Published:Updated:

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

##~##

ன்றென்றும் ஈகோ கொண்ட ஒருவன் நட்பு, காதலை இழந்து தடுமாறுவதே... என்றென்றும் புன்னகை!

செம திக் ஃப்ரெண்ட்ஸ் ஜீவா, சந்தானம், வினய். திருமணம் தங்கள் நட்புப் பாலத்தை உடைத்துவிடும் என்பதால், திருமணமே வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் நண்பர்கள். ஆனால், நட்பு வாக்குறுதியை மீறி சந்தானமும் வினய்யும் திருமணம் முடிக்க, தனிமையில் தவிக்கிறார் ஜீவா. அப்போது தோள் கொடுக்கும் த்ரிஷாவின் நட்பு, மனசுக்குள் காதல் கஜல் ஒலிக்க, இருவருக்கும் காதல் பூத்ததா, ஜீவா நண்பர்களுடன் சேர்ந்தாரா என்பது பின் பாதிக் கதை!

சிம்பிள் ஒன் லைன். இதில், எந்தப் பெண்ணையும் பிடிக்காத ஜீவா, எல்லாப் பெண்களையும் கலாய்க்கும் சந்தானம், எல்லாப் பெண்களையும் முயற்சிக்கும் வினய்... என வெரைட்டி கேரக்டர்கள் பிடித்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அஹமத். 'நாம என்னைக்கும் மொட்டைப்பசங்களாவே இருந்திருவோம்’ என்று நண்பர்கள் மூவரும் முடிவெடுக்கும்போதே கதை இதுதான் என்று புரிந்துவிடுகிறது. ஆனாலும் பின்தொடரும் த்ரிஷாவின் பரிதவிப்பு, ஆண்ட்ரியாவின் ஆளுமை, நண்பர்களின் திருமண அவஸ்தைகள் என ஆங்காங்கே கலகல அத்தியாயங்கள்.  

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

ஈகோ இளைஞனாக ஜீவா... செம ஃபிட். சர்வதேச மாடல் ஆண்ட்ரியாவை 'ஜஸ்ட் லைக் தட்’ அதட்டும் இடத்திலும், த்ரிஷாவை விமான சிநேகம் என்று அறிமுகப்படுத்தும் இடத்திலும் ஈகோ ஈட்டியை நச்செனப் பாய்ச்சுகிறார். ஆரம்பம் முதல் வெறுப்பு, கோபம், விரக்தி என்றே முகம் காட்டும் ஜீவா, வெளிநாட்டில் த்ரிஷா மேல் உண்டாகும் திடீர் பாசத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் இடங்களில்... க்ளாஸ்!

நடப்பதையெல்லாம் அம்மா, தங்கையிடம் ஸ்டேட்டஸ் அப்டேட் சொல்லும் மிடில் க்ளாஸ் பெண்ணாக த்ரிஷா... ஸோ க்யூட். ஜீவாவிடம் இயல்பாகக் கனிவதும், பின் கோபத்தில் கடுகாக வெடிப்பதும் என இயல்பாக ஈர்க்கிறார்.  

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

நண்பர்களில் ஒருவர் வினய். அவ்வளவே!  மொத்தப் படத்தையும் தாங்கி நிற்பது சந்தானம்.  நள்ளிரவில் சோதனை செய்யும் போலீஸிடம், ''இவர் டிரைவர் இல்லை... கார் ஓனர்'' என்று சதாய்ப்பது, ''பொண்ணு எப்படி?'' என்று கேட்கும் நாசரிடம், ''ஒரு தடவை பார்க்கலாம் அங்கிள்'' என்று புலம்புவது, ''நான் குடிக்கலையே'' என்று சொல்லிவிட்டு 45 டிகிரி சரிந்து நடந்து காபியில் ஷ§கர் போட்டுக் குடிப்பது என செம காமெடி அலம்பல். திமிரும் தினவுமாக ஆண்ட்ரியா... அதட்டல் குயின்!

முதல் பாதி ஜாலி, இரண்டாம் பாதி ஃபீலிங்ஸ் என அமைத்தது எல்லாம் ஓ.கே. ஆனால், இன்னும் எத்தனை காலம்தான் பீர், ஃபிகர், பிரிவு என்று ஜல்லியடிப்பது?

'நம்ம சென்னையா இது?’ என்று சந்தேகப்படவைக்கும் மதியின் ஒளிப்பதிவு, ஜீவா வீட்டின் பால்கனி தாண்டி எட்டிப் பார்க்கும்போது, விசில் கிளப்புகிறது. 'ஓ பிரியா... பிரியா’ பாடலில் மட்டும் ஹாரிஸ் டச்.  

'ஈகோ மறந்து என்றென்றும் ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற ட்ரீட்மென்ட்டுக்காக, நீட்டலாம் ஒரு புன்னகைப் பூங்கொத்து!

- விகடன் விமர்சனக் குழு