Published:Updated:

“என்னைப் பற்றி 16 பொய்கள்!”

டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன், பொன்.காசிராஜன்

##~##

 ''ஹிட்ச்காக் படங்களை 50 தடவை பாரு... குரோசவா, ஃபெலினி, போலன்ஸ்கி, கிம்கி டுக்... இவங்களை எல்லாம் ரெண்டு மாசம் ஸ்டடி பண்ணு. டால்ஸ்டாயோட 'அன்னா கரீனினா’வை 30 தடவை படி. பீத்தோவனோட ஆறாவது சிம்பனில ஐந்தாவது இழையை ஆயிரம் தடவையாச்சும் கேள்... முக்கியமா, ஆறு மாசம் இந்தப் பக்கமே வராதே!'' - இயக்குநர் மிஷ்கினின் கட்டளைகளை, புரிந்தும் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர், ''ஓ.கே. சார்'' என மிஷ்கின் பட கேரக்டர் போலவே தடதடவென அங்கிருந்து ஓடினார்...

''உங்களைத் தேடி வருகிற எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவீங்களா?''

'' பின்னே என்னங்க? 'என்னை இம்ப்ரெஸ் பண்ண வராதீங்க’னு சொல்றேன். 'எனக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு. அதை நான் கத்துக்கிட்டு இருக்கேன். நீங்களும் அதைப் பண்ணுங்க’னு சொல்றேன். ஆனா, இப்படி நான் சொல்றதைப் கேட்டுட்டு அதிர்ச்சியாகி திரும்பி ஓடுற பசங்கதான் அதிகம்.

நான் பொக்கிஷம் மாதிரி மதிக்கிற என் அசிஸ்டென்ட் புவனேஷ், ஆறு மாசம் என்கிட்ட அவஸ்தைப்பட்டவன்தான். இன்னைக்கு அவன்தான் என் ஆன்மா. உதவி இயக்குநர்கள் தரமான ரசனையோட உருவாகணும்னுதான் இப்படிப் பேசுறேன். அவங்களை நான் உண்மையா நேசிக்கிறதுதான் அதுக்குக் காரணம்!''

“என்னைப் பற்றி 16 பொய்கள்!”

'' 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ் எப்படி?''

'' 'படம் நல்லா இருக்குனு சொல்றாங்க. 'ஆனா ஓடுச்சா?’னு என்கிட்டயே கேட்டாங்க. படம் எடுக்கிறது மட்டும்தான் என் வேலை. அந்தப் படம் ஓடும்னு உத்தரவாதம் கொடுக்கிறது என் வேலை இல்லை. 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினாங்க. பொருளாதாரரீதியில அது எனக்கு லாபம் தரலை. ஆனா, மனசு முழுக்க நம்பிக்கையை விதைச்சிருக்கு!''

''ஊர் ஊரா போஸ்டர் ஒட்டினது, ஆனாலும் கொஞ்சம் டூ மச்தானே?''

'' 'படம் எந்தத் தியேட்டர்ல ஓடுது?’னு கேட்டு ஏகப்பட்ட விசாரிப்புகள். அதான் நானே தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டினேன். அதை 'பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொன்னீங்கன்னா, ஆமா... அது ஸ்டன்ட்தான். நான் வாழ்றதுக்காகவும், என் கலையைக் காப்பாத்துறதுக்காகவும் நான் நடத்தின போஸ்டர் போராட்டம் அது!''

'' 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்துட்டு கமல் பாராட்டினார், அடுத்து ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணப் போறீங்க’னு உலவிய தகவல் உண்மையா?''

''என்னைப் பத்தி தினமும் 16 பொய்கள் சொல்றாங்க. அதில் 14-வது பொய் இது. என் படத்தை கமல் பார்த்தாரா... இல்லையானுகூட எனக்குத் தெரியாது!''

“என்னைப் பற்றி 16 பொய்கள்!”

''படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளில் நெகிழவைத்தது?''

''படம் பார்த்துட்டு இயக்குநர் பாலா என்னை அவரோட அலுவலகத்துக்கு அழைச்சுட்டுப் போய் இந்த மாலையை (கழுத்தில் கிடக்கும் பெரிய மணி மாலையைக் காட்டுகிறார்) கழுத்தில் போட்டுப் பாராட்டினார். பல மணி நேரம் பேசிட்டு இருந்தோம். மிஷ்கினுக்குக் கிடைச்ச மிகப் பெரிய கௌரவம் இது!''

