Published:Updated:

‘பவரு... பட்டையைக் கிளப்பீட்டிங்க!’

எ பாராட்டு பை ரஜினிஆ.அலெக்ஸ் பாண்டியன், படங்கள்: பொன்.காசிராஜன்

##~##

ருமுறை... ஒரே ஒருமுறை 'பவர் ஸ்டார்’ சீனிவாசனை நேரில் சந்தித்துவிடுங்கள். அது தமிழ்நாட்டின் பவர்கட் அளவுக்கு சிக்கலானது... சிரமமானது.

அடிக்கடி தன் மொபைல் நம்பர் மாற்றிவிடுவார் பவர். நூல் பிடித்து நூல் பிடித்து அவரது புது எண் பிடித்துப் பேசினாலும், 'என்னது, பவர் ஸ்டாரா... அப்படிலாம் யாரும் இல்லியே...’ என்று அவரே கரகர குரலில் பதில் சொல்லி கட் செய்துவிடுவார். ஆனால், 3டி ஸ்பெஷலில் வாழும் வரலாறான பவர் இடம் பெறாவிட்டால், பின்னர் வரும் சந்ததியினர் வருங்காலத்தில் கலாய்ப்பார்களே என, பவரைத் தேடினோம்.

பண மோசடி, வாகன மோசடி எனத் தொடர்ந்து நான்கு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் பவர், ''நான் வெளியாளுங்க யாரையும் பார்க்கக் கூடாதே... சரி... பிஸியா ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. ஏவி.எம். வாங்க.... பார்க்கலாம்!'' என்று நேரம் குறித்தார்.

பவர் சொன்னபடி, ஏவி.எம்-மில் காலை 9.30க்கு ஆஜர். 'எங்க சார் இருக்கீங்க?’ எனப் பலமுறை விசாரித்தும் 11 மணி வரை பதிலும் வரவில்லை; ஆளும் வரவில்லை. திடுமென லைனுக்கு வந்தவர், ''அண்ணா நகர்ல ********** கடைக்குப் பக்கத்துல (அவரது பாதுகாப்புக் கருதி சில இடங்களின் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன.) இருக்கேன். அங்கே வந்துருங்க!'' என்று சொல்லிவிட்டு, 'உளவுத் துறை’ அந்த அழைப்பை டிரேஸ் செய்ய நேரம் கொடுக்காமல், கட் செய்தார்.

உடனே வடபழனியில் இருந்து அண்ணா நகருக்குப் பறந்தோம். அங்கே சென்று அழைத்தால், பதில் இல்லை. இன்னொரு புது எண்ணிலிருந்து ஒரு நபர் பேசினார். 'பவர் அண்ணே... திருமங்கலம்கிட்ட இருக்குற ************ ஹோட்டல்ல இருக்கார். அங்கே போங்க’ என்பது தகவல்!

அந்த ஹோட்டலுக்குச் சென்றால், அங்கும் ஆளைக் காணோம். கடுப்புடன் அழைத்தால், ''எங்கே தம்பி இருக்கீங்க?'' என்று கூலாக விசாரித்தார் பவர்.

‘பவரு... பட்டையைக் கிளப்பீட்டிங்க!’

''சார்... உங்காளு சொன்ன ஹோட்டல் வாசல்லதான் நிக்கிறேன்... நீங்க எங்கேதான் இருக்கீங்க?''

''அந்த ஹோட்டலுக்கு லெஃப்ட்ல ஒரு தண்ணி லாரி நிக்குதா?''

''ஆமா!''

''அது பக்கத்துல வரிசையா கார் நிக்குதா?''

''ஆமா!''

''அந்த காரை எல்லாம் தாண்டி வாங்க. லைனை கட் பண்ணிடாதீங்க!''

கார்களைத் தாண்டிக்கொண்டே, ''சார் காரை எல்லாம் தாண்டிட்டேன்!''

''கறுப்பு கலர் கார் ஒண்ணு நிக்குதுல... அதைத் தாண்டி வாங்க!''

வெறியாகக் கிளம்பிய கோபத்துடன் கறுப்பு கார் பக்கம் போனால், படக்கென்று அந்த கார் கதவு திறந்து ஒரு கை என்னை உள்ளே இழுத்தது.

காருக்குள்.... அதே தவுசண்ட் கிராம் பவுடர் பிரகாசத்துடன், தன் டிரேட் மார்க் சிரிப்புடன் பவர்!

''வணக்கம் தம்பி!'' என்று கும்பிடு போட்டு நம் கோபத்தை எல்லாம் காணாமல் போகச் செய்கிறார்.

''ஏன் சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க?''

