Published:Updated:

“குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு?”

பளீர் பொளேர் விஜயகாந்த்ம.கா.செந்தில்குமார், படம்: ப.சரவணகுமார்

“குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு?”

பளீர் பொளேர் விஜயகாந்த்ம.கா.செந்தில்குமார், படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

 ஜூனியர் கேப்டன் வருகிறார்!

விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன், 'சகாப்தம்’ படத்தின் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். அறிமுக விழா மேடை, செம விறுவிறுப்பு!

மேடையில் முதல் ஆளாக மைக் பிடித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ''என் பையன் விஜய் நடிகன் ஆகணும்னு ஆசைப்பட்டதால், 'நாளைய தீர்ப்பு’ எடுத்தேன். ஆனா, படம் சரியாப் போகலை. அப்பவே 90 லட்சம் லாஸ். ஒரு பிரபல ஹீரோகூட சேர்த்து நடிக்கவைச்சா சினிமாவில் ஸ்டெடி ஆகிடுவான்னு விஜயகாந்த் கால்ஷீட் கேட்டேன். உடனே சம்மதிச்சார்!'' என்று சண்முகபாண்டியனையும் தோல்வியில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்று வாழ்த்தி அமர்ந்தார்.

மற்றவர்களின் வாழ்த்துகளுக்குப் பிறகு மைக் பிடித்த விஜயகாந்த், ''நான் அரசியல் பேச மாட்டேன். இது சினிமா விழா!'' என்று சத்தியம் செய்யாத குறையாகக் கூறினார். ஆனால், அடுத்த நொடியே, ''இந்த விழாவுக்கு ஏன் பலர் வரலை. எல்லாம் ஜெயலலிதாவுக்குப் பயந்துக்கிட்டு!'' என்று சத்தியத்தை சர்க்கரைப் பொங்கல் ஆக்கிவிட்டுத் தொடர்ந்தார்.  

''நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். ஆனா, எதுக்குப் பயப்படணுமோ, அதுக்குப் பயப்படணும். எதுக்குப் பயப்பட வேண்டாமோ, அதுக்குப் பயப்பட மாட்டேன். என் பசங்க ரெண்டு பேரும் என் கட்சியையும் சரி, என்னையும் சரி... யூஸ் பண்ண மாட்டாங்க. 'நீங்க நீங்களா இருக்கணும்’னு அவங்ககிட்ட கண்டிப்பா சொல்லியிருக்கேன். சமீபகாலமா நான் சினிமா உலகத்தையே மறந்துதான் இருந்தேன். ஆனா, சண்முகபாண்டியனுக்காகத்தான் சினிமா பார்க்கிறேன். அதே சமயம் இன்னைக்கு மட்டும்தான் நான் சினிமாவைப் பத்திப் பேசுவேன். நாளையில இருந்து என் சம்சாரம் பேசும். நான் பேச மாட்டேன். எனக்கு முழுநேர அரசியல் இருக்கு. என் கட்சி வேலைகள் இருக்கு. 'நீங்க ஏன் ஏற்காடுல நிக்கலை. பயமா?’னு சிலர் கேட்பாங்க. யாருக்குப் பயம்? அவங்களுக்குத்தான் பயம். அதனாலதான் ரைட்ஸ் வாங்கிவெச்சும் அவங்க சேனல்கள்ல என் படங்களைப் போட மாட்டேங்கிறாங்க. எங்கே, ஜெயலலிதாவுக்கோ கலைஞருக்கோ தைரியமிருந்தா, என் படங்களை ஒளிபரப்பச் சொல்லுங்க... பார்ப்போம். நான் நடிச்ச எத்தனை படங்களை வாங்கி முடக்கிவெச்சிருக்காங்க தெரியுமா? நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படலை. ஏன்னா, மேல தெய்வம் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கு!  

“குடிச்சா என்ன தப்பு... அடிச்சா என்ன தப்பு?”

டெல்லிக்கு நான் போயிருந்தேன். அங்கே, 'ஆங்ரி யங்மேன்’னு அரவிந்த் கெஜ்ரிவாலைச் சொல்றாங்க. அப்ப நான் கோபப்படக் கூடாதா? நான் கோபப்பட்டா தப்பாம். அவங்க கோபப்பட்டா, அது ஆங்கிரியாம்! என்னய்யா இது நியாயம்? மத்தவங்க செய்ற தப்பெல்லாம் வெளியே தெரியாது. ஆனா, 'குடிக்கிறார்’னு என்மேல பழி போடுவாங்க. குடிச்சா தப்பா? நீங்கதான் தமிழ்நாடு பூரா கடை திறந்துவெச்சிருக்கீங்க. அது தப்பில்லையா? ஏன் திறக்கிறீங்க? அப்புறம் ஏன் குடிக்கிறான்னு பேசுறீங்க?

என் பிள்ளைங்க, 'என்ன டாடி செய்யணும் சொல்லுங்க’னு நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவாங்க. இதுல பெரிய பியூட்டி என்னன்னா, ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க இருந்தா பிரச்னை வரும்னு சொல்வாங்க. ஆனா, எங்க வீட்ல அந்தப் பிரச்னையே கிடையாது. (எந்த 'ரெண்டு ஆண் பிள்ளை’களால் பிரச்னை என்று புரிந்துகொண்டதுபோலக் கிளம்பியது ஆரவாரக் கைதட்டல்!)  

நான் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா, தைரியமானவன். நான் எதுக்கும் கையேந்தி நிக்க மாட்டேன். இடத்தை, கிடத்தை அடமானம் வெச்சாவது பொழப்பை நடத்துவேன். 'கட்சில இருந்து ஏன் சார் அவங்க விலகிட்டாங்க?’னு கேக்கிறாங்க. அது கட்சி விவகாரம். நான் யார்கிட்டயும் காசு கேக்கிறேனா? கட்சியை வளர்க்க நான் படுறபாடு எனக்கும், என் தொண்டர்களுக்கும்தான் தெரியும்!

நான், என் தொண்டர்களை உரிமையாத் திட்டுவேன்; அடிப்பேன்; இன்னும் எது வேணும்னாலும் செய்வேன். யாரோ ரோட்ல போற ஆளையா அடிக்கிறேன்? என் கட்சிக்காரங்களைத்தானே அடிக்கிறேன். என் வீட்ல இருக்கிறவங்க மாதிரிதானே அவங்க?  'அடிக்கிறார்... அடிக்கிறார்’னு ஏன்யா கூப்பாடு போடுறீங்க. தப்பு பண்ணாக் கோபம் வரத்தானே செய்யும். கோபத்தை கோபம்னுதான் சொல்லணும். அதை ஏன் அரசியல் நாகரிகம்னு சொல்லணும். அட, என்னய்யா அரசியல் நாகரிகம்? இப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டை ஏமாத்துறீங்க. இந்தியா முழுக்க இப்படித்தான் பூராப் பயலும் ஏமாத்துறான்!  

இப்ப நான் பல வேலைகள்ல இருக்கேன். அதனால ஏதாவது கேட்டா சள்ளுபுள்ளுனு விழுவேன். அதைத்தான் தலைப்பாப் போடுவீங்க....

ஆங்.... அவ்வளவுதான். எல்லாருக்கும் நன்றி வணக்கம்!''