ஸ்பெஷல் -1
Published:Updated:

சீனியரின் சிக்ஸர்!

கி.கார்த்திகேயன்

##~##

 'சூப்பர் ஹிட்’ என்பதை மோகன் லால் ருசித்து பல வருடங்கள் ஆகின்றன. கடந்த சில வருடங்களாக, 'ஆவரேஜ்’, 'லாலேட்டா ரசிகர்களுக்கு மட்டும்’, 'ஃப்ளாப்’ என்றரீதியிலேயே அவர் நடித்த மலையாளப் படங்கள் இருந்தன. அத்தனைக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக சமீபத்தில் வெளியான 'திருஷ்யம்’ படம் 'ஆல்டைம் ரெக்கார்டு ஹிட்’ அடித்துவிட்டது. ஹிட் என்றால், அகில உலக மலையாளிகளும் கொண்டாடும் அடிப்பொளி ஹிட்!

'மோகன்லால் கேரியரின் மிக முக்கியமான சினிமா’ என்று விமர்சகர்கள் ஃபைவ் ஸ்டார் வழங்க, 'கேரள சினிமா வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்ற சினிமா’ என்று பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள் தடதடக்கிறார்கள்.  

'திருஷ்யம்’ - ஒரு த்ரில்லிங்கான குடும்பக் காவியம். கேபிள் ஆபரேட்டராக வேலைசெய்யும் மோகன்லால், அடிப்படையில் ஒரு விவசாயி. மனைவி, இரண்டு மகள்கள், கடன் இல்லாத வருமானம். ஊருக்குள் யாரும் மோகன்லால் மீது ஒரு சின்னக் குற்றம்கூட சுமத்த முடியாது. எதிலும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. நான்காவது மட்டுமே படித்திருக்கும் மோகன்லால், எந்தப் பிரச்னைக்கும் எளிதில் தீர்வு சொல்லிவிடுவார். காரணம், சினிமா!

கேபிள் ஆபரேட்டர் என்பதால், எந்த நேரமும் சகல மொழிப் படங்களையும் பள்ளிப் பாடம் போல பார்த்துக்கொண்டிருப்பார். இரவுகளில் ஒளிபரப்பாகும் சினிமாக்களை மிஸ் பண்ணக் கூடாது என்பதால், 'ராத்திரி கேபிள் லைன் கட் ஆகிருச்சுனு போன் வந்தா உடனே போகணும்ல... இல்லைன்னா கலெக்ஷனுக்குப் போகும்போது காசு கொடுக்க மாட்டாங்க!’ என்று சாக்குச் சொல்லி வீட்டுக்குச் செல்லாமல் இரவு முழுக்க சினிமா பார்த்துக்கொண்டிருப்பவர். அந்த சினிமா பிரேமை, அவர் குடும்பத்துக்குள் நிகழும் ஒரு சிக்கலைத் தீர்க்க எப்படி உதவுகிறது என்பதுதான் படம்! (படத்தின் கதை, அதன் மர்ம ட்விஸ்ட்கள் பற்றி ஒரு வரி, ஒரு வார்த்தை சொல்வதுகூட சஸ்பென்ஸ் கலைத்துவிடும். அதனால், அதைப் பற்றிப் பேசவே வேண்டாம். திரையில் அதை ரசிப்பதே பெஸ்ட்!)

சீனியரின் சிக்ஸர்!

படத்தில் மோகன்லால் மட்டுமே ஹீரோ அல்ல. ஒவ்வொரு கேரக்டரும், திரைக்கதை அடுக்கும், வசனமும் கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. ஆனால், மொத்தப் படத்தையும் தாங்கிப்பிடிப்பது மோகன்லாலின் மெஸ்மரிஸம். அதில் வழக்கமான ஹீரோயிஸம் துளியும் இல்லை.

கல்லூரி செல்லும் பெண்ணுக்கு அப்பாவாக, அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு மூச்சுமுட்ட சைக்கிள் மிதித்துச் செல்பவராக, ஒவ்வொரு பைசாவையும் எண்ணி எண்ணிச் செலவு செய்பவராக இருக்கும் 'ஜார்ஜ் குட்டி’ கேரக்டருக்கு, மோகன்லால் மிகப் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.

மனைவியும் குழந்தைகளும் செலவுகளை அடுக்கும்போது, விதவிதமான சாக்குகள் பிடித்து அதைத் தட்டிக்கழிக்கிறார். இரவு 'கிளாமர் பாடல்’ ஒன்றைப் பார்த்ததும் மூடு மாறி வீட்டுக்குச் செல்பவர், சென்ட் அடித்துக்கொண்டு உற்சாகமாக வந்து மீனாவை (மனைவி) தாஜா பண்ணுகிறார். அந்தச் சமயம், 'ஏங்க... நம்மகிட்ட இருக்குற ஜீப்பை வித்துட்டு புது மாருதி கார் வாங்கலாங்க!’ என்கிறார் மீனா. 'ச்சே... அதை வாங்கு... இதை வாங்குனு... இதே வேலையாப் போச்சு’ என்று புரண்டு படுக்கிறார் மோகன்லால். ஆனால், சில நிமிடங்களிலேயே திரும்பிப் படுப்பவர், 'சரி... வேணும்னா செகண்ட் ஹேண்ட் மாருதி கார் வாங்கலாம்’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொல்வது... 'ஏ’ க்ளாஸ்!

சீனியரின் சிக்ஸர்!

மிகவும் கெடுபிடியான போலீஸ் விசாரணை ஒன்றுக்கு, தன் குடும்பத்தினரை மோகன்லால் தயார் செய்வதே படம். அந்த அத்தியாயங்கள் அனைத்தும் திடுக் வேகம். வழக்கமாக த்ரில்லர் கதையில், க்ளைமேக்ஸ் சொதப்பலாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் க்ளைமேக்ஸ் முடிச்சும் அதைக் காட்சிப்படுத்திய விதமும்... அட்டகாசம்!  

படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப், த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட். 'டிடெக்ட்டிவ்’, 'மம்மி அண்ட் மீ’, 'மெமரீஸ்’... என த்ரில் திகில் படங்களாகவே இயக்கியவர். ஆவரேஜ், ஹிட், சூப்பர் ஹிட் என்று ஒவ்வொரு படத்திலும் வெற்றியை விஸ்தரித்துக்கொண்டே இருந்தவர், 'திருஷ்யம்’ படத்தின் மூலம் தொட்டிருப்பது வெற்றியின் விஸ்வரூபம்.

கேரள சினிமா இப்போது இளைஞர்கள் வசம். நடிகர்களாக ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பால்... இயக்குநர்களாக ஆஷிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், சமீர் தாஹிர், ராஜீவ் ரவி... என்று இளைஞர்கள் அங்கு 'டிவென்ட்டி டிவென்ட்டி’ போல விளாசிக்கொண்டு இருக்கும்போது, கிளாசிக் டெஸ்ட் ஆட்டக்காரர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் சில காலம் தடுமாறித்தான் போனார்கள். மம்முட்டி வேறுவிதமாக அதில் இருந்து மீண்டுவர, மோகன்லால் இப்போது தனக்கான பாதையை 'திருஷ்யம்’ மூலம் கண்டுகொண்டிருக்கிறார்!