Published:Updated:

விடியும்முன் - சினிமா விமர்சனம்

விடியும்முன் - சினிமா விமர்சனம்

விடியும்முன் - சினிமா விமர்சனம்

விடியும்முன் - சினிமா விமர்சனம்

Published:Updated:
##~##

ரு பாலியல் தொழிலாளி, 12 வயது சிறுமியை நிழலுலக வல்லூறுகளிடம் இருந்து காப்பாற்ற, 'விடியும் முன்’ தப்பித் தாவியோட முற்படும் சேஸ் ரேஸ் த்ரில்!

தாதா துரைசிங்கம், புரோக்கர் சிங்காரம், கிரிமினல் ஜான் விஜய், கொடூர வில்லன் சின்னா... என விரட்டும் புலிகளின் துரத்தலுக்கு இடையில், பூஜா, மாளவிகா ஆகிய இரண்டு மான்கள் தப்பித்தனவா என்பதே கதை! 2006-ல் வெளியாகி விருதுகளையும் 'திட்டு’ விமர்சனங்களையும் ஒருசேரக் குவித்த 'லண்டன் டு பிரைட்டன்’ என்ற ஆங்கிலப் படத்தின் லோக்கல் நகல்தான் 'விடியும் முன்’. ஆனால், பாலியல் தொழிலாளிகளின் பாதுகாப்பாற்ற, நிரந்தர ஆதரவற்ற வாழ்க்கையையும், அந்தத் தொழிலில் இளஞ்சிறுமிகள் படும் அவலத்தையும் ஊசி தைப்பது போல சொல்லிய விதத்துக்காக அறிமுக இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு வாழ்த்துகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒளி வழியும் இரவு எஃபெக்ட், அழுக்கான இடங்கள், வித்தியாசமான வில்லன்கள், அவர்களின் மிக வித்தியாசமான பேசுபொருள்கள், புழக்கத்தில் இல்லாத கார்கள், நியான் விளக்கு லாட்ஜுகள்... என விநோதமான கேன்வாஸில் விரிகிறது ஒவ்வொரு காட்சியும். படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் பிசிறு தட்டாமல் நடித்து இருள் சூழ்ந்த ஒரு திகில் உலகத்தில் நம்மை உலவவைக்கிறார்கள். படத்தின் காஸ்ட்டிங்... நச்!

விடியும்முன் - சினிமா விமர்சனம்

சிறுமி மாளவிகா... அட்டகாச அறிமுகம்! 'என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க... பட்டாசு கம்பெனிக்கா?’ என்று புருவம் உயர்த்திக் கேட்கும்போதும், 'என் பேரைச் சொன்னா நம்ப மாட்டீங்க... ஆங்... கந்தசாமி!’ என்று கோபம், சந்தோஷம், பயம், அன்பு, துடுக்கு... என சகல ஃபீலிங்கிலும் அம்சமாக அசத்துகிறாள். 'நமக்கும் வயசாகுதுல சிங்காரம்’ என்று மென்சோகம் காட்டும் பூஜா... 'இத்தனை நாளா இவ்ளோ நடிப்பை எங்கேம்மா வெச்சிருந்த?’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார்!

'அசட்டு’ புரோக்கர் சிங்காரமாக வரும் அமரேந்திரன், ஆரம்பம் முதலே படத்தை செம ஜாலியாக நகர்த்திச் செல்கிறார். 'சைஸா முக்கியம்... டேப் வெச்சு அளந்து பார்க்கவா போறானுங்க!’, 'நாம பண்ற தொழிலுக்கு பேங்க்ல லோனா கேட்க முடியும்?’ என சிங்காரம் பேசும் ஒவ்வொரு வசனமும் செம ஷார்ப், செம லாஃப்!

சிங்காரத்தின் தொடையில் குத்திய பால்பாயின்ட் பேனாவை, ஒரு பெண் குறும்பாக அமுக்கி விளையாடுவது, 'ராஜா, நாய்’ கதை விவரிப்புகளுக்கு இடையில் நிகழும் சம்பவங்கள், புகைப்பட வரிசையிலேயே உணர்த்தப்படும் லட்சுமி ராமகிருஷ்ணனின் முன்கதை... ரசிகனின் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் உத்திகள்.

விடியும்முன் - சினிமா விமர்சனம்

நீள நீள சேஸ் ரேஸ் காட்சிகள் டெம்போ ஏற்றுகின்றனதான். ஆனால், அந்த மெகா நீளமே அந்த டெம்போவை அவ்வப்போது அம்போ ஆக்கவும் செய்கின்றன. 'அந்த சம்பவம்’ குறித்து ஆளாளுக்கு பில்டப் கொடுத்து நகம் கடிக்க வைக்கிறார்கள். ஆனால், சஸ்பென்ஸ் உடைக்கும் இடத்தில்... செம கடி!

சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவும், கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசையும் மழை தூறும் இரவின் சஸ்பென்ஸ் திகிலை திடுக் திக்கென நமக்குள் கடத்துகின்றன.

வித்தியாசக் கோணங்கள், திகில் பின்னணி, கச்சித நடிப்பு, டென்ஷன் திரைக்கதை... விடியும் முன்.. ஒரு வித்தியாச முயற்சி!

- விகடன் விமர்சனக் குழு