Published:Updated:

“வாங்கஜி... வாங்கஜி... டீம்வொர்க் பண்ணலாம்ஜி!”

எஸ்.கலீல்ராஜா

“வாங்கஜி... வாங்கஜி... டீம்வொர்க் பண்ணலாம்ஜி!”

எஸ்.கலீல்ராஜா

Published:Updated:
##~##

 ''ஃப்ரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ல. ஹாஃப் சாப்பிட்டா கூல் ஆகிடுவாப்ல!'' - 2013-ல் சமூக வலைதளங்களில் அதிகம் பரவிய பன்ச்களில் இதுவும் ஒன்று!

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் 'சுமார் மூஞ்சி குமாரு’ விஜய்சேதுபதிக்காக ஹாஃப் பாட்டில் சரக்குத் தேடி அலையும் 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரா’க இந்த ஒற்றை வரி வசனத்தை பலப்பல மாடுலேஷன்களில் கதறக் கதறச் சொல்லிக்கொண்டே இருப்பார் டேனியல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தந்தி டி.வி-யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்கும் டேனியல், இப்போதெல்லாம் யார் எவரைச் சந்தித்தாலும் இந்த பன்ச் அடித்த பிறகுதான் பேச்சுவார்த்தையே தொடங்குகிறதாம். நானும் பேசச் சொல்லிக் கேட்டேன். செம ஃபீலிங்ஸ்!

''என் தாத்தா பேரு கஷ்மீர். கூத்து கட்டுறது அவருக்குப் பொழுதுபோக்கு. அவர்கிட்ட இருந்து தான் நடிப்பைக் கத்துக்கிட்டேன். எங்கேயாவது நடிச்சு நம்மளை நிரூபிக்கலாம்னு பார்த்தா, எங்கேயும் வாய்ப்பு கிடைக்கலை. எனக்கு சினிமா ஹீரோ மாதிரி ஹேர்ஸ்டைல் வெச்சுக்கணும்னு ஆசை. அதனால அப்போ 'காதல் தேசம்’ அப்பாஸ் மாதிரி ஹேர்ஸ்டைல் வெச்சேன். அதைப் பார்த்த என் பி.டி. மாஸ்டர், 'பரதேசி’ அதர்வா மாதிரி பண்ணிவிட்டுட்டார். 'இவனுக்கு தலை முடியில் பிரச்னை. ஹேர் கட் பண்ணினா, பொடுகு வரும். தலைவலி வரும்’னு ஒரு டுபாக்கூர் டாக்டர்கிட்ட 100 ரூபாய் கொடுத்து மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வாங்கி ஸ்கூல்ல கொடுத்துட்டு, அப்பாஸ் ஹேர்ஸ்டைலோட திரிஞ்சேன். அப்படி வளர்த்ததுதான் இந்த ஹேர் ஸ்டைல்.

“வாங்கஜி... வாங்கஜி... டீம்வொர்க் பண்ணலாம்ஜி!”

நடிப்பு ஆசையோடவே சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தேன். அங்கேதான் தியேட்டர் ப்ளே குரூப்ல சேர்ந்து நடிச்சேன். அப்போ 13 பைபிள் கதைகளை எடுத்துக்கிட்டு 72 மணி நேரம் நாடகம் போட்டோம். அதை கின்னஸ் சாதனையா பதிவானதோடு, சிறந்த நடிப்புக்கு எனக்கு விருதும் கொடுத்தாங்க. அதுதான் நடிகனா எனக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம்!

அப்போ நான் 113 கிலோ வெயிட் இருந்தேன். 'எடை குறையணும்னா பாக்ஸிங் கத்துக்க’னு ஃப்ரெண்ட் சொன்னதைக் கேட்டு, ராயபுரத்துல பாக்ஸிங் கிளாஸ் போனேன். ரெண்டு வாரமா 'ஒன்... டூ’, 'ஒன்... டூ’ மட்டும் கத்துக்கிட்டேன். 'ஒன்’னா கையை முன்னாடி கொண்டுபோகணும். 'டூ’ன்னா கையைப் பின்னாடி இழுக்கணும். அவ்வளவுதான். மூணாவது வாரத்துல ஒருநாள் நிறையப் பேர் கிளாஸுக்கு வரலை. 'ஏன் இவ்வளவு பேர் வரலை’னு யோசிச்சுட்டு இருக்கும்போது மாஸ்டர் வந்து இருந்த பசங்களை ரெண்டு குரூப்பாப் பிரிச்சார். 'ரெண்டு குரூப்பும் இப்போ சண்டை போடப் போறீங்க’னு எட்டாவது படிக்கிற ஒரு பையனோட என்னை மோதவிட்டார். சின்னப் பையன்தானேனு நான் தெம்பா 'ஒன்’ சொல்லி கையை நீட்டுறதுக்குள்ள, அவன் ஒம்போது குத்து குத்திட்டான். கண்கலங்கிட்டேன்.

