம்’ என்றெல்லாம் ஜான்சனும் தன் பங்குக்கு சுவாரஸ்ய ட்வீட்டைத் தட்டுகிறார். இந்த இதிகாசக் கதைக்கு 'திறந்த மனம்’ கொண்ட ஹீரோயின் அவசியம் என்று தேடித் தேடி, ரஷ்ய அழகி இரினாவை ஹெர்குலிஸின் காதல் மனைவியாக நடிக்க வைத்திருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ரஷ்யாவிலேயே செம கில்மா பார்ட்டியான இரினா, படப்பிடிப்பு இடைவேளைகளில் ஜான்சனுடன் கிச்சுகிச்சு மூட்டி விளையாடி வருகிறாராம்!

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை ப்ளஸ் நீண்ட ஓய்வுக்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி நடிக்கும் படம் மெலஃபிசென்ட். 'இனி பழைய மாதிரி சண்டை, கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டார்’ என்ற பேச்சை அடித்து நொறுக்கும் விதமாக முன்னைக்காட்டிலும் அதிரடியாகப் பறந்து பறந்து ஆக்ஷன் செய்திருக்கிறாராம் ஏஞ்சலினா. 1959-ம் வருடம் நடக்கும் கதையில் ஏஞ்சலினாவுக்கு இளவரசி வேடம். ஒரு காட்டுப் பகுதியில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் உருவாகும் திடீர் வில்லன்களை, 'ஸ்லீப்பிங் பியூட்டி’ ஏஞ்சலினா அழித்து மக்களைக் காப்பாற்றும் கதை. காடு, மேடு என மனிதர்கள் அவ்வளவாக நடமாடாத இடங்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டனர்.
38 வயது முதிர்ச்சியுடன் இருந்த ஏஞ்சலினாவை ஏகப்பட்ட மேக்கப், தொழில்நுட்பங்கள் மூலம் திரையில் அழகு இளவரசியாக மாற்றி இருக்கிறார்கள். தன்னை ஸ்க்ரீனில் பார்த்த ஏஞ்சலினாவுக்கே ஆச்சர்யம் தாங்கவில்லையாம். ஜேம்ஸ் கேமரானின் சிஷ்யர் ராபர்ட், இந்தப் படத்தின் இயக்குநர். இவர் 'அவதார்’ படத்தின் கலை இயக்கத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர்.

ஹாலிவுட்டின் எந்திரனே, ரோபோகாப். 1987-ம் ஆண்டு டி.வி. சீரியல்கள், வீடியோ கேம்கள், காமிக் புத்தகங்கள் என, பணம் ப்ளஸ் புகழ் மழையில் நனைந்த ரோபோகாப் சினிமாவின் நான்காவது பாகம் 2028-ல் நடக்கிறது. முந்தைய பாகங்களில், ரோபோகாப்புக்கு அமெரிக்க ராணுவம் படா அசைன்மென்ட்டுகளை வழங்கும். ஆனால், இந்த நான்காம் பாகத்தில் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் ரோபோவை மாற்றியமைக்கத் திட்டமிடுகிறார்கள் விஞ்ஞானிகள். (இதைத்தான் 'எந்திரன்’லயே பார்த்துட்டோமே!) அந்த சமயம் டெட்ராய்ட் நகரின் சூப்பர் போலீஸ் அலெக்ஸ்

மர்ஃபி, ஒரு விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். கொள்ளை, கொலை, கடத்தல்... என ஊரில் எது நடந்தாலும் அலெக்ஸிடம் தகவல் சென்றுவிட்டால், குற்றவாளி நடுநடுங்கிவிடுவான். அந்த அலெக்ஸின் உடலில் ரோபோவைப் புகுத்தி, அதிரடி அத்தியாயத்தைத் தொடக்கிவைக்கிறார்கள்.
1987-ம் ஆண்டிலேயே ஒன்றரை கோடிக்கு எடுக்கப்பட்டு 50 கோடிகள் வசூலித்த படம் 'ரோபோகாப்’. இப்போதைய நவீன டெக்னிக்கல் யுக்திகளும், ஐமேக்ஸ் தொழில்நுட்பமும் ரோபோவின் ஆக்ஷன் அதிரடிகளை உச்சக்கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

2011-ல் வெளியான 'ரைஸ் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ முதல் பாகத்தின் தொடர்ச்சிதான், 'டான் ஆஃப் தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’. அல்ஸீமர் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை சிம்பன்ஸி குரங்கிடம் ஒரு விஞ்ஞானி சோதனை முயற்சியாக செலுத்த, அந்த மருந்தால் சிம்பன்ஸி, மனிதனின் மதியூகத் திறனை வளர்த்துக்கொள்கிறது. தன் இனத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மனிதனை எதிர்த்துக் கடந்த பாகத்தில் போராட ஆரம்பித்த சீஸர்தான் இரண்டாம் பாகத்தின் ஹீரோ. சீஸர் தன் மனைவி, குழந்தை, நண்பர்களைக் காக்க மனிதர்களோடு 'வாழ்வா... சாவா’ யுத்தத்தில் இறங்குகிறது. கோச்சடையான் படம் உருவாகும் தொழில்நுட்பத்தின் மிக நவீன வெர்ஷனைக்கொண்டு உருவாகிறது படம். மனிதர்களை நடிக்க வைத்தே திரையில் நூற்றுக்கணக்கான சிம்பன்ஸிக்களை உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பாகம் வசூலித்த 48 கோடி டாலர்களை வசூலில் முந்துவதே இந்தப் படத்தின் நோக்கமாம்!
