Published:Updated:

“சினிமாவில் வெற்றி-தோல்வினு எதுவும் இல்லை!”

கி.கார்த்திகேயன்

“சினிமாவில் வெற்றி-தோல்வினு எதுவும் இல்லை!”

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

 ஸ்வெட்ஷர்ட், ஸ்லிம் ஃபிட் டிரவுசர், கேஷ§வல் ஷூ, இத்தாலியில் டூயட்... - டிரெண்டி-டிவென்ட்டி ஆட்டத்துக்கு ஏற்ப ஆளே மாறிவிட்டார் சசிகுமார்!

ஸ்விட்சர்லாந்து, இத்தாலியில் படம் பிடிக்கப்பட்ட 'பிரம்மன்’ பட டூயட்களின் 'ரஃப் கட்’ ப்ளே செய்துவிட்டு நம் ரியாக்ஷன் எதிர்பார்க்கிறார். '' 'சுப்ரமணியபுரம்’ சசியா இது?'' என்றதும், ''அப்பாடா!'' என்று ரிலாக்ஸ் ஆகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அதுதாங்க வேணும்... வரிசையா லுங்கி, அரிவாள், முறுக்குமீசைனே நடிக்கவும்... நான் ஏதோ ஆளே அப்படித்தான்னு இண்டஸ்ட்ரிலயே பலர் நினைச்சுட்டு இருக்காங்க. கொடைக்கானல்ல இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிச்ச பையன்னா, யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க. அதான், 'நாங்களும் மும்பை போவோம்ல... ஹீரோயின் பிடிப்போம்ல. நாங்களும் ஸ்விட்சர்லாந்து போவோம்ல... டூயட் ஆடுவோம்ல’னு அதிரடியா ஒரு படம்!'' - குறும்பாகச் சிரிக்கிறார் சசி.

'' 'நம்ம வீட்டுப் பையன் சசி’னு ஒரு 'குட் பாய்’ இமேஜ் உங்களுக்கு இருக்கு. அதுல இருந்து வித்தியாசமா டிராவல் பண்றீங்களா இந்தப் படத்துக்காக?''

''அட, அந்த நம்ம வீட்டுப் பையன்... காலேஜ், வேலைனு போறப்ப அழகழகா டிரெஸ் பண்ணிபான்ல... அப்படி ஒரு படம். கலர் கலரா டிரெஸ், ஃபாரீன் டூயட்னு இருந்தாலும் என் படங்கள் எந்த லைன்ல இதுவரை இருந்துச்சோ, அதே மாதிரிதான் 'பிரம்மன்’. 'சுப்ரமணியபுரம்’ சந்துக்குள்ள சுத்திட்டு இருந்தவனை ஸ்விட்சர்லாந்து பனிமலைக்குக் கூட்டிட்டுப் போனதுக்குக் காரணம், படத்தோட இயக்குநர் சாக்ரடீஸ். இந்தக் கதையில் நான்தான் நடிக்கணும்னு விடாப்பிடியா நின்னு, ரெண்டு மூணு வருஷம் காத்திருந்து, எனக்கு மேத்ஸ் சொல்லிக்கொடுத்த வாத்தியார்ல இருந்து எடிட்டர் ராஜா முகமது வரை சிபாரிசுக்குப் பிடிச்சு இந்தக் கதை சொன்னார். முதல் 20 நிமிஷம் தாண்டினதுமே, 'ஆஹா கடைசி வரை இந்தக் கதை இதே ஃப்ளோவில் இருக்கணுமே’னு எனக்குப் பதட்டமாயிருச்சு. தம்பி ஏமாத்தலை... நச்னு ஆரம்பிச்சு திக்னு முடிச்சுட்டார்.

“சினிமாவில் வெற்றி-தோல்வினு எதுவும் இல்லை!”

மியூசிக் தேவிஸ்ரீ பிரசாத், டான்ஸ் ராஜு சுந்தரம் மாஸ்டர், காமெடிக்கு சந்தானம் ப்ளஸ் சூரி, ஸ்டன்ட்டுக்கு சில்வா, மும்பைப் பொண்ணு ஹீரோயின்னு அவர் அடுக்கினப்பவே இது வேற லெவல் பட்ஜெட்ல கலக்கும்னு நினைச்சேன். அவ்வளவு அழகா வந்திருக்கு படம்!''

''ஆனா, ஃபாரீன் டூயட், சந்தானம் - சூரி காமெடிங்கிறது வழக்கமான ஃபார்முலா பட சாயல் தருமே?''

