ஸ்பெஷல் -1
Published:Updated:

ஆல் ஹீரோயின்களுக்கும் கோயில் கட்டுவோம் ப்ரோ!

தோட்டா ஜெகன், ஓவியங்கள்: ஹரன்

##~##

 தியா பொட்டு, அனுஷ்கா புட்டு, சிம்ரன் ஜாக்கெட், குஷ்பு இட்லி, ரோஜா சட்னினு பொங்குறதுல இருந்து திங்கிறது வரை எல்லா பிராண்டுகளிலும் நடிகைகள் பேரைச் சேர்த்து அழகு பார்க்கும் சமூகம், நம்ம தமிழ்ச் சமூகம்! ஆனா, அப்படிப்பட்ட புண்ணியாத்மா ஹீரோயின்களை, தமிழ் சினிமா என்னைக்காவது கண்ணியமா நடத்தியிருக்கா? மாமி பாயசத்துல முந்திரி போல, மம்மி கேபினட்ல மந்திரி போல, ரெண்டு பக்க டயலாக், நாலு பாட்டு மட்டும் கொடுத்துட்டு அனுப்பிடுறாங்க.

அந்தக் கால ரம்யா கிருஷ்ணன்ல ஆரம்பிச்சு இந்தக் கால த்ரிஷா கிருஷ்ணன் வரைக்கும் ஹீரோயின்களை தமிழ் சினிமா கையாளும் விதத்தை, அந்த லார்டு கிருஷ்ணனே பொறுக்க மாட்டார். உச்சி முதல் உள்ளங்கால் வரை சமூக சேவைக்காகவே அர்ப்பணிச்ச அந்த வெள்ளை உள்ளங்களின் வேதனைக் குமுறல்கள் உங்க காதுக்குக் கேட்கலையா?

துணிக் கடையில் ஆயிரம் நல்ல புடவை இருக்கிறப்ப, மழை சீன்ல நனையுற நடிகைகளுக்கு வெள்ளைப் புடவை மட்டுமே தர்ற மோசமான உலகம் சார் இது.

ரெண்டு கண்ணுலயும் டக்கீலா வெச்சிருக்கிற தானைத் தலைவி ஷகிலா படிச்சிருந்தா, வக்கீலா ஆகியிருக்கலாம். இருந்தாலும் இளைஞர் நலனுக்காக தன் சுயநலம் பார்க்காம பெரிய மனசோட நடிக்க வந்தாங்க. ஆனா, இந்த டைரக்டர்கள் ஷகீலாவை நடிக்கவெச்சதைவிட, குளிக்கவெச்சதுதானே அதிகம்.

முன்னாடி விஜயசாந்தியை நடிக்கவெச்சு, பெண் போலீஸை நெருப்பாக் காட்டியிருக்காங்க. லட்சுமி, ஜெயசுதாவை நடிக்க வெச்சு பெண் போலீஸைப் பொறுப்பாகவும் காட்டியிருக்காங்க. ஆனா, இப்ப அமலா பால், காஜல் அகர்வாலை பெண் போலீஸாப் போட்டு சிரிப்புக் காட்டுறாங்கய்யா சிரிப்பு. எட்டாப்பு அரைப் பரீட்சையோட கிளம்பி நடிக்க வந்த, மூக்கும் மூக்கும் இடிச்சுக்காம முத்தம் கொடுக்கக்கூடத் தெரியாத பச்ச மண்ணுங்கய்யா அதுங்க! அவங்க கையில ஒரு டிஸ்ட்ரிக்ட் பாதுகாப்பை டிசைட் பண்ற பொறுப்பைக் கொடுக்கிறது... நியாயமாரே!

ஆல் ஹீரோயின்களுக்கும் கோயில் கட்டுவோம் ப்ரோ!

ஜோதிகா மொகத்துல மீசை வரையுறது, அசின் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள்ள கையை விடுறது, அனுஷ்காவை லுங்கி டான்ஸ் ஆடவிடுறது, ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுற கார்த்திகாவை ஆடு மேய்க்கவிடுறது, வேதிகா முகத்துல கறுப்பு மையைக் கரைச்சு ஊத்துறது, நஸ்ரியாவை நைட்டி டான்ஸ்ல குதிக்கவெக்கிறதுனு... எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ? பாம் போட யோசிக்கிறவன்கூட, இப்படி ரூம் போட்டு யோசிக்க மாட்டான் பாஸ்!