''தம்பி... நாலு கேஸ்லயும் ஜாமீன்லதான் இருக்கேன். அதனால சுதந்திரமா வெளியே வர முடியாது. நமக்கு வெளியே துரோகிகள் அதிகம் கண்ணு. அதுபோக ரசிகர்களும் ஆட்டோகிஃராப் கேட்டு கூட்டம் கூடிர்றாங்க. இங்கேயே பேசிடலாம். இன்னைக்கும் லன்ச் இல்லை. பாருங்க, ஒரு பிரபலமா இருக்கிறதுனால, என்னல்லாம் இழக்க வேண்டியிருக்குனு!''

''நல்லவன், அப்பாவி மாதிரி நடிச்சு ஊரை ஏமாத்தீட்டீங்களே சார்... ஏதேதோ வழக்குப் போட்டிருக்காங்க உங்க மேல!''

''அந்த வழக்குகள்ல பாதி உண்மை, பாதி பொய். என் வளர்ச்சிப் பிடிக்காம இப்படி செய்றாங்க. ஆனா, என்னைக்கும் உண்மைதான் தம்பி ஜெயிக்கும். இவனை இப்படியே விட்டா, எங்கேயோ போயிடுவான்னு எல்லாரும் சேர்ந்து சதி பண்றாங்க. நிச்சயம் பழைய பவரா, அதே பவரோட திரும்பி வருவேன். ஏன்னா, இனிமே யாரும் என்னை ஏமாத்த முடியாது. நான் ரொம்பப் பாசமானவன். அதுதான் என் பலவீனமும். என்கூட இருந்தவங்களே என்னை ஏமாத்திட்டாங்க. ஆனா, இனி யாரையும் நம்ப மாட்டேன். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், ஒரு பெண்ணும் ராயபுரம் பிரபலம் ஒருத்தரும்தான். சீக்கிரமே அவங்களைப் பத்தியும் தகவல்களைச் சொல்றேன்!''

‘பவரு... பட்டையைக் கிளப்பீட்டிங்க!’

''இவ்ளோ பிரச்னைகள்ல இருக்கீங்க... ஆனா, சமூக வலைதளங்கள்ல உங்களைக் கலாய்ச்சு காமெடி பண்றாங்களே?''

''நம்மளால நாலு பேரு சந்தோஷமா இருந்தா, எதுவுமே தப்பு இல்லை தம்பி!''

''பெரிய இடைவேளைக்குப் பிறகு வடிவேலு மறுபடியும் நடிக்க வந்துட்டார்... இனி உங்க காமெடியை யார் பார்ப்பாங்க?''

''அவர் எனக்கு சீனியர். எங்க எல்லார் வேலையும் மக்களைச் சந்தோஷப்படுத்துறதுதான். அதனால எங்களுக்குள்ள போட்டி எல்லாம் எதுவும் இல்லை. இது ஹோட்டல் பிசினஸ் மாதிரிதான். அவரும் கடை வெச்சிருக்கார், நானும் கடை வெச்சிருக்கேன். எங்க ருசியான சாப்பாடு கிடைக்குதோ, அங்கே மக்கள் சாப்பிட்டுப் போறாங்க!''

''சரி, அந்த 'ஆனந்தத் தொல்லை’ படத்தை எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க?''

''படம் பக்காவா முடிஞ்சு எல்லாம் ரெடி. 'கோச்சடையான்’ எப்போ ரிலீஸ்னு கேளுங்க... அன்னைக்குத்தான் 'ஆனந்தத் தொல்லை’யும் ரிலீஸ்!''

''ஏங்க, அவரையே வம்பிழுத்துட்டு இருக்கீங்க... ரஜினியை நீங்க ஒரு தடவையாவது நேர்ல பார்த்துப் பேசியிருக்கீங்களா?''

''இல்லை. ஆனா, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பார்த்துட்டு அவரே எனக்கு போன் பண்ணினார். 'பவரு... பட்டையைக் கிளப்பிட்டீங்க’னு சொல்லிட்டு 'ஹாஹாஹா’னு சிரிச்சார். 'உங்களை நேர்ல பார்க்கணும் சார்’னு சொன்னேன். 'நிச்சயம் பார்க்கலாம்’னு சொல்லியிருக்கார். சீக்கிரமே சந்திச்சுடுவேன். அப்போ உங்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ்வா  சொல்றேன்!''

அதற்கு மேல் என்ன பேச? நன்றி சொல்லி விடைபெற்றேன். 'பேட்டி எப்போ வரும்... எந்தப் படம் வைப்பீங்க’ என எல்லாத் தகவல்களும் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ''தம்பி மேட்டரை அட்டைப் படத்துல வைங்க. 'மீண்டும் பவர்’னு நச்னு போல்டா டைட்டில் போடுங்க... கலக்கிருவோம்!'' என்று பூரிப்பும் சிரிப்புமாக வழியனுப்பினார்!