ஸ்பெஷல் -1
Published:Updated:

கோலி சோடா - சினிமா விமர்சனம்

கோலி சோடா - சினிமா விமர்சனம்

##~##

 முகமற்ற நான்கு விடலைப் பசங்கள், தங்களுக்குக் கிடைத்த முகவரியை, அடையாளத்தை மீட்டெடுக்கப் போராடும் அர்த்தமுள்ள கதை!  

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மூட்டைகள் தூக்கும் நான்கு விடலைகள். தங்கள் 'காட் மதர்’ ஆச்சியின் சொல் பேச்சு கேட்டு, வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். மார்க்கெட்டை பல வருடங்களாகத் தன் காலடியில் வைத்திருக்கும் கந்துவட்டி நாயுடுவின் குடோனில் மெஸ் திறக்கிறார்கள். பிசினஸ் நூல் பிடித்து ஏறி வரும் நேரத்தில் நாயுடுவின் அடியாள் பழக்கதோஷத்தில் அந்த மெஸ்ஸை முறைகேடாகப் பயன்படுத்த, சாப்பிடத் தேடி வந்த கூட்டம் ஓடிக் கலைகிறது. மெஸ்ஸை தங்கள் அடையாளமாக நினைக்கும் நால்வரும், அதைக் காப்பாற்ற நாயுடுவுக்கு எதிராகக் கொடி பிடிக்கிறார்கள். எதிர்ப்பு தகராறாக மாற, நாயுடுவின் அடியாள் கும்பல் ஆயுதம் எடுக்கிறது. நால்வரும் என்ன ஆனார்கள் என்பது செம ஜிவ்வ்வ் சினிமா!  

சின்னப் பசங்களை வைத்து ஆக்ஷன் பேக்கேஜில் காமெடி, காதல், கனவு, உழைப்பு, பகை எனக் கலந்துகட்டி அசத்தல் சினிமா கொடுத்திருக்கிறார் இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். அரை டிக்கெட் பசங்களுக்கும் முரட்டு அடியாட்களுக்குமான, சரிசமம் இல்லாத மோதல், மெதுமெதுவாகக் கிளை விடுவதும், பகை மூள்வதுமாகப் படிப்படியாகப் பதட்டத்தை அதிகரித்திருக்கும் திரைக்கதை... வெல்டன் மில்டன். கேள்வி கேட்க ஆளே இல்லாத பசங்களை எப்படி வேண்டுமானாலும் காட்டியிருக்கலாம். ஆனாலும் தம், தண்ணி, காமம், மோகம் எதுவும் இல்லாமல் அடக்கம், ஒழுக்கம் என நல்லவிதமாகக் காட்டியிருப்பது.. சமூக பொறுப்புணர்வு!

கோலி சோடா - சினிமா விமர்சனம்

'பசங்க’ படத்தில் கூட்டணி அமைத்த 'குட்டிப் பசங்க’ கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ§க்கு இதில் மீசை அரும்பும் 'சின்னப் பசங்க’! குறும்பில் இருந்து பொறுப்பு, அமைதியில் இருந்து ஆக்ரோஷம், நட்பில் இருந்து காதல் என படத்தில் மனம் மாறும், தடம் மாறும் எல்லா இடங்களிலும் மாற்றத்தை அழகாகச் சித்திரிக்கிறார்கள். கையில் நாலு காசு பார்த்ததும் ஒரு மொபெட் வாங்குவது, ரௌடி சிக்கன் கேட்கும்போதெல்லாம் மனதுக்குள் மருகிப் புழுங்குவது, இயலாமையில் பரிதவிப்பது... என வாழ்க்கையின் முதல் படியில் இருப்பவர்களின் சந்தோஷத்தையும் பரிதவிப்பையும் ஒருசேரக் காட்டும் இடங்களில்.. க்ளாஸ் பாய்ஸ்!  

அடாவடி சீதா செம சேட்டை. எத்துப்பல், சோடாபுட்டிக் கண்ணாடி என வழக்கமாக தமிழ் சினிமா கிண்டலடிக்கும் தோற்றத்தில் வந்து, மனதைக் கொள்ளைகொள்கிறார். 'உனக்குமா... அப்போ இன்னொரு ஜூஸ் சொல்லு’ என்று காதலிக்க ஐடியா கொடுப்பது, 'கிரீன் சிக்னலுக்கு’ ரியாக்ஷன் வராமல் தவிப்பது, நண்பர்கள் அடிபடுவதைப் பார்த்து ரௌடிகளின் மீது எகிறிப் பாய்ந்து அடிப்பது என... படம் நெடுக அட்டகாசப்படுத்துது பொண்ணு. ஒரு செடி... செம ஃப்ளவர்! அமைதியாக வரும் சாந்தினியின் நடிப்பில் அத்தனை பாந்தம். ஆச்சி பொண்ணுல்ல... அழகு!  

'ஏன்டா திரும்பி வர இவ்ளோ லேட்டு?’ என்று கதறும் 'ஆச்சி’ சுஜாதா, ஈகோவில் துடித்து வெடிக்கும் 'நாயுடு’ மதுசூதன், பசங்களைக் கண்டாலே வெறியாகும் 'மயில்’ விஜய்முருகன், காவல் நிலையத்தில் அந்தச் சலம்பு சலம்பும் இமான்... என ஒவ்வொரு கதாபாத்திர வார்ப்பும் நடிப்பும் பக்கா!  அதிலும் ஆச்சிக்கும் நால்வருக்கும் இடையே வரும் பாசப் பரிமாற்றம் நிஜ வாழ்க்கையில் நாம் காணும் அன்பையும் பரிவையும் மிக அருகில் காட்டுகிறது.  

படத்தின் ப்ளஸ் பாண்டிராஜின் வசனங்கள். 'நஷ்டத்துல இயங்குற ஆவின் கம்பெனி பாலையே  டோர் டெலிவரி பண்ணும்போது, லாபத்துல இயங்குற டாஸ்மாக் ஏன் டோர் டெலிவரி பண்ணக் கூடாது?’, 'திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை. பயந்து ஓட நாங்க சின்னப் பசங்களும் இல்லை’ என எந்தச் சூழ்நிலையின் கனத்தையும் கலகலப்பையும் சட்டென மனதில் புகுத்துகிறது.

கோலி சோடா - சினிமா விமர்சனம்

படத்தின் மைய நாயகன் திகுதிகு திரைக்கதைதான். ஆச்சியை வீட்டில் உட்காரவைத்துவிட்டு பசங்களை வெளுத்தெடுக்கச் சொல்வது, பூட்டிய கடைக்குள் நாயுடுவை நான்காகப் பிரிந்து கார்னர் செய்வது... என ஒவ்வோர் அரை மணி நேரத்திலும் டென்ஷனும் பதைபதைப்பும் ஏற்றுகிறார்கள்.  

ஆனாலும் ஆங்காங்கே கேள்விகள் அலையடிக்கிறதே? சீதா தனி ஆளாக வட மாநிலங்களில் அலைந்து நண்பர்களைக் கண்டுபிடிப்பது ஏன் சார்? அத்தனை விவரமான பசங்களுக்கு சென்னைக்கு பஸ் பிடிக்கத் தெரியாதா? மார்க்கெட் தாதாவை 'பிளான் ஏ, பிளான் பி’ என்று திட்டமிட்டுச் சாய்ப்பதெல்லாம்... கொஞ்சம் கவனிச்சிருக்கலாம் பாஸ்!

அருணகிரி இசையில் 'ஜனனம் ஜனனம்’, 'ஆல் யுவர் பியூட்டி’ பாடல்கள் இனிமை. ஆக்ஷன் அதிரடிக் கதைக்கு சீளினின் பின்னணி இசை கச்சிதம். கோயம்பேடு மார்க்கெட் உலகத்தை நம்மைச் சுற்றி நிகழ்த்துகிறது விஜய்மில்டனின் கேமரா.

'கிர்ர்ர்ர்ர்’ என பொங்கிப் பூரிப்பதால், சொல்லி அடிச்சிருக்கு செம 'கோலி சோடா’!

- விகடன் விமர்சனக் குழு