ஸ்பெஷல் -1
Published:Updated:

ஆஸ்கர் ஆபரேஷன்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

##~##

ஸ்கர் ஜுரம் ஆரம்பம்! இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் 'கிராவிட்டி’ படம் பல பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப் பட, அதற்குக் கடும் சவால் கொடுக்கிறது 'அமெரிக்கன் ஹஸல்’!

சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு உள்ளிட்ட 10 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது 'அமெரிக்கன் ஹஸல்’. திரையில் அப்படி என்ன மேஜிக் நிகழ்த்துகிறது படம்?

1978-ல் அமெரிக்காவில் ஊழல் அரசியல் வாதிகளை சிக்கவைக்க எஃப்.பி.ஐ. நடத்திய அதிரடி ஸ்டிங்க் ஆபரேஷன் 'அப்ஸ்காம்’. அதை அப்படியே சினிமாவுக்கான திரைக்கதையாக்கிவிட்டார் இயக்குநர் டேவிட் ஓவன் ரஸ்ஸல். நியூயார்க் நகரில் துணி உலர்த்தும் கடை நடத்தி வருபவர் கிறிஸ்டியன் பேல். போலி ஓவியங்களை பொய் வரலாற்றுப் பின்னணியுடன் விற்பது, வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி கமிஷன் பெற்று ஏமாற்றுவது என சில்லுண்டி கிரிமினல் வேலைகளில் ஈடுபடுபவர். உள்ளூர் கில்மா கிளி ஏமி ஆடம்ஸ் அவருடன் சேர்ந்துகொள்ள, மோசடித் தொழிலை இன்னும் விஸ்தரிக்கிறார்கள்.

ஆஸ்கர் ஆபரேஷன்!

ஊழல் அரசியல்வாதிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிடுபவர் எஃப்.பி.ஐ. ஏஜென்ட் பிராட்லி கூப்பர். ஒரு மோசடியின்போது கூப்பரிடம் மாட்டிக்கொள்கிறார்கள் கிறிஸ்டியன்-ஏமி ஜோடி. 'ஊழல் அரசியல்வாதிகளைப் பிடிக்க உதவினால், உங்களை விடுவிக்கிறேன்’ என்று அவர்களிடம் பேரம் பேசுகிறார் கூப்பர். கிறிஸ்டியனுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் அந்த ஸ்டிங்க் ஆபரேஷனில் ஏமிக்கு விருப்பம் இல்லை. இதற்கிடையில் கிறிஸ்டியனுடன் ஏமிக்கு நெருக்கம் உண்டாக, அது தெரிந்து பிரச்னை கிளப்புகிறார் கிறிஸ்டியனின் மனைவி ஜெனிஃபர் லாரன்ஸ். அந்தச் சர்ச்சைகளுக்கு இடையில் பிராட்லி கூப்பரின் கிடுக்கிப்பிடி நெருக்குகிறது. பணம், அரசியல், ஊழல், குடும்பம், செக்ஸ், காமெடி... என நிஜ சம்பவங்களின் தொகுப்பைக் கச்சிதமான சினிமாவாக வார்த்திருக்கிறார் இயக்குநர்.

'ஹாலிவுட் ஆர்யா’வான கிறிஸ்டியன் பேல், தொப்பை வயிறுடன் பசை தடவி விக் வைக்கும் காட்சியில் தொடங்கும் படம் 1970-களின் க்ரே மூடில் நகர்கிறது. டெரர் த்ரில்லர் கதை, காமெடிக் காட்சிகள், சுளீர் வசனங்கள் என ஒவ்வொரு ஃப்ரேமும் அட்டகாசம். வெளியான ஒரே மாதத்தில் ஆஸ்கர் பரிந்துரைகள் தவிர, 31 விருதுகளை வென்றிருக்கிறது இந்தப் படம்.

ஆஸ்கர் ஆபரேஷன்!

படத்தின் இயக்குநர் டேவிட், அமெரிக்காவின் பிரபலப் புத்தக வெளியீட்டாளர்களான 'சைமன் - ஸீஸ்டெர்’ நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவர். சினிமா மீதான தீராக் காதலால் வேலையை விட்டு விலகி, திரைத் துறைக்குள் நுழைந்தவர். இவர் இயக்கிய 10

ஆஸ்கர் ஆபரேஷன்!

படங்களில் ஏழு படங்கள் ரெவ்யூ-ரெவின்யூ... இரண்டிலும் ஹிட். இதற்கு முன்னர் இரண்டு முறை, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டேவிட், இந்த முறை 'அமெரிக்கன் ஹஸல்’-க்காக நிச்சயம் ஆஸ்கர் வெல்வார் என்று எதிர்பார்ப்பு.

கதாபாத்திர வடிவமைப்பு, 70-களின் நியூயார்க் நகரம், ஆடை வடிவமைப்பு, உண்மைக் கதையைப் படமாக்குதல், பின்னணி இசை, வசனம் என ஒரு சினிமாவின் அத்தனை டிபார்ட்மென்ட்களிலும் டிஸ்டிங்ஷன் தட்டியிருக்கும் டேவிட், 'கிராவிட்டி’, 'கேப்டன் ஃபிலிப்ஸ்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களுக்கு இடையில் விருதுகளைக் குவிப்பார் என்கிறது பாசிட்டிவ் விமர்சனங்கள். அமெரிக்கக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் படம் என்பது, இன்னும் ஸ்பெஷல்!