என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என் மூலம் வருகிறது இசை!

கி.கார்த்திகேயன்

##~##

The Spirit of Music என்ற அந்த ஆங்கிலப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற வாசகம் பளிச்சிடுகிறது. ரஹ்மானின் சர்வதேச ரசிகர்களுக்கு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அவுட்லைன் கொடுக்கும் நோக்கத்துடன் வெளியான அந்த ஆங்கிலப் புத்தகத்தில் தமிழுக்கு முதல் மரியாதை!

நஸ்ரீன் முன்னி கபீர் என்ற குறும்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளருடன் கடந்த நான்கு வருடங்க ளாக ரஹ்மான் அவ்வப்போது உரையாற்றியதன் தொகுப்பே இந்தப் புத்தகம். 'ரோஜா’ முதல் 'ஆஸ்கர்’ வரையிலான பல்வேறு தருணங்களில் ரஹ்மானின் மன நிலையைப் பிரதிபலிக்கிறது புத்தகம். சில பகுதிகள் இங்கே...    

என் மூலம் வருகிறது இசை!

''இந்திய இசையமைப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்ன?''

''எனக்குப் புரிந்த வரையில் இந்திய இசையமைப்பாளர் ஒருவரே ஜான் வில்லியம்ஸ், மைக்கேல் ஜாக்சன் மற்றும் தான்சேன் ஆகியோரின் கலவையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்திய சினிமாவைப் பற்றிப் புரிந்தவர் களுக்கு அதன் தன்மையைப் பற்றித் தெரியும். ஒரு படம் முழுவதும் ஒரே மூடில் இருக்காது. சென்டிமென்ட்டில் துவங்கி ஆக்ஷனுக்கு இடம்பெயர்ந்து, காமெடி கலகலப்பில் பயணித்து அதிரடி யாக முடிய வேண்டும். இவற்றின் பின்னணி யில் மெல்லிய காதல் இழையும் தொடர்ந்து வர வேண்டும். ஒரு காதல் கதையில் ஹிட் பாடல்கள் இடம் பெற வேண்டும். அதே சமயம் அந்தப் படத்தின் பின்னணி இசை யில் சிம்பொனி சாயலில் ஆர்கெஸ்ட்ரா ஒலி இடம் பெற வேண்டும். இந்திய சினிமாவின் விதவிதமான மூடுக்கு ஏற்ற பல்வேறு இசைச் சரங்களை ஒரே படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு ஒருங்கி ணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம்!''

''ஒரு படம் அல்லது ஆல்பத்தின் தேவை கருதி நீங்கள் இசையமைப்பதுபோலத் தெரியவில்லை. இசையமைப்பதால் உண்டாகும் சுகத்துக்காகவே நீங்கள் இசையமைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... உண்மைதானே?''

''எனக்கே எனக்கென நான் இசையமைக்கும்போது எந்தவிதமான பிரஷரையும் நான் எதிர்கொள்வது இல்லை. சமயங்களில் இசை என்னிடம் இருந்து வருவதாக உணர்வது இல்லை நான். அது என் மூலம் வருகிறது. குறிப்பிட்ட ஒரு படம் அல்லது கதாபாத்திரத்தின் தேவைக்கு ஏற்ப இசை அமைக்கச் சொல்லி, என் தலையில் துப்பாக்கியைக் குறிவைத்து, 'ம்... ஒரு ஹிட் ஸாங் போடு... ரொம்ப சூப்பரா இருக்கணும்!’ என்று யாரும் மிரட்டாதபோது, நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன். அப்படி யான சமயங்களில், இயற்கை, ஒரு நிலப் பரப்பு அல்லது சின்ன காதல் கவிதை மூலம்கூட இசைக்கான தீண்டல் உருவா கும். கற்பனைகளுக்கு எந்தவிதக் கட்டுப் பாடுகளும் இல்லாமல் உருவாகும் இசை யில், ஒரு தெய்வீகத் தன்மை ஒளிந்துஇருக்கும்!''

''சமயங்களில், நீங்கள் மிகுந்த உழைப்பினைச் செலவழித்துக் கொடுத்த இசை நிராகரிக்கப்பட்டு இருக்கலாம். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

''அந்த மாதிரியான சூழல்களில் நம் மனதில் இருத்திக்கொள்வதற்கு என்றே பகவத் கீதையில் அருமையான ஒரு பாடம் இருக்கிறது. 'கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே’!

என் மூலம் வருகிறது இசை!

மைக்கேல் ஏஞ்சலோபற்றியும் ஒரு பிரபல கதை இருக்கிறது. என்னை மிகவும் ஆழமாகப் பாதித்த கதை அது. ஒரு சர்ச்சின் பின்புறம் இருட்டான மூலையில் சின்ன மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஓவியம் வரைந்துகொண்டு இருந்தார் மைக்கேல் ஏஞ்சலோ. 'யாருமே பார்க்க முடியாத இடத்தில் ஏன் நீங்கள் ஓவியம் வரைந்துகொண்டு இருக்கிறீர்கள் மைக்கேல்?’ என்று அவரிடம் கேட்டபோது, 'நான் மக்களின் அங்கீகாரத்துக்காக ஓவியம் வரையவில்லை. கடவுளின் அங்கீகாரத் துக்காக!’ என்று பதில் அளித்தார்.

இந்த இரண்டு விதமான சிந்தனைகளும் என்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மிகவும் உதவின. என்னைப் புரிந்துகொண்ட ரசிகர்களுக்குத் தெரியும், எந்த விதமான சோர்வும் இசை மீதான என் காதலைக் குறைத்துவிடாது!''

''ரோலர் கோஸ்டர் ரைடுபோல உங்கள் வாழ்க்கைப் பயணம் அபார ஏற்ற இறக்கங்கள்

என் மூலம் வருகிறது இசை!

நிரம்பியது. அடுத்த சில வருடங்களில் நீங்கள் எங்கு, என்னவாக இருப்பீர்கள்?''

''ஏற்கெனவே எனது கே.எம். கன்சர்வேட்டரி இசைப் பள்ளி முழுதாக இரண்டு வருடங்களை எடுத்துக்கொண்டது. ஆனால், இன்னமும் எனது எனர்ஜியை அதற்குச் செலவழிக்க வேண்டும். நான் நினைத்த டிசைனில் வந்தால், கே.எம். கன்சர்வேட்டரி இசைத் துறையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.  எனது இசைப் பயணத்தில் குறிப்பிட்ட எந்த ஓர் அடையாளத்திலும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், யாருக்குத் தெரியும்? இன்னும் சில வருடங் கள் கழித்து நான் விவசாயம்கூடச் செய்து கொண்டு இருக்கலாம்!''

படங்கள்: 'A.R.RAHMAN - The Spirit of Music’ புத்தகத்தில் இருந்து...