Published:Updated:

“முத்தம் கூடாதுனு சொல்லிட்டாங்க சைந்தவி!”

ம.கா.செந்தில்குமார்

##~##

 ''நடிக்கலாம்னு முடிவெடுத்துட்டேனே தவிர, கொஞ்சம் உதறலாத்தான் இருந்துச்சு. சினிமா நண்பர்கள்கிட்ட பேசினேன். எல்லாருமே உற்சாகப்படுத்தினாங்க. விஜய் சார், போஸ்டர் டிசைன்கள் பார்த்துட்டு 'ரொம்ப நல்லா இருக்கு’னு சொன்னார்.

இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் ரெண்டு பேருமே நடிப்பு கத்துக்கொடுக்க, சில பயிற்சியாளர்களை அனுப்பிவெச்சாங்க. 'என்ன நடந்துட்டு இருக்கு?’னு சிம்பு அடிக்கடி விசாரிப்பார். 'நல்லாப் பண்ணுங்க... ரொம்ப ஈஸி’னு உற்சாகப்படுத்தினார் விஜய் ஆண்டனி. கார்த்தி அடிக்கடி பேசி அப்டேட் கேட்டுக்குவார். உற்சாகமா 'ஹோம்வொர்க்’ பண்ணிட்டு இருக்கேன்!'' - 'பென்சில்’ பட ஹீரோவாக முதல் பேட்டி தருகிறார் 'இசையமைப்பாளர்’ ஜி.வி.பிரகாஷ் குமார்.

''இசையமைப்பாளரா 48 படங்கள் முடிச்சுட்டீங்க. எப்போ வந்தது ஹீரோ ஆசை?''

''எனக்கு ஆசை எல்லாம் இல்லைங்க. 'பென்சில்’ இயக்குநர் மணி, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு அறிமுகமானார். 'மின்னலே’ இந்தி வெர்ஷன்ல இருந்து 'நீதானே என் பொன்வசந்தம்’ வரை கௌதம் மேனனிடம் வேலை பார்த்தவர். 'நீங்க பாடும்போது உங்க முகத்தில் உணர்ச்சி தாண்டவமாடுது. நடிச்சா நல்லா இருக்கும்’னு சொல்லி  ஆசையைக் கிள்ளிவிட்டுட்டார்'' என்று இயக்குநர் மணி நாகராஜிடம் திருப்பிவிட்டார்.

''இந்தக் கதை, ஒரு புதுமுகத்துக்கானது. ஜி.வி., ஸ்கூல் பையன் கேரக்டருக்கு பக்கா பொருத்தமா இருந்தார். அதான் அவரையே நடிக்கவெச்சாச்சு.

“முத்தம் கூடாதுனு சொல்லிட்டாங்க சைந்தவி!”

சென்னையில் ஒரு ஹைக்ளாஸ் பள்ளிதான் 'பென்சில்’ படத்தின் களம். காதல், கலாட்டாவுக்கு மத்தியில் த்ரில், திகில் சேர்த்திருக்கோம். ஜாலி, கிண்டல்களுக்கு நடுவே திடீர்னு ஒரு சம்பவம் நடக்குது. அது அந்தப் பசங்களால சமாளிக்க முடியாத விஷயம். அதைச் சரிபண்ணாங்களா, இல்லையானு கதை போகும். அதுக்கு நடுவில் தனியார் பள்ளி நிர்வாகம் ஒரு மாணவனை எப்படிப் பார்க்குது, அதன் வியாபார நோக்கம், பெற்றோர்கள் தங்கள் உழைப்பில் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை பள்ளிக்கூடத்தில் கொட்டுவதுனு நிறைய விஷயங்களை விவாதிக்கும் இந்தப் 'பென்சில்’!'' என்று படத்துக்கு இப்போதே டிரெய்லர் சொல்கிறார் மணி நாகராஜ்.

''நம்ம லுக் ஓரளவுக்காவது ஓ.கே-யா?'' என்று படத்தின் ஸ்டில்களை டேப்லெட்டில் ஸ்வைப் செய்தபடியே பேசினார் ஜி.வி.பிரகாஷ்.

“முத்தம் கூடாதுனு சொல்லிட்டாங்க சைந்தவி!”

'' 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஸ்ரீதிவ்யா, கிராமத்துப் பொண்ணா அவ்வளவு லைக்ஸ் குவிச்சாங்க. இந்தப் படத்தில் சிட்டி பொண்ணா அவங்களை மாத்திட்டோம். இப்போ இன்னும் லவ்வபிளா இருக்காங்க!''

''ஹீரோவா டூயட் ஆடி நடிக்கிறதுக்கு சைந்தவி என்ன சொன்னாங்க?''

'''கிஸ்ஸிங் சீன்ஸ் கூடாது’னு ஒரே ஒரு நிபந்தனை போட்டிருக்காங்க!'' என்று ஜி.வி. சிரிக்க, ''இந்தப் படம் ஸ்கூல் சப்ஜெக்ட். அதனால முத்தத்துக்குத் தடை போட்டுறலாம். ஆனா, அடுத்தடுத்த படங்கள்ல நிச்சயம் மொத்தமா முத்தமா மாட்டிக்குவார் ஜி.வி.!'' என்று மணி சதாய்க்க, வெடித்துச் சிரிக்கிறார்கள் இருவரும்!