என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : வெப்பம்

சினிமா விமர்சனம் : வெப்பம்

##~##

பொறுப்பற்ற தந்தையால் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சூழ்நிலை மாற்றமே... 'வெப்பம்!’

குடிகார அப்பா சிமோரின் கொடுமையால் அம்மா இறந்துவிட, தம்பி நானியை (அறிமுகம்) வளர்க்கி றார் அண்ணன் முத்துக்குமார் (அறிமுகம்). காலப்போக்கில் நானி யின் அப்பா, அந்த ஏரியாவின் பாலியல் தரகராக மாறுகிறார். அப்பா வின் கறை வாழ்க்கை தம்பியின் மீது படிந்துவிடக் கூடாது என்று கவனமாகப் பாதுகாக்கிறார் அண்ணன். ஆனால், சூழலால் அப்பாவிடமே அடைக்கலம் ஆகிறார் நானி. பணத் துக்காக மகனைப் போட்டுத்தள்ள முடிவு எடுக்கிறார் அப்பா. அடுத்து நடக்கும் துரோகங்களும் துரத்தல் களும்தான் படம்.

மிரட்டல் தாதாக்களின் இருட்டு  வாழ்க்கையைத் தன் முதல் படமாக எடுக்கத் துணிந்ததற்காக, அறிமுக இயக்குநர் அஞ்சனாவைப் பாராட்ட லாம். ஆனால், அது மட்டும் போதுமா?

சினிமா விமர்சனம் : வெப்பம்

படத்தில் முதல் 10 நிமிடங்கள் யாருக்கு யார் அண்ணன், யார் தம்பி என்கிற குழப்பத்திலேயே கரைந்துவிடுகிறது. அண்ணன் முத்துக்குமார் எப்போதும் வெறித்த பார்வையோடு அலைவதும் தம்பியைப் போட்டுச் சாத்துவதும் தவிர, பெரிதாக ஏதும் செய்யவில்லை. அது எப்படித் தமிழ் சினிமாவில் மட்டும் பலசரக்கு சாமானைப்போல பாய்ஸனையும் வீட்டிலேயே வாங்கிவைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.      

இரண்டு ஹீரோக்களில் ஒருவராகிய நானி, காதல் காட்சிகளில் மட்டும் தேறுகிறார். வழக்கமாகப் பணக்காரராக வரும் கார்த்திக்குக்கு குப்பத்து இளைஞன் வேடம். எந்தப் பெரிய வித்தியாசங்களும் இல்லை. காதலனைக் காணவில்லை என்று பதறும்போது அசத்தல் பாவனைகள் காட்டுகிறார் நித்யாமேனன். என்னதான் பிரச்னை என்றாலும் 'தொழில்’ நடக்கும் இடத்துக்கு ஓர் இளம்பெண் தனியாகப் போவதில் எந்த லாஜிக்கும் இல்லை. நெளிவு சுளிவான பிந்து மாதவியை (அறிமுகம்) பார்த்ததும் பிடித்துவிடுகிறது. பெண் தாதாவிடம் பம்முவது, 'தனியா தொழிலுக்குப் போனே, அவ்வளவுதான்’ என்று தன் கஸ்டடி தொழிலாளியை மிரட்டுவது என்று கெஞ்சலும் மிஞ்சலுமாக ஒரு பாலியல் தரகரை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார் சிமோர்.

சினிமா விமர்சனம் : வெப்பம்

அண்ணனின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் கதை, திடீரென்று பலரின் பார்வையில் கன்னாபின்னாவெனச் சுத்துவது ஏனோ? நானி, கார்த்திக், நித்யாமேனன் மூவரும் குப்பத்தில் வசிப்பவர்கள். ஆனால், அவர்களின் உடல்மொழி, உச்சரிப்பு, உடைகள் என எதிலும் குப்பத்தின் சாயல் இல்லை!

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் 'காற்றில் ஈரம்’, 'மழை வரும்’ பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் மட்டும் பளிச். முதல் பாதியில் அலைபாயும் திரைக்கதை, கதைக் களனுக்குப் பொருத்தமற்ற நடிப்பு ஆகியவற்றால், வெப்பத்தைவிட வெக்கை அதிகம்!

- விகடன் விமர்சனக்குழு