Published:Updated:

ஆயிரம் ரூபாயில் ஆரம்பம்!

எஸ்.கலீல்ராஜா, படங்கள்: பொன்.காசிராஜன்

##~##

 ''இதுக்கு முன்னாடி டி.வி-யில் லைவ் நிகழ்ச்சிகளில் வந்துட்டு இருந்தீங்க. இப்போ நீங்க நடிக்கிற சினிமா ஆறு மாசம் கழிச்சு டி.வி-யில் ஒளிபரப்பாகுது. இதுக்கு பேசாம நீங்க டி.வி-யிலயே இருந்திருக்கலாமே?''

- இப்படி சில எகிடுதகடு கேள்விகளுடன் சிவகார்த்திகேயனைச் சந்தித்தேன். ஆனால், பார்ட்டி செம பக்கா!

''நீங்க சொல்றதும் உண்மைதான். 'வாழ்க்கை ஒரு வட்டம்’கிற கான்செப்ட்தான். சினிமாவில் கிடைக்குற பணம், புகழ் வேற ரேஞ்ச். அதுக்காகவாச்சும் சினிமாவிலேயே இருந்துட்டுப் போறேனே!''

''சிம்பு நடிச்சதில் பிடிச்ச படம்?''

''விண்ணைத் தாண்டி வருவாயா.''

''உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?''

''இவ்வளவு நாளா இல்ல. இப்பதாங்க கொஞ்சம் இருக்கு. அதுவே பெரிய விஷயம்!''

''நீங்கள் ரசிக்கும் எதிரி யார்?''

''எதிரினு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணிக்க முடியாது. அவரைத் தோற்கடிச்சுட்டா, 'சாதிச்சுட்டோம்’னு அப்படியே ஃப்ரீஸ் ஆகிருவோம். ஒவ்வொரு திறமைசாலியையும் தாண்டிப் போறதுதான் என் பிளான். அப்படிப் பார்த்தா, இப்போ போஸ் பாண்டிதான் என் மதிப்புக்குரிய எதிரி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கேரக்டரை என் அடுத்த படத்தில் நான் தாண்டணும்!''

ஆயிரம் ரூபாயில் ஆரம்பம்!

''நீங்க ஆட்டோகிராஃப் வாங்க நினைக்கும் பிரபலங்கள்?''

''மொத்தம் நாலு பேர். அதுல ரஜினி சார், ரஹ்மான் சார், சச்சின் மூணு பேரையும் சந்திச்சுப் பேசிட்டேன். ஆனா, அந்த நாலாவது பிரபலத்தை மட்டும் சந்திக்கவே முடியாது. அவர் மைக்கேல் ஜாக்சன்!''

''வாய்ப்பு கிடைச்சா ரியல் லைஃப்ல எந்த ஹீரோயின்கிட்ட புரப்போஸ் பண்ணுவீங்க?''

''அந்தத் தப்பு மட்டும் பண்ணவே மாட்டேன்ல. இந்தக் காதல் கசமுசாலாம் மீடியா மக்களுக்குத் தெரியாம பண்ணவே முடியாது. அதனால அப்படி எந்த யோசனையும் எனக்கு இல்லை!''

''கைவிட முடியாத கெட்ட பழக்கங்கள்!?''

''ரெண்டு இருந்துச்சு. வீட்டுக்கு எப்பவும் லேட்டாப் போறது ஒண்ணு. ஆனா, இப்ப சினிமாவில் பக்கா பிளானிங்ல எல்லா வேலையும் நடக்கிறதால, அந்தப் பழக்கம் போயிருச்சு. ரெண்டாவது பழக்கம், டென்ஷனாகிட்டா நகம் கடிக்கிறது. அதைத்தான் எப்படி விடுறதுனு தெரியலை!''

'' 'அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோமே!’னு நினைக்கிறீங்களா?''

''கல்யாணம் பண்ணின பின்னாடிதான் எனக்கு பொறுப்பு வந்திருக்கு. 'அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோமோ’னு நியாயமா என் வொய்ஃப் ஆர்த்திதான் கவலைப்படணும்!''

''மறக்க முடியாத அடி?''

''என் அக்கா கௌரி பேரைச் சொன்னா, எனக்கு பில்டிங், பேஸ்மென்ட் எல்லாமே நடுங்க ஆரம்பிச்சிடும். ப்ளஸ் டூ-ல பிசிக்ஸ் பரீட்சைக்கு முதல் நாள் எங்க டீச்சர், அக்காவுக்கு போன் பண்ணி, 'சிவா, பிசிக்ஸ்ல ரொம்ப வீக். வீட்ல ஒழுங்கா சொல்லித்தரலைனா நிச்சயம் ஃபெயில் ஆகிடுவான்’னு சொல்லிட்டாங்க. நாலு மணி நேரம் நான்-ஸ்டாப்பா அக்கா என்னை அடி பின்னிடுச்சு. அப்புறம் ஒவ்வொரு ஃபார்முலாவா சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம் பிசிக்ஸ் ரிசல்ட்ல நான் 200-க்கு 185 மார்க். அந்த அடி இப்பவும் வலிக்குதுண்ணே!''

ஆயிரம் ரூபாயில் ஆரம்பம்!

''சினிமால கிளாமர் ஹீரோயினா இருந்த பலர், இப்போ டி.வி. சீரியல்களில் செட்டில் ஆகிட்டாங்க. அதுல உங்களுக்குப் பிடிச்ச ஆன்ட்டி-ஹீரோயின் யாரு?''

''அடப்பாவிகளா... அவங்களை ஆன்ட்டி ஆக்கிட்டீங்களா? அவங்களையும் ஒருகாலத்துல ரசிச்சு, மகிழ்ந்து உருண்டு புரண்டவங்கதானே பாஸ் நாம! சினிமா டு சீரியல் அழகிகள்ல, வயசானாலும் அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கிற ரம்யா கிருஷ்ணனைப் பிடிக்கும்!''

''சமீபத்தில் வாங்கிய பொருள்?''

''அது கொஞ்சம் பெருசாச்சே... 'ஆடி க்யூ 5’ கார் ஒண்ணு வாங்கிருக்கேன். மகன் அவ்வளவு பெரிய கார் வாங்கினதுல, என் அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்!''

''உங்க பாப்பாவுக்கு பேர் வெச்சாச்சா?''

''நல்ல பேரை வலைவீசித் தேடிட்டு இருக்கேன். எளிமையான தமிழ் அல்லது சம்ஸ்கிருதத்தில் பேர் வெக்க ஆசை!''

''முதல் சம்பளம் எவ்வளவு?''

''விஜய் டி.வி. போட்டியில் கலந்து ஒரு அடையாளம் கிடைச்சதும், ஒரு ஊர் திருவிழாவில் பெர்ஃபார்ம் பண்ணக் கூப்பிட்டாங்க. ரெண்டு மணி நேரம் மிமிக்ரி பண்ணதுக்கு ஆஆஆஆயிரம் ரூபா கொடுத்தாங்க!''

''சென்டிமென்ட்?''

''சென்டிமென்ட்னு இல்லை. விநோதமான ஒரு பழக்கம் உண்டு. எந்தப் படத்தின் முதல் ஷோவையும் சென்னை சத்யம் தியேட்டர்லதான் பார்ப்பேன். சென்னைக்கு வந்ததுல இருந்து அங்கேயே படம் பார்க்கிறதால, அந்தத் தியேட்டர் நம்ம வாழ்க்கையில ஒரு கேரக்டராவே மாறிடுச்சு!''

''இப்போ காம்பியரிங் பண்றவங்கள்ல அடுத்த சிவகார்த்திகேயன் யார்?''

''நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லைங்க. அப்பவும் இப்பவும் என்னைவிட பெட்டர் தொகுப்பாளர்கள் இருந்துட்டுதான் இருக்காங்க. அதெல்லாம் யார் யார்னு ரசிக மகா ஜனங்களுக்கே தெரியும்!''