'அண்ணனை ஏன்டா அடிச்சே?’னு அவன்கிட்ட கேட்டுட்டே மாஸ்டரைப் பார்த்தா, 'நீ ப்ளாக் பண்ணலைல... திருப்பி அடி’னு சொன்னார். ஆவேசமாகி 'ஒன்ன்ன்’னு கத்திட்டே கையை நீட்டுறேன். அவன் ஓங்கி மூக்குல விட்டான் ஒரு நாக் அவுட். பொறி கலங்கிப்போச்சு. கொஞ்ச நேரத்துக்குக் கண்ணு தெரியலை. 'என்னடா சுவத்தைப் பார்த்துக் குத்திக்கிட்டு இருக்க’னு எல்லோரும் சிரிச்சுட்டாங்க. அதோட பாக்ஸர் கனவை மூட்டைக் கட்டித் தூக்கிவெச்சுட்டு நடிப்பைப் பார்ப்போம்னு கிளம்பிட்டேன்.

“வாங்கஜி... வாங்கஜி... டீம்வொர்க் பண்ணலாம்ஜி!”

அப்போ வெற்றிமாறன் சார் 'பொல்லாதவன்’ படத்தை பாதி முடிச்சுட்டார். அவரைப் பார்க்கிறதுக்காக ரெண்டு, மூணு தடவை போனப்ப அவரோட உதவியாளர்கள் என்னை உள்ளேயே விடலை. ஒருநாள் யார்கிட்டயும் சொல்லாமக் கொள்ளாம நேரா அவர் ரூமுக்கே போயிட்டேன். 'உங்க படம் பாதி முடிஞ்சதுனு கேள்விப்பட்டேன். சரி, உங்களையாவது பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். ஆல் தி பெஸ்ட்’னு சொல் லிட்டுக் கிளம்பிட் டேன். என்னமோ அவருக்கு என்னைப் பிடிச்சுப்போச்சு. ஷூட்டிங்ல அங்கங்க வர்ற மாதிரி நடிக்க வெச்சார். அப்புறம் 'பையா’, 'ரௌத்ரம்’ல சின்னச் சின்ன ரோல்ல நடிச்சேன். ஆனா, நமக்கு கத்தரியில கண்டம் போல. எல்லாம் எடிட்டிங்ல போயிருச்சு.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துல எனக்கு ரொம்பச் சின்ன ரோல்தான். என் நடிப்பைப் பார்த்துட்டு இயக்குநர் கோகுல் சார், 'இது நல்லா வொர்க் அவுட் ஆகும்’னு நீளமாக்கினார். எதிர்பார்த்த மாதிரியே அந்த காமெடி செம ஹிட். பப்புக்கு போனா, பசங்களைவிட பொண்ணுங்க வந்து 'அந்த டயலாக்கைச் சொல்லுங்க’னு பேஜார் பண்றாங்க. பசங்க மிட்-நைட் போதையில, 'மாப்ள... அந்த டயலாக்கைச் சொல்லு’னு போன்ல உயிரை எடுப்பாங்க. அதையெல்லாம்கூட சமாளிச்சிருவேன். சிலர் அந்தப் படம் மாதிரி உதட்டுக்குப் பக்கதுல உதட்டை வெச்சு 'ஃப்ரெஷ்ஷா இருக்கீங்கஜி, ஃப்ரெஷ்ஷா இருக்கீங்கஜி’னு தாடியெல்லாம் தடவுவாங்க. அப்போ என் கண்ல தெரியும் பாருங்க... அதான் மரண பயம்!

ஜிம்மே பழியா கிடந்து 74 கிலோவா வெயிட் குறைச்சிட்டேன். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்துல தனுஷ் நடிக்கிற படம், கோகுல் இயக்கத்துல கார்த்தி நடிக்கிற படம்னு  நல்ல கேரக்டர்கள் பண்றேன். இத்தனை வருஷம் உழைச்சதுக்கு இப்போதான் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. 'வாங்கஜி... வாங்கஜி... டீம் வொர்க் பண்ணலாம்ஜி’னு சந்தோஷமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்!'' - சிரிக்கும் டேனியலின் கண்களில் வெற்றிக்கான வெளிச்சம் தெரிகிறது!