வாங்க டீ குடிக்கலாம்!
##~## |

''ஒரு இசையமைப்பாளர் இயக்குநரா மாறியது ஆச்சர்யமா இருக்கே..?''
''திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கத்துக்க சேர்ந்தேன். பெரிய வசதியோ, ஆள் பலமோ கிடையாது. ஆனாலும், நான்தான் சேர்மன். காரணம், என் காமெடிப் பேச்சு. அத்தனை பேரும் என்னைச் சுத்தி உட்கார்ற மாதிரி காமெடியில் பின்னுவேன். இசை அமைப்பாளரா ஓரளவு நல்ல பெயர் எடுத் தாச்சு. அடுத்த கட்டம் போகணும்னு தோணுச்சு. 15 வருஷம் ஆடியோ விஷ§வல் ஸ்பெஷலிஸ்ட்டா நிறையப் படங்கள் செய்து இருக்கேன். கேமராவையும் பயன்படுத்தி இருக்கேன். அதனால தைரியமா டைரக்ஷனில் இறங்கிட்டேன்!''


''என்ன மாதிரி கதை?''
''ஊரில் பந்தல் போடுறவங்களுக்குக் கல்யாணம், காது குத்து, சடங்கு, எழவு எல்லாமே ஆஃபர்தான். பணம் வந்தா போதும்னு கிளம்புற 'பந்தல் பிரதர்ஸ்’தான் படத்தோட ஆதாரம். கழுத்து வரைக்கும் குடிக்கிற ஹீரோ. 'கொலைகாரனுக்குக்கூட பொண்ணு தருவேன். குடிகாரனுக்குத் தர மாட்டேன்’னு கொள்கையுள்ள ஹீரோயினின் அப்பா. அவரையே குடிக்கவைக்கிற ஹீரோன்னு ஜாலியான கதை!''
''ஹீரோ-ஹீரோயினை ஊர்ப் பக்கமே புடிச்சுட்டீங்களா?''

''ஆதித் - ரேஷ்மி. 'இனிது இனிது’ படத்தில் ரசிக்கவெச்ச ஜோடி. அதில் மாடர்ன் யூத்தா இருந்த ஆதித்தை அப்படியே பட்டிக்காட்டான் ஆக்கிட்டோம். கைலி கட்டி, காடு மேடு எல்லாம் அலைஞ்சதில் அவருக்கு பேன்ட்-ஷர்ட் போடுறதே மறந்து இருக்கும். ரேஷ்மி- மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி மாணவி. ரெண்டு பேரும் படத்தில் யதார்த்தமான நடிப்பை அப்படியே கொடுத்து இருக்காங்க. இதுவரைக்கும் ரெண்டு பேரையும்வெச்சு ஷூட் பண்ணியதைப் போட்டுப் பார்த்த பின்னாடிதான் இந்தப் பேட்டி தருவதற்கான தைரியம் எனக்கு வந்துச்சு!''