''இருக்கட்டுமே! சிம்பிளா சொல்லணும்னா... படைக்கிறவன் பிரம்மன். அவ்ளோதான் படம். அதில் குடும்ப சென்ட்டிமென்ட், காமெடி, நட்பின் அருமை, சின்ன மெசேஜ்னு எப்பவும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான படம். ஒரே மாதிரி நடிச்சுட்டு இருந்தா, 'இவனுக்கு இது மட்டும்தான் வருமோ’னு சொல்வாங்க. வித்தியாசமா ஏதாவது பண்ணா, 'உங்களுக்கு அதுதானே செட் ஆகும்’னு அறிவுரை சொல்வாங்க. எல்லாத்தையும் கேட்டுக்கலாம். ஆனா, நம்ம மனசுக்கு எது சரியோ அதை அழகாச் செய்யலாம்!''

''தொடர்ந்து ஹீரோவா நடிப்பதால்தானே இப்படி வித்தியாசமா நடிக்க வேண்டியிருக்கு. ஒரு படம் இயக்கம்... அடுத்த படம் நடிப்புனு ஃபிக்ஸ் பண்ணிக்கலாமே!''

'' நான் 'சுப்ரமணியபுரம்’ இயக்கி நடிச்சேன், ரசிச்சாங்க. 'நாடோடிகள்’ நடிச்சேன், கை தட்டி னாங்க. 'பசங்க’ தயாரிச்சேன், கொண்டாடினாங்க. 'ஈசன்’ல நடிக்கலை, இயக்கினேன். 'நல்ல முயற்சி’னு கை குலுக்கினாங்க. இப்படி எல்லா ஆட்டமும் ஆடின பிறகு யோசிச்சுப் பார்த்தா, சசிகுமாருக்கு மார்க்கெட் வேல்யூ என்னன்னு எனக்கே தெரியலை. ஏன், இண்டஸ்ட்ரியிலயும் யாருக்கும் தெரியலை. 'எனக்கு சம்பளம் எவ்வளவு? எதுக்காக இந்தச் சம்பளம்?’னு எனக்கே குழப்பமாயிருச்சு. அதான், மத்த எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு கொஞ்ச நாள் நடிக்க மட்டும் செய்வோம்னு 'போராளி’ ஆரம்பிச்சு இப்போ 'பிரம்மன்’ வரை நடிச்சுட்டிருக்கேன்.

என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாங்க, நான் என்ன செய்யணும்னு இப்போ எனக்குத் தெளிவான ஒரு ஐடியா இருக்கு. சீக்கிரமே ஒரு படம் இயக்குவேன். அதுக்கான வேலைகளும் நடந்துட்டு இருக்கு. நடுவில் 'தலைமுறைகள்’ தயாரிச்சது ரொம்பத் திருப்தியான விஷயம்!''

“சினிமாவில் வெற்றி-தோல்வினு எதுவும் இல்லை!”

'' 'தலைமுறைகள்’ படத்துக்கான வரவேற்பு, விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

'' 'தலைமுறைகள்’ சினிமா என்னைப் பொறுத்தவரை படம் இல்லை... ஒரு பதிவு! தாய்மொழி மேல் எனக்கு இருக்கும், நம்ம எல்லாருக்கும் இருக்க வேண்டிய அக்கறை அது. அந்தப் படத்தை வெச்சு புகழ், வசூல், பெருமை தேட நான் முயற்சிக்கலை. அது எல்லாத்தையும் எனக்குக் கொட்டிக் கொடுத்த சினிமாவுக்கு நான் பதிலுக்கு ஏதாவது செய்யணுமேனு நினைச்சுச் செஞ்சது. நான் ரொம்ப மதிக்கிற பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் சார் போன்ற சீனியர்கள் படம் பார்த்துட்டு என்னைப் பாராட்டலை. 'நன்றி’னு ஒரு வார்த்தை சொன்னாங்க. அதுக்கு மேல் எனக்கு என்னங்க வேணும்!''

''மணிரத்னம், கௌதம் மேனன், செல்வராகவன்... இன்னும் பல சீனியர்கள் படங்கள் வரிசையா அடி வாங்குதே... சினிமாவில் வெற்றிக்கான ஃபார்முலா மாறிடுச்சா..?''

“சினிமாவில் வெற்றி-தோல்வினு எதுவும் இல்லை!”