பாக்யராஜோட டான்ஸ் ஆடுறது 'பரதநாட்டிய’ பானுப்ரியாவுக்கு, முன் ஜென்ம சாபம். முறுக்கைக்கூட கடிச்சுத் திங்கத் தெரியாத மீனாவை, நாலு நல்லி எலும்பை வாய்க்குள்ளேயே உடைச்சு கரகரனு மாவா அரைச்சுத் திங்கிற ராஜ்கிரணுக்கு ஜோடி போட உங்களுக்கு எப்படிய்யா மனசு வந்துச்சு? முட்டம் பீச்ல குடையும் கையுமாக் கூந்தல் பறக்க நடந்துபோன ரேகாவை, ராமராஜனோட காளை மாட்டுல பால் கறக்கவிட்ட பாவத்தை, பக்கத்துல நின்ன பசு மாடுகூட மன்னிக்காது. ஊரே கூடி ஊலல்லலா பாடினாலும், உதயநிதி மேல ஹன்சிகாவுக்குக் காதல் வந்து ஃபீல் ஆகி ஆஃப் தேடினது... நோ கமென்ட்ஸ். பவர் ஸ்டாருக்கு ஜோடியா நடிக்கிறவங்க எல்லாம் நாயகிங்க இல்லைண்ணே, தமிழ் சினிமாவின் தியாகிங்க!

வெள்ளைக்காரனெல்லாம் ஒரு ஹீரோ ஹீரோயின், ஒரு கப்பலை வெச்சுக்கிட்டு அற்புதமாப் படம் எடுக்கிறான். நம்மாளுங்க ஹீரோ, ஹீரோயின் ப்ளஸ் ஹீரோயின் தொப்புளை வெச்சுக்கிட்டு பண்ற அலம்பல் சலம்பல் இருக்கே.. குமுதா, ரொம்பப் பாவம் அண்ணாச்சி!

விரலால வாக்கிங் போறது, வாயால ஜாக்கிங் போறது, உரலை எடுத்து வந்து உள்ளூர்ல நோம்பி மாவு இடிக்கிறது, பம்பரத்துல ஆக்கர் போடுறதுனு நீங்க பண்ற அராஜகத்

துக்கு, அந்தத் தொப்புளுக்கு மட்டும் வாய் இருந்திருந்தா உங்க ஸ்கிரிப்ட் மேலயே துப்பியிருக்கும்! ஏம்ப்பா ஏய்ய்ய்ய்... ஆம்லெட் ஆஃபாயில் ஆரம்பிச்சு செட் தோசை, பொடி தோசை, பணியாரம் சுட ஹீரோயின்கிட்ட இருக்கிறது இடுப்பா இல்லை... இண்டக்ஷன் அடுப்பா?

ஆல் ஹீரோயின்களுக்கும் கோயில் கட்டுவோம் ப்ரோ!

நாலணா, எட்டணா, ஒரு ரூபா, ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா, பத்து ரூபானு சில்லறை காசுலகூட ஆறு வகைதான்யா இருக்கு. ஆனா, தமிழ் சினிமா லூஸு ஹீரோயின்கள் நூறு வகைகள் இருக்காங்களே!

புக்குக்குள்ள மயிலிறகை வைச்சு 'குட்டி போடு’ங்கிறது, சுப்ரமணி நாய்க்குட்டிக்கு ஜட்டி போடுவேங்கிறது, ஃபாரீன் ரோட்டுல பல பேரு பார்க்கத் தனியா ஆடுறது, 'சின்னதம்பி’கிட்ட தாலி கட்டிக்கிட்டுப் பலியாகிறது, 'மன்னன்’ ரஜினிகிட்ட தாலி கட்டிக்கிட்டு பழிவாங்குறது, ஏர்வாய்ஸ் ஓனரை ஜட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிடுறதுனு தமிழ் சினிமா ஹீரோயின்களை இந்த இயக்குநர்கள் செய்ய வெச்ச லூஸுத்தனங்களை புத்தகமாப் போட்டா, அது 'நெஞ்சுக்கு நீதி’யை மிஞ்சும் பவுண்டு வால்யூம்களா வருமே!

இதுக்காகவே லைலா, ஜெனிலியாவைக் கஷ்டப்பட்டு கல்யாணம் கட்டிக்கொடுத்து மும்பைக்கு ஃப்ளைட் ஏத்திவிட்டா, அடுத்த பஸ்ல தமன்னா, நயன்தாரா, நஸ்ரியானு புது லோடு அடிக்கிறீங்களே... ஏன் இந்தக் கொலவெறி!

நாட்டுல அட்டூழியம் பண்ணவனைத் தேடி ஹீரோ காட்டுக்குப் போறதுக்கு ஒரு லாஜிக் இருக்கு. ஆனா, வில்லனை வேட்டையாடப் போற விபரீதமான இடத்துக்கு ஹீரோயினை எதுக்கு இழுத்துக்கிட்டுப் போகணும்கிறேன்? நிஜத்துல படத்தோட ஆடியோ ரிