Published:Updated:

கோவா திரைப்பட விழா

ஒரு ரசிகனின் டைரிபாஸ்கர் சக்தி

கோவா திரைப்பட விழா

ஒரு ரசிகனின் டைரிபாஸ்கர் சக்தி

Published:Updated:
##~##

கோவாவில் சர்வதேசத் திரைப்பட விழா. சில ஆண்டுகளாகப் போக நினைத்து இந்த ஆண்டுதான் நண்பர்களுடன் சேர்ந்து போக வாய்த்தது. 'கோவா’, ஏற்கெனவே ஓரளவு பரிச்சயமான ஊர்தான். 'வெற்றி விழா’, 'புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படங்களில் தலா இரண்டு முறையும், 'கோவா’ படத்தில் ஒரு முறையும் பார்த்திருக்கிறேன்.

ஒயிலான பெண், இடுப்பை வளைத்து நிற்பதுபோல் தென்னை மரங்கள் ஓரத்தில் வளைந்து நிற்கும் கோவாவின் கடற்கரைகளை அந்தத் திரைப்படங்கள் மனதில் பதித்தன. கற்பனையில் அந்த மாதிரி காட்சிகளுடன் வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுகையில், அழுக்காக சோகையாக இருந்த கோவாவைப் பார்த்ததும் ஏமாற்றம். ஆனால், ஊருக்குள் கடற்கரையை ஊடறுத்துப் புகுந்திருக்கும் கடல், கோவாவின் பிரதேசங்களை அழகாக்கி வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரைப்பட விழா நடைபெறும் கலா அகாடமியும் ஐநாக்ஸும் அமைந்திருக்கும் சாலை, திரைப்பட விழா நடந்த தினங்களில் முழுதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பெரும் திருவிழாவாக இருந்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்தவர்கள் கணிசம். காலையில் எழுந்து அவசரமாகக் கிளம்பி வந்து க்யூவில் நின்று முண்டியடித்து, அன்றாடத் திரையிடல்களுக்கு டிக்கெட் பெற வேண்டும். எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கடந்து, அரங்கினுள் நுழைந்து, அமர்ந்து, மயில்

கோவா திரைப்பட விழா

பாட்டெல்லாம் போட்ட பிறகு (திரைவிழாவின் பிரத்தியேகப் பாடல்) தொடங்கும் படம் சுவாரஸ்யமாகச் சென்றால், பிரச்னை இல்லை. கொஞ்சம் மெதுவாக நகர்ந்தால் அவ்வளவுதான். ஆங்காங்கே குறட்டையும், பலர் கொத்துக் கொத்தாக எழுந்து செல்வதும் அரங்கேறுகின்றன!

விழாவின் தொடக்கத் திரைப்படம் 'டான் ஜூவான்’. செக் தேசத்துப் படம். வெகு சுவாரஸ்யம்!

'சால்வோ’ எனும் இத்தாலிய ஃப்ரெஞ்சுக் கூட்டுத் தயாரிப்புப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, 'இது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’டா!’ எனும் தமிழ்க் குரல் கேட்டது. அதில் ஆச்சர்யம் இல்லைதான். கதாநாயகன் ஒரு கொலையாளி. இத்தாலிய மாஃபியாவின் ஆள். ஒருவனைக் கொல்லச் சென்று, அவன் வீட்டினுள் பதுங்கியிருக்கிறான். அங்கே கொல்லப்பட வேண்டியவனுக்கு,  பார்வையற்ற தங்கை ஒருத்தி இருக்கிறாள். அண்ணன் வரும் வரை ஒளிந்திருந்து அவள் நடவடிக்கைகளைக் கவனிக்கிறான். அண்ணன் வந்ததும் அவனைக் கொல்கிறான். கொன்றவன் வேலை முடிந்தது என்று கிளம்பாமல், அந்தப் பார்வையற்ற பெண்ணைப் பாதுகாக்கும் பொருட்டு தனியே கொண்டுபோய் ஒரு மறைவிடத்தில் வைத்துப் பராமரிக்கிறான். மாஃபியா தலைவனுக்கு விஷயம் தெரிந்து, 'அவளையும் கொல்’ என்று கட்டளையிடுகிறான். ஹீரோ மறுத்து, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை விடுகிறான். இதுதான் கதை. ஆனால், கதையில் நடைபெறும் சம்பவங்களின் நடுவே மெதுமெதுவாக ஹீரோயினுக்குப் பார்வை திரும்பி கடைசியில் அவளுக்கு முழுசாகப் பார்வை வந்து விடுகிறது.

திரையிடல் முடிந்ததும் இயக்குநர்களிடம் (இந்தப் படத்துக்கு இரண்டு இயக்குநர்கள்) 'அதெப்படி சார்... அந்தப் பொண்ணுக்குப் பார்வை வந்துச்சு? யாராச்சும் கண் டாக்டர்கிட்டே இது பத்தி டீடெய்ல்ஸ் கேட்டீங்களா?’ என்று 'பார்வை திரும்புதல்’ குறித்த கேள்விகள் விழுந்தன. இயக்குநர் பொறுமையாக, ''சில சமயங்களில் வாழ்க்கையில் அபூர்வமாக, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று நிகழலாம். அது ஹீரோயினுக்கு நிகழ்வதாக அமைத்திருக்கிறோம்'' என்றார். பார்வையாளர்கள் அதில் திருப்தி அடையவில்லை.

கோவா திரைப்பட விழா

இயக்குநர்களில் ஒருவரான ஃபேபியோ க்ரஸடோனியா, எல்லா சலசலப்புகளும் ஓய்ந்த பின்னர் பேசினார். ''இந்தப் படத்தை ஃப்ரான்ஸில் திரையிடும்போது 'நீங்கள் இந்தப் பார்வை திரும்புதல் சம்பந்தமாக நிறையக் கேள்விகளை எதிர்கொள்ளவேண்டி வரும். ஏனெனில், ஃப்ரான்ஸில் இருப்பவர்கள் ரேஷனலிஸ்ட்டுகள். எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக அவர் களிடம் நிரூபிக்க வேண்டும்’ என்றார்கள். நானும் அதை எதிர்பார்த்தேன். ஆனால், ஃப்ரான்ஸில் இதுபற்றி ஒருவர்கூட கேள்வி கேட்கவில்லை. இந்தியா, நம்பிக்கைகள் நிறைந்த நாடு; ஸ்பிரீச்சுவல் தேசம். இங்கு இந்தக் கேள்வியே வராது என்று நினைத்தேன். ஆனால், இங்கு இத்தனைக் கேள்விகள் முளைப்பது ஆச்சர்யம்!'' என்று வியந்தார். பாவம்... அவர் நம் ஊர் ஃபேஸ்புக் நண்பர்கள் பற்றி தெரியாத அப்பாவி!

விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம்தான் திரைப்பட விழாவின் முக்கிய ஸ்பான்ஸர். வளாகத்துக்கு உள்ளேயே ஸ்டால் போட்டிருந்தார்கள். அதில் கனவான்களும், சீமாட்டிகளும், சாமான்யர்களும் அவ்வப்போது பீர் அருந்தும் காட்சி சகஜமான ஒன்று. க்யூ வரிசையில் அன்றைக்கு ஒருவர், ''ஏன் இவ்வளவு நேரம்?'' என்று கத்த, அமைப்பாளர்களில் ஒருவர், ''ஏன் குடிச்சிட்டு வந்து சத்தம் போடுறீங்க?'' என்று கேட்டுவிட்டார். உடனே கோபம் வந்துவிட்டது சம்பந்தப்பட்டவருக்கு. ''கேம்பஸுக்கு உள்ளேயே குடிக்கிறதுக்கு ஸ்டால் போட்டுட்டு, நீ எப்படி என்னைக் 'குடிகாரன்’னு சொல்லலாம். மன்னிப்புக் கேளு'' என்று போதையேறிய ஆங்கிலத்தில் கத்த, அமைப்பாளர் மன்னிப்புக் கேட்டதும் க்யூ முழுவதும் கைதட்டல்!

'தங்கமீன்கள்’ திரையிடல் ஹவுஸ்ஃபுல். மலையாளத்தின் 'ஷட்டர்’, 'செலுலாய்டு’ படங்களும் பரவலாக எல்லோராலும் சிலாகிக்கப்பட்டன. எடிட்டர் லெனின், 'உலகத் திரைப்படங்களைவிட, இந்த முறை இந்தியத் திரைப்படங்கள் நன்றாக இருக்கின்றன’ என்று அபிப்பிராயப்பட்டார். அது உண்மைதான். 'ஷிப் ஆஃப் தீஷியஸ்’ மற்றும் மராத்தியப் படமான 'ஃபேண்ட்ரி’, வங்காள இயக்குநர் ரித்விக் கடக்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான 'மேக தக்க தாரா’ ஆகியவை பெரிதும் ரசிக்கப்பட்டன.

கோவா திரைப்பட விழா

விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் கவனிக்கத்தக்க அம்சம், கதைகளின் வெரைட்டி! நான்கு பசுக்கள் தப்பிப் போய் காட்டுக்குள் புகுந்துகொள்வதைப் பற்றி ஒரு படம். இரண்டு கார்கள் எதிரெதிரே நின்று ஒருவருக்கொருவர் வழி தர மறுக்க, அதையட்டி விரியும் சம்பவங்களை வைத்து ஒரு படம். சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கும் எக்ஸ்ட்ரா நடிகை ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் படம்... என விதவிதமான கதைக்களங்கள் வியக்கவைக்கின்றன.

எப்போதும் நம்மை நெகிழ்த்தும் தன்மை ஈரானியப் படங்களுக்கு உண்டு. அது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டது. 'ஹுஷ்... கேர்ள்ஸ் டோன்ட் ஸ்க்ரீம்’ எனும் திரைப்படம் பார்வையாளர்களை உலுக்கி அழவைத்தது. பெண் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை, அழுத்தமாக முகத்தில் அறைந்தது போல் சொல்லிக் கலங்கடித்த படம்.

திருமணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான் மணமகன். மணமகள் ஷிரின் ஒரு கொலை செய்துவிட்டு முகம், உடலெங்கும் ரத்தக்கறையுடன் வருகிறாள். அனைவரும் அதிர்ந்துபோகின்றனர். என்ன நடந்தது என்று யாரிடமும் வாய் திறந்து பேச மறுக்கும் ஷிரினை, பேசவைக்க வெகு பிரயத்தனப்படுகிறார் அவளது பெண் வழக்கறிஞர். ஒரு வழியாக அவள் பேசுகிறாள். தனது எட்டாவது வயதில் பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் டிரைவரால் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும், அந்தச் சமயத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்வதற்கு ஆள் இல்லாமல் தவித்த அவலத்தையும், தன்னைக் கொடுமைக்கு ஆளாக்கியவன் உதட்டில் விரல்வைத்து, 'உஷ், பொண்ணுங்க கத்தக் கூடாது’ என்று சொன்ன சொற்கள், அவை விளைவித்த பயம் தன் மனதில் ஆறாத ரணமாகப் பதிந்து வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது பற்றியும் அவள் சொல்கிறாள். திருமணத்துக்குத் தயாராகி கிளம்பி வருகையில் தனக்கு நேர்ந்தது போன்றே இன்னொரு சிறுமிக்கும் கொடுமை நேர்வதைப் பார்த்துவிட்டுப் பொறுக்கமுடியாமல் சம்பந்தப்பட்ட மிருகத்தைக் கொலை செய்துவிட்டதைச் சொல்கிறாள் ஷிரின்.

கோவா திரைப்பட விழா

ஈரானியச் சட்டப்படி அவளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அதில் இருந்து அவள் தப்ப வேண்டுமானால், அவளால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுமியும், அவளது பெற்றோரும் கொலைக்கான காரணத்தை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். சிறுமியின் தந்தை தனது குடும்பக் கௌரவத்தைக் காரணம்காட்டி உண்மையைப் பேச மறுக்கிறார். தூக்கிலிடப்படும் நாள் நெருங்குகிறது. ஏதாவது செய்து ஷிரினைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று பெண் வழக்கறிஞரும் ஷிரினின் காதலனும் போராடுகின்றனர். எந்த முயற்சியும் கை கொடுக்காத நிலையில், ஷிரினுக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்!

படம் பார்த்த அத்தனை பேர் மனதிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படத்தை இயக்கியவர் பௌரன் தெரக்‌ஷந்தே (Pouran Derakhshandeh) எனும் ஈரானியப் பெண் இயக்குநர். பெண்களின் வலி, வேதனையை ஓர் ஆண் இயக்குநரால் இந்த அளவுத் தாக்கத்துடன் சொல்லியிருக்க முடியாதோ என்று எண்ணவைத்தது பௌரனின் இயக்கம்!

திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பின் நிதானமாக யோசிக்கையில் நமது தமிழ் திரையுலகை முன்வைத்து இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றின. ஒன்று, விழாவுக்கு வந்த படங்களில் கணிசமானவை பெண் இயக்குநர்கள் இயக்கியவை. நம் ஊரிலிருந்து ஏன் பெண் இயக்குநர்கள் இந்த மாதிரி உருவாவது இல்லை? இரண்டு, விதவிதமான கதைக் களங்கள். இது போன்ற களங்களையும் கதைகளையும் ஏன் நாம் டிஸ்கஷன் லெவலில்கூடச் சிந்திப்பது இல்லை?