''ரசிகர்கள், ஜூனியர் - சீனியர்னு பார்க்கிறதில்லைங்க. எங்கேயோ நாகர்கோவில் தியேட்டர்ல படம் பார்த்துட்டு வெளியே வர்ற ஒரு ரசிகன்கிட்ட, 'படம் எப்படி இருக்கு?’னு கேட்டா, 'நல்லா இருக்கு... நல்லா இல்லை. பிடிச்சிருக்கு... பிடிக்கலை’னு இப்படித்தான் ஏதாவது சொல்வான். ஒரு படத்தை டிஸ்டிரிபியூட் பண்ண விநியோகஸ்தர்கிட்ட 'பட வசூல் எப்படி?’னு கேட்டா, 'லம்ப் லாபம்... கையைக் கடிக்கலை’... இப்படித்தான் ஏதாவது சொல்வார். இந்த ரெண்டு பேரும்தான் ஒரு சினிமாவுக்கு முக்கியம். இவங்களே சினிமா பத்தி பேசிக்கிறப்ப 'வெற்றி- தோல்வி’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தலை. நாம ஏன் அதைப் பத்தி கவலைப்படணும்!

விளையாட்டுலதான் வெற்றி, தோல்வி எல்லாம். சினிமால அதெல்லாம் இல்லை. ஒவ்வொரு சினிமாவும் ஒரு வாழ்க்கை. இஷ்டப்பட்டா அந்த வாழ்க்கையை வாழலாம். இல்லைன்னா அந்த உலகத்துக்குள் போகாம இருக்கலாம். தன் ரசனையை ரசிகன் மனசுல பதியவைக்கிறது ஓர் இயக்குநரின் குறிக்கோள். அது ஒரு படத்தில் எடுபடலைனா, அடுத்த படத்தில் இன்னும் ஃபோர்ஸா சொல்லிட்டுப் போகலாம். கௌதம் மேனன், செல்வராகவன் எல்லாம் இனிமேதான் தங்களோட மாஸ்டர் பீஸ் இன்னிங்ஸ் ஆடப் போறாங்க... பார்த்துட்டே இருங்க!''

''கரெக்ட்தான். ஆனா, நீங்க சொல்ற அதே ரசிகர்கள்தான் தங்களை ஈர்க்காத சினிமாவை சமூக வலைதளங்களில் திட்டி, குட்டி விமர்சிக்கிறாங்களே... கவனிக்கிறீங்களா?''

''நான் ஃபேஸ்புக், ட்விட்டர்னு எதுலயும் இல்லை. என் படம் ஓடுற தியேட்டர்ல என்ன நடக்குது... அது மட்டும்தான் என் கவலை! ரசிகர்களின் மனநிலை தெரியணும்னா, நான் தியேட்டருக்குப் போய் தெரிஞ்சுக்கப்போறேன். அங்கே சினிமா பிடிச்சவங்க, பிடிக்காதவங்க... என்னைப் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க... ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எல்லாருமே இருக்காங்க. அங்கே ஃபேஸ்புக், ட்விட்டரைவிடக் கடுமையான விமர்சனங்கள் கிடைக்கும். படம் பிடிச்சா, கைதட்டிக் குமிப்பாங்க. பிடிக்கலையா... 'ஆப்பரேட்டரு... படத்தை எப்போ போடுவ’னு கமென்ட் அடிப்பாங்க. அந்த பப்ளிக் பல்ஸ் போதும்.

'நீங்க நடிப்பீங்கனு எதிர்பார்த்துதான் 'ஈசன்’ பார்க்க வந்தோம். அந்தப் படத்தில் நீங்க நடிச்சிருக்கணும். அக்கா-தம்பிக் கதையா இல்லாம, அண்ணன்-தங்கச்சிக் கதையா இருந்திருந்தா, படம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்’னு என் முகத்துக்கு நேரா சொல்லிட்டுப் போனாங்க. 'அட ஆமால்ல... இது எனக்குத் தோணாமப் போச்சே’னு மண்டையில் சம்மட்டி அடிச்சது. அக்கா-தம்பிப் பாசம் பழைய லைன்தான். ஆனா, அதுல 'ஈசன்’ பேக்கிரவுண்ட் புதுசா இருந்திருக்கும். 'இந்த மரமண்டைக்கு இது தோணலையேடா’னு இப்போ வரைக்கும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கேன். அதனால் ரசிகன் மனசு தெரிஞ்சுக்க எனக்கு தியேட்டர் சீட் போதும்... ஃபேஸ்புக் தேவை இல்லை!''

''பாலா படத்துல நடிக்கிறீங்களே... ஹோம்வொர்க் ஆரம்பிச்சாச்சா?''

''அந்தப் படத்தைப் பத்தி அண்ணன்தான் சொல்லணும். ஒண்ணே ஒண்ணு... சினிமாவுக்கு வந்த பிறகு நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கிறது இப்போதான்!''