''அடுத்து என்ன?''  

''எழுதவே தெரியாத காலத்துல நான் எடுத்த 'சித்திரம் பேசுதடி’ இன்னும் நினைவில் இருக்கு. எழுதிப் பழகிய காலத்துல எடுத்த 'அஞ்சாதே’ இன்னும் பேசப்படுது. 'நந்தலாலா’ இன்னும் யாரோ ஒருவரைத் தாலாட்டுது. 'முகமூடி’ படம் எனக்குள் இருக்கும் படைப்பாளியைத் திருப்திப்படுத்தலை. 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ உள்ளுக்குள்ள ஏதோ ஒரு சின்ன ரசவாதத்தை உருவாக்கி இருக்கு. அதில் அமிழ்ந்து மிதந்துட்டு இருக்கேன். இன்னும் எதுவும் முடிவு பண்ணலை!''

''இளம் தலைமுறை இயக்குநர்களைப் பார்த்து சீனியர் இயக்குநர்கள் பதட்டமாகிறார்களா?''

''ஒரு படத்துல ஒரு நல்ல சீன், நல்ல ஷாட் இருந்தாலே... அது நல்ல படம்தான். ஆனா,  சமீபத்தில் வெளியான எந்தப் படங்களையும் நான் பார்க்கலை. நான் சினிமாவுக்கு வந்தபோது பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற மூத்த இயக்குநர்களைப் பார்த்துப் பயப்படலை. சினிமா ஒரு பயணம். யாரும் யாரையும் பார்த்துப் பயப்படவோ, பதட்டப்படவோ தேவை இல்லை. என் சினிமா மொழியை மத்தவங்களால ஜெயிக்க முடியாது. யாரைக் கண்டும் பயந்தோ அல்லது யாரையும் பயமுறுத்தியோ எனக்குப் பழக்கம் இல்லை!''

''சின்னப் படங்களை ரிலீஸ் பண்ண முடியலை; படப்பிடிப்பு நடத்த முடியலை; தொழிலாளர் பிரச்னை... அப்படி இப்படினு சினிமாவைச் சுத்தி ஏகப்பட்ட இறுக்கம். ஆனா, உங்களைப் போன்ற பலர் இதுபற்றி எல்லாம் வெளிப்படையாப் பேசுறதே இல்லையே?''

''என் அறையைவிட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு முடங்கி இருக்கேன் நான். என் வலியைச் சொல்லி நான் அழலை... அவ்வளவுதான். மத்தபடி எனக்கு வேதனைகள் அதிகம். சினிமாவுக்கு நல்லது நடக்கணும். அது என் ஆன்மா. சினிமாவை  உயிர்ப்பிக்க நடக்கும் எல்லா முயற்சிகளுக்கும் என் ஆதரவு எப்பவும் உண்டு!''

“என்னைப் பற்றி 16 பொய்கள்!”

''உங்க கலெக்ஷன்ல எவ்வளவு புத்தகங்கள் இருக்கு?''

''10,000 புத்தகங்கள் இருக்கும். 'இதை ஒழுங்குபடுத்தி வைங்க’னு நண்பர்கள் சொல்றாங்க. ஆனா, புத்தகங்கள் இப்படி அறை முழுக்க இறைஞ்சு கிடக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. எந்த புக் எந்த அடுக்கில் இருக்குனு எனக்குத் தெரியும். அது போதும் எனக்கு!''

''சென்னைக்கு எப்படி வந்தீங்களோ, அதே நிலைமையில் வெளியேறும் சூழல் வந்தா... என்ன செய்வீங்க?''

''போயிடுவேன். ரொம்ப நாளாவே மனசு அப்படி ஒரு தனிமையைத் தேடுது. என் மகளுக்கும் நண்பர்களுக்கும் செய்ய வேண்டியது கொஞ்சம் இருக்கு. அதை முடிச்சிட்டு, சென்னை என்னை துரத்துறதுக்கு முன்னாடி நானே போயிடுவேன்!

அப்புறம்... 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் விகடன் விமர்சனம் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துச்சு.  நன்றி விகடன்!''