Published:Updated:

ஸ்போர்ட்ஸ் டே ஸ்பார்ட்டன்ஸ்!

சந்தானத்தின் காமெடி ரகசியம்ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

ஸ்போர்ட்ஸ் டே ஸ்பார்ட்டன்ஸ்!

சந்தானத்தின் காமெடி ரகசியம்ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

 ''ஸ்பார்ட்டன்ஸ்... உங்கள் தொழில் என்ன?'' - '300’ பட ஹீரோ எஃபெக்ட்டில் சந்தானம் கேட்க, ஆளாளுக்கு பேனாவைத் தூக்கிக் காட்டி ''காமெடி பன்ச் எழுதுவது!'' என்று உச்ச டெசிபல் உற்சாகத்துடன் உறுமுகிறார்கள்!

வார்த்தைக்கு வார்த்தை ரசிகர்களை சிரிக்கவைக்கும் சந்தானம் காமெடியை கருவாக்கி உருவாக்குவது இந்த ஏழு பேர் கொண்ட குழுதான். சினிமா வட்டாரத்தில் 'சந்தானம் அண்ட் கோ’ ரொம்பப் பிரபலம். 'அப்பாடக்கர்’, 'பாவ் பக்ரி’ என்று வெரைட்டி பெயர்கள் பிடிப்பதில் இருந்து, 'பேங்க்ல கேஷியரா இருந்த நான், அப்டிக்கா லாக்கரைப் பூட்டிட்டு இப்டிக்கா ஜோக்கர் ஆகிட்டேன்’ என காமெடி பன்ச் உருவாக்குவது வரை சந்தானத்தின் காமெடி கச்சேரிக்கு சரக்கும் முறுக்கும் இந்த டீம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இவர் குணா... சுருக்கமா குணசேகரன். 'தாலுகா ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன்’னு சொல்லி எனக்கு அறிமுகம் ஆனார். எப்பவாது இன்கம் சர்ட்டிஃபிகேட் வாங்க உதவியா இருப்பாப்லனு நானும் நட்பை ஏத்துக்கிட்டேன். ஆனா, ஒருநாள் தாலுகா ஆபீஸ் போனப்பதான் தெரிஞ்சது, அங்கே இவரு செகண்ட்ஹேண்ட்ல தார் டின் விக்கிற வியாபாரினு. மத்தவங்கள்லாம் வாய்லயே வடை சுடுவாங்க. ஆனா, நம்ம குணா வடை சுட்டு கடையே நடத்துவாரு!'' என்றபடி சந்தானம், குணாவை அணைத்துக் கொள்ள, ''ஏம்மா நீ இன்ட்ரோ கொடுக்கிறியா... இல்லை இன்சல்ட் பண்றியா? சீன்ல பேசுற மாதிரியே நீயே எல்லாத்தையும் பேசிடு!'' என்று சதாய்க்கிறார் குணா.

ஸ்போர்ட்ஸ் டே ஸ்பார்ட்டன்ஸ்!

''என்னை முதன்முதலா விஜய் டி.வி-க்கு அறிமுகப்படுத்திவெச்ச பாலாஜி அண்ணன்தான் காமெடியில் பெரிய தலக்கட்டு. உதய் அண்ணன் ஏகப்பட்ட ஸ்டேஜ் பார்த்திருக்கார். ஸ்டேஜ்னு சொன்னதும் ஏதோ சென்ட்ரிங் வேலை பார்க்கிறார்னு நினைச்சிடாதீங்க. 'லொள்ளு சபா’வுக்கு முன்னாடி வந்த 'சகல ரகள’யில் இருந்தே என்கூட இருக்கார். நான் குழந்தையா இருக்கும்போது முருகனும் குழந்தையா இருந்ததால, ரெண்டு பேரும் சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட்ஸ். 'சுனாமி’ சுந்தர் என் சொந்தக்காரப் பையன். விஜய் டி.வி. செட்ல என்கிட்ட முதல்ல வந்து சேர்ந்த ஆள் சேதுராமன். எங்க கூட்டத்துலயே அதிகம் படிச்சவரு ஆனந்த். பி.இ.

நாங்க ஜாலியாப் பேசுற விஷயங்கள் சினிமாவில் செல்ஃப் எடுக்கிறதுக்குக் காரணம், இவங்க எல்லாரும் என் மீட்டரை கரெக்டாத் தெரிஞ்சுவெச்சிருக்கிற ஆட்டோ டிரைவர்ஸ். விஜய் டி.வி-யில் இருக்கும்போது உருவானது இந்த டீம். சினிமாவுக்கு வந்த பிறகும் தொடருது. எப்ப எங்களுக்கே போரடிக்குதோ, அப்ப வேற வேலையைப் பார்க்கப் போயிருவோம்!'' என்று சந்தானம் சொல்ல, தலையசைக்கிறார்கள் ஸ்பார்ட்டன்ஸ்!

''நாங்க அடிக்கடி ரெஃப்ரெஷ் பண்ணிக்க பாண்டிச் சேரி போயிடுவோம். 'பாண்டிச்சேரி’ன்னதும், ஏதோ சல்பேட்டா சமாச்சாரம்னு நினைச்சுடாதீங்க. சும்மா ரிலாக்ஸா அரட்டையடிச்சுப் பேசி சிரிச்சு பன்ச் பிடிப்போம். நினைச்சோம்னா, திடீர்னு கிளம்பிடுவோம். அங்கே போன பிறகு குருஜியை ரொம்ப மிஸ் பண்ணி, உடனே கிளம்பி வரச் சொல்லுவோம். அவர், என் சொந்த ஊரான சென்னை பொழிச்சலூர்க்காரர். அப்பப்போ வேலைக்காக ஆந்திராவுக்கு அப்பீட் ஆயிடுவார். நாங்க கூப்பிடும்போது ராஜமுந்திரியில் இருப்பார்.

ராஜமுந்திரி டு ஹைதராபாத், ஹைதராபாத் டு சென்னை, சென்னை டு பாண்டிச்சேரினு அவ்வளவு தூரத்தையும் அரிசி லாரி, மண் லாரினு ஏறியிறங்கி கரடுமுரடா டிராவல் பண்ணி கன் மாதிரி வந்து நிப்பார். உண்மையிலேயே குருஜி, ஒரு மெடிக்கல் மிராக்கிள்!'' என்று சந்தானம் சொல்ல, ''அதுக்கு அவர் ராஜமுந்திரிலயே 500 ரூபாய் செலவு பண்ணி திருப்தியா சாப்பிட்டுத் தூங்கியிருக்கலாம்!'' என்று முணுமுணுத்த குணாவை சந்தானம் முறைக்க, ''நான் சாப்பாட்டைச் சொன்னேம்பா!'' என்று எஸ்கேப் ஆகிறார் குணா.

ஸ்போர்ட்ஸ் டே ஸ்பார்ட்டன்ஸ்!

''எங்க டீம்ல விநோதமான கேரக்டர் இருக்கு. அது டெய்லி ஃபேஸ்புக்ல ஒரு ரைமிங் பன்ச் போடும். இன்னைக்கு கோட்டா என்ன நைனா?'' என்று உதய்யிடம் கேட்கிறார் சந்தானம்.

'' 'சோத்துல தயிர் ஊத்தினா, தயிர்ச் சோறு. சாம்பார் ஊத்தினா, சாம்பார் சோறு, சாப்பிட்டு மிச்சம் வெச்சா... எச்சச் சோறு’னு போட்டேன்பா. அதுக்கு ஒருத்தன், 'ஓசில சாப்பிட்டா தண்டச்சோறு’னு போட்டிருக்கான்பா. ஏன், நம்ம ஃபீலிங் நல்லா இல்லையா?'' என்று அப்பாவியாக் கேட்ட உதயிடம், ''நல்லாப் பாரு, அந்த தண்டச்சோறு கமென்ட் போட்டது நம்ம டீம் ஆளாத்தான் இருக்கும்!'' என்ற சந்தானம், ''ஸ்கூல்ல என்னைக்காவது ஒரு நாள் எல்லாப் பசங்களும் ஜாலியா இருப்பானுங்க. என்னன்னு கேட்டா, 'ஸ்போர்ட்ஸ் டே’னு சொல்லுவானுங்க. அந்த மாதிரி நம்ம ஆபீஸ்லயும் அப்பப்போ ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடுவாங்க. அப்படின்னா வேலை செய்யாம ஓபி அடிக்குறதுனு அர்த்தம். சமயத்துல இவனுங்க காமெடி ஸ்கிரிப்ட் எழுதுறேன்னு ஹோட்டல்ல ரூம் போட்டு 'ஸ்போர்ட்ஸ் டே’ கொண்டாடின சம்பவங்களும் உண்டு. இப்படித்தான் ஊட்டியில் ஒரு படத்தோட ஷூட்டிங். நைட் ஃபுல்லா உட்கார்ந்து எழுதினானுங்க. பசங்க பின்னிருப்பாங்கனு நினைச்சு ஸ்கிரிப்ட்டைப் படிச்சா, 'கம்முனு போகாம கும்முனா போவான்’, 'என்ன சல்மான்கான்... கமான்’, 'மீன் எப்படி இருந்துச்சு?’னு ஒரு கேரக்டர் கேட்டதும், 'இப்படி இருந்துச்சு’னு உதட்டை உள்பக்கமா குவிச்சுக் காட்டுறதுனு அதகளம் பண்ணிவெச்சிருந்தானுங்க. அந்த ஸ்கிரிப்ட்டை மட்டும் அப்பீல் பண்ணிருந்தா, அதோட பொட்டி படுக்கையைக் கட்டிட்டு கிளம்பிருக்க வேண்டியதுதான். அப்புறம் ஒரு நாள் பிரேக் விட்டு பக்காவா நல்ல ஸ்கிரிப்ட் எழுதினோம். ஆனா, வேலைனு வந்துட்டா எல்லாம் வெள்ளைக்காரங்கதான். ஒரு தபா ஜாலி ட்ரிப் போயிட்டு வந்தா, அஞ்சு படத்துக்கு தேவையான ஸ்கிரிப்ட் கிடைச்சுடும்.

'கலாசல், கல்பாஜி, அப்பாடக்கர், தவ்லத்’னு சில லோக்கல் வார்த்தைகளை டிரேட் மார்க் ஆக்கினது எங்க டீம்தான். நாங்க ஆரம்பிச்சு வெச்ச அந்த டிரெண்டை இப்ப எல்லாரும் கைப்பற்றிட்டாங்க. அதனால நாங்க அடுத்த கட்டத்துக்குப் போக அப்டேட் ஆகிட்டு இருக்கோம். காமெடியில் இன்னும் இயல்பான நிறையப் புதுப்புது விஷயங்களை ட்ரை பண்ணிட்டே இருக்கணும். அதுக்கு என்னோட ஸ்பார்ட்டன்ஸ் எப்பவும் சப்போர்ட்டா இருப்பாங்க!'' என்று சந்தானம் நெகிழ்ச்சியாக முடிக்க, அப்போது திடீரென உள்ளே நுழைந்த குருஜி கண்கள் விரியக் கேட்கிறார்...

''என்னப்பா இன்னைக்கு என்ன ஸ்போர்ட்ஸ் டேவா?''