ஸ்பெஷல் -1
Published:Updated:

‘இது நம்ம ஆளு சார்!’

சிம்பு - நயன் ஸ்வீட் சர்ப்ரைஸ்ம.கா.செந்தில்குமார்

##~##

 ''படத்துல பொண்ணு பார்க்கிற சீன். நயன்தாராவைப் பொண்ணு பார்க்க வந்திருப்பார் சிம்பு; கூடவே சூரி. சிம்புகிட்ட நயன், 'உனக்குப் பொண்ணுங்க கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?’னு கேட்பாங்க. உடனே சூரி, 'நீங்க வேற... அவனுக்குப் 'பொண்ணு’னு எழுதினாலே பிடிக்கும்’பார். அதுக்கு நயன்தாரா அவ்ளோ சிரிப்பாங்க. அந்தச் சிரிப்புக்கு அவங்க நிச்சயம் ஹோம் வொர்க் பண்ணியிருக்க மாட்டாங்க!'' - குறும்பாகச் சிரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். 'சிம்பு - நயன் மீண்டும் ஜோடி’ என்ற ஒரு வரியில் ஏக எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார் மனிதர்.

  ''ஆனா, சிம்பு - நயன்தாராவை மனசுல வெச்சு நான் இந்தக் கதை பண்ணலை. ஒரு விஷயம் முடியாதுனு யாராவது சொன்னா, 'ஏன் முடியாது?’னு எனக்குள்ள கேட்டுப் பார்த்துக்குவேன். படத்துக்கான டிஸ்கஷன்ல இருந்தப்ப ஒரு உதவி இயக்குநர், 'இந்தக் கதைக்கு சிம்பு-நயன் இருந்தா எப்படி இருக்கும்?’னு கேட்டவர் அப்புறம் அவரே, 'அதுக்கு சான்ஸே இல்லையே’னு சொன்னார்.

'ஏன் சான்ஸ் இல்லை?’னு எனக் குள்ள ஒரு கேள்வி கேட்டேன். இதோ... ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து படம் பாதி முடிஞ்சிருச்சு. இப்போ என்னதான் கதை, திரைக்கதை, டெக்னிக்கல் சங்கதிகள்னு தரமாகப் பண்ணாலும், அதை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க, கமர்ஷியல் லோகோ ஒண்ணு தேவைப்படுது. அப்படி இந்தப் படத்துக்கு சிம்பு-நயன். மத்தபடி இது செம லவ் ஃபீல் சினிமா!''

‘இது நம்ம ஆளு சார்!’

''இவங்கதான் நடிச்சே ஆகணும்ங்கிற அளவுக்கு அப்படி என்ன கதை?''

''காதல் மட்டும்தான் கதை. பழைய படங்கள்ல, 'நம்பியார்’னு டைட்டில் கார்டுல போடுறதோட சரி... வேற எந்த இன்ட்ரோவும் இல்லாம, நேரடியா வில்லத்தனத்தை ஆரம்பிச்சிடுவார். அப்படி இந்தப் படத்துல சிம்பு-நயன் முதல் பார்வையில இருந்தே காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தக் காதல் கெமிஸ்ட்ரியில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரக் கூடாதுல்ல. அதுக்காகத்தான் சிம்பு-நயன் கூட்டணி!

சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு நயன். நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும்  காதல்தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இதுதான் படம்!''

''இது படத்தோட கதைதானா?''

''அட... எல்லாக் காதலுக்கும் இது பொருந்தும்தானே! சிம்புகிட்ட, 'இதுல ஓப்பனிங் சாங் கிடையாது; சண்டை கிடையாது; வழக்கமா நீங்க பண்ற எந்த விஷயமும் இருக்காது’னு சொன்னேன். 'அதெல்லாம்  எதுவும் வேணாம். என் கேரக்டருக்கு சமமான ஹீரோயின் கேரக்டர் இருந்தாலும் பண்றேன். ஏன்னா, கதை என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்டி ருக்கு’னு சொன்னார்.

நயன்தாராவை கமிட் பண்றதுக்கு முன்னாடி, 'கதவைத் திற காதல் வரட்டும்’, 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’... இதுல ஏதாவது ஒண்ணைத்தான் டைட்டிலா வைக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, நயன் கமிட்டானதும், இன்னும் பெரிய ரேஞ்ச்ல தலைப்பு வைக்கணும்னு யோசிச்சோம். நயன்தாராவை, சிம்பு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் 'இது நம்ம ஆளு சார்’னு ஃபீல் பண்ற மாதிரி ஏகப்பட்ட சீன்ஸ் படத்துல இருக்கு. அதனால படத் தலைப்பையே, 'இது நம்ம ஆளு’னு வைக்கலாம்னு ஒரு ஐடியா!''

‘இது நம்ம ஆளு சார்!’

''முன்னாள் காதலர்களை வெச்சு, அவங்க முன்னாள் காதலை நினைவுபடுத்துற மாதிரியான காட்சிகளைப் படம் பிடிக்கும்போது சிரமமா இல்லையா?''

''அப்படி எதுவுமே இல்லை. நான், நீங்க ஒண்ணு எதிர்பார்ப்போமே... அது எதுவும் இல்லை. சிம்பு-நயன் ரெண்டு பேருமே பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகிக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் நடுவில் எந்த ஈகோவும் இல்லை. சில வசனங்கள் பழைய நினைவுகளைக் கிண்டுற மாதிரி இருந்தாலும், அதைப் பேசுறதுக்கு அவங்க தயக்கமே காட்டலை. நான் பொதுவா எதையும் பில்ட்-அப் பண்ணிச் சொல்ல மாட்டேன். ஆனா, இந்தப் படத்துல நயனும் சிம்புவும் முதல் முறை சந்திக்கிறப்ப, சொல்ற டயலாக் அதிரடிக்கும். விசில், க்ளாப்ஸ் பட்டையைக் கிளப்பும் பாருங்க. 'எல்லாருக்கும் லவ்ல பிரச்னை இருக்கும். ஆனா, உனக்குப் பிரச்னைல லவ் இருக்குடா’னு சிம்புவிடம் சூரி சொல்வார். 'சகோ... அவளை நான் லவ் பண்ணப்போறேன்’னு சிம்பு சொன்னதும், 'எத்தனை நாளைக்கு?’னு கேட்பார் சூரி.

இப்படி படம் முழுக்கப் பட்டாசுதான். சிம்பு-நயன்கிட்ட, 'இதுதான் சீன். ரெண்டு பேரும் ஆக்ட் பண்ணுங்க’னு சொல்வேன். 'எப்படி நடிக்கிறது?’னு கேட்பாங்க. 'ஏங்க... உங்க ரெண்டு பேருக்கும் நான் சொல்லியாத் தரணும். அதான் ஏராளமாப் பண்ணியிருக்கீங்களே. அதையே பண்ணுங்க’னு சொல்லுவேன். சிரிச்சுட்டே பெர்ஃபார்ம் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் ஈஸியா இருக்காங்க. ஏன்னா, அவங்க தங்களோட கேரியர்ல, அடுத்தடுத்த சினிமாக்கள்ல தெளிவா இருக்காங்க. ஃப்ளாஷ்பேக் ஞாபகங்கள் அவங்களைத் திசை திருப்பாது!''

''சிம்புவுக்கு சந்தானம்தானே எப்பவும் காமெடி பார்ட்னர். இதில் சூரி... சிம்பு செட் ஆகிட்டாரா?''

''சூரியை ஃபிக்ஸ் பண்ணதுல சிம்புவுக்கு சம்மதமே இல்லை. 'ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் எப்படி இருக்கும்னு தெரியலையே’னு ரொம்ப யோசிச்சார். 'சூப்பரா இருக்கும். நான் டயலாக் எல்லாம் சூரியை மனசுல வெச்சுதான் எழுதியிருக்கேன். நல்லா வரும்’னு சொல்லி அவரைச் சம்மதிக்க வெச்சேன். ஆனாலும், கொஞ்சம் சந்தேகமாத்தான் முதல் நாள் நடிக்க வந்தார். ஆனா, ஒரே நாள்லயே ரெண்டு பேரும் பயங்கர க்ளோஸ் ஆகிட்டாங்க!''

‘இது நம்ம ஆளு சார்!’

''சிம்புவின் தம்பி குறளரசனை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்துறீங்க போல..?''

''ஆமா. சிம்பு தம்பியாச்சே... பிரமாதப்படுத்துறார். ஒருநாள், சிம்பு ஐபாட்ல இருந்து 10 டியூன்களை பிளே பண்ணார். 'நல்லா இருக்கே... நீங்க கம்போஸ் பண்ண டியூன்களா?’னு கேட்டேன். 'இல்லை... இது மாதிரி இன்னும் 100 இருக்கு. எல்லாம் குறள் கம்போஸ் பண்ணது’னு தம்பியை அறிமுகப்படுத்தி வெச்சார். 'உங்களுக்குப் பிடிச்சிருந்தா, அப்ஜெக்ஷன் இல்லைனா குறளை இந்தப் படத்துக்குப் பயன்படுத்தலாமா?’னு கேட்டார். 'புதுமுகங்களை அறிமுகப்படுத்துறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். தம்பிகிட்ட திறமையும் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்’னு உடனே படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டோம். படத்தோட அஞ்சு பாட்டும் ஒவ்வொரு வெரைட்டி. ரொம்ப எனர்ஜியான பையன் குறள்!''

‘இது நம்ம ஆளு சார்!’

'' 'பசங்க’ படத்துக்காக தேசிய விருது பெற்றவர் நீங்க. அடுத்தடுத்து கமர்ஷியல் படங்களே பண்றீங்களே?''

''இந்த மாதிரிப் படங்களுக்குத் தானே நல்ல சம்பளம் தர்றாங்க. அப்பத்தானே, 'மூடர்கூடம்’, 'கோலிசோடா’ மாதிரியான படங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். 'பசங்க’ மாதிரி படங்கள் நிச்சயம் திரும்பவும் பண்ணுவேன். நான் இயக்குநர் ஆன பிறகுதான், சரியாவே சாப்பிட ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி வரைக்கும் சரியான வீடு, சாப்பாடுகூட இல்லாம கஷ்டப்பட்டேன். எனக்கு அடுத்து வர்ற தலைமுறையும் அப்படிக் கஷ்டப்பட்டுட்டே இருக்கணுமா என்ன?''