Published:Updated:

“தலைவர் ராம்கியை அடிச்சுக்க முடியாது!”

க.நாகப்பன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

“தலைவர் ராம்கியை அடிச்சுக்க முடியாது!”

க.நாகப்பன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

 பிக் எஃப்.எம்-மில் கழுவிக் கழுவி ஊற்றுதல் எனக் கலகல கலாட்டா செய்துகொண்டிருந்த பாலாஜி, இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். சினிமாக்களை செம ஜாலியாகக் கிண்டல் விமர்சனம் செய்பவருக்கு என்ன ஆச்சு?

''30,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஐ-போன் மார்க்கெட்டுக்கு வந்த உடனே அதை அக்குவேறு ஆணிவேராப் பிரிச்சு மேய்ஞ்சு ரெவியூ பண்றாங்க. ஆனா, 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்த்த சினிமாக்களை விமர்சிச்சா மட்டும் விரோதி போலப் பார்க்கிறாங்க. நான் இந்த ஹீரோ டேட்டிங் போறார், இவ்ளோ சம்பளம் வாங்குறார்னு பெர்சனல் விஷயங்களை எப்பவும் பேசினதே இல்லை. ஆனா, நேர்மையா ஒரு சினிமாவை விமர்சிச்சா, அதை தப்புனு சொல்றாங்க. நான் பேசுற ஸ்டைல்தான் பிரச்னைனு சொல்றாங்க. படத்துல இல்லாத சீன் எதையும் நான் பேசுறதே இல்லை. அது எப்படி, நான் படத்துல பார்க்கிற ஒரு சீனை வார்த்தைகளில் விவரிச்சா தப்பாத் தெரியுதுனு புரியலை. ஒரு படம் நல்லா இல்லைனு நான் சொன்னா, அதை ஆயிரக்கணக்கான பேர் லைக், ஷேர் பண்றாங்க... திருப்பித் திருப்பிக் கேக்கிறாங்கன்னா, அதுக்குக் காரணம் ஹ்யூமர் மட்டும் இல்லை. படத்தைப் பத்தின அவங்க கருத்தை நானும் பிரதிபலிச்சிருக்கேன்னு அர்த்தம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தலைவர் ராம்கியை அடிச்சுக்க முடியாது!”

''உங்க ஒருத்தரால் ஒரு சினிமாவோட முடிவை நிர்ணயிக்க முடியுமா?''

''நானும் அதையேதான் சொல்றேன்! என்னைவிட மோசமா சினிமாக்களை சும்மா கிழிகிழிகிழினு கிழிக்கிறவங்க ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்காங்க. ஆனா, ரேடியோவில் வேலை பார்க்கிறதால நான் சொல்றதைக் கேட்டு ஏதோ தமிழகமே ஒரு படத்தை பகிஷ்கரிக்கிற (ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்... வார்த்தை சரிதானா பாஸ்?) மாதிரி பில்ட்-அப் கொடுக்கிறாங்க. பிக் எஃப்.எம்-ல ஒரு போட்டி நடத்தினாங்க. 'பாலாஜி அசத்தல் பரிசுகளோட காத்துட்டு இருக்கான். அண்ணா நகர் பார்க் வாங்க... நிச்சயப் பரிசு காத்திருக்கு’னு காலையில் இருந்து கூவிக் கூவிக் கூப்பிட்டா, ஏழு பேர் வந்தாங்க. நம்புங்க... ஏழே ஏழு பேர்தான் வந்தாங்க. சென்னை முழுக்க 40 லட்சம் நேயர்கள் ரேடியோ நிகழ்ச்சிகள் கேக்கிறாங்க. அப்போ 10,000 பேராவது அண்ணா நகர் பூங்காவுக்கு வந்திருக்கணும்ல! ஆக, பரிசு வாங்கிறதுக்கே நம்ம பேச்சைக் கேட்காதவங்க, படம் பார்க்கிறதுல எப்படி நம்ம பேச்சைக் கேட்பாங்க? என்ன, இங்கே நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லைனு யாருமே சொல்றது இல்லை. ஒரு நாள்கூட ஓடாத படத்தையும் சூப்பர் ஹிட் சொல்லித்தான் நம் ஆட்களுக்குப் பழக்கம். அப்படி இருக்கிறப்ப, நான் ஒருத்தன் உள்ளதை உள்ளபடி சொல்றது பலருக்கு காண்டா இருக்கு. ஆனா, கோடிக்கணக்கான பட்ஜெட்ல எடுத்த படம் என் ஒருத்தனோட விமர்சனத்தால் கலெக்ஷன் அள்ள மாட்டேங்குதுனு சொன்னா, நானே கெக்கேபிக்கேனு சிரிச்சிடுவேன். இட்ஸ் த காமெடி ஆஃப் த சென்ச்சுரி யூ ஸீ!''

''அடுத்து என்ன?''

''ஒரு விஷயத்தை நல்லாப் பண்றோம்னு அதே விஷயத்தையே திரும்பத் திரும்ப பண்ணிட்டு இருக்க முடியுமா? நான்கூட ரேடியோவிலேயே இருந்திடலாம்னுதான் நெனைச்சேன். ஆனா, 360 டிகிரியிலேயும் நம்ம கிரியேட்டிவிட்டியைத் தட்டிவிட்டாத்தான், முழுமையான மீடியா பெர்சனா இருக்க முடியும். அதான் பிக் எஃப்.எம்-ல 'பிக் டாக் வித் பாலாஜி’, ஜி தமிழ்ல 'ஒய் திஸ் கொலவெறி’ காம்பியர், 'வடகறி’ படத்தில் ஜாலி கேரக்டர்னு வேற வேற ப்ளாட்ஃபார்ம்ல ஓட ஆரம்பிச்சுட்டேன்!''

''சரி நீங்க சொல்லுங்க... 2013-ல நீங்க பார்த்ததில் உங்களுக்குப் பிடிச்ச சினிமாக்கள் என்னென்ன?''

''இந்தியில் 'லஞ்ச் பாக்ஸ்’, 'ஷிப் ஆஃப் தீசிஸ்’, 'கை போச்சே’. தமிழ்ல 'சூது கவ்வும்!''’

''2013-ன் சூப்பர் நடிகர் யார்... சுமார் நடிகர் யார்?''

''சூப்பர் நடிகர் என் தலைவன் ராம்கி.ஆஃப்டர் எ லாங் கேப் 'மாசாணி’னு ஒரு படத்துல பட்டையைக் கிளப்பியிருப்பார். டி.வி-யில் டிரெய்லர் ஓடினப்ப, 'தலைவா... அள்ளுது தலைவா. தள்ளுது தலைவா’னு சவுண்ட் விட்டுட்டே இருந்தேன். இன்னும் எத்தனை பேர் வந்தாலும் நம்ம தலைவனை அடிச்சுக்க முடியாது. சுமார் நடிகர் நான்தான். 'தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சூப்பரா சொதப்பியிருப்பேன். 473-வது டேக்ல ஓ.கே. வாங்குற அளவுக்கு நடிச்சிருப்பேன். விமர்சனம் பண்றதுக்குக் கூட தகுதி இல்லாத நடிப்பு. யப்பா... செம சேஃப்ட்டியா பதில் சொல்லிட்டேன்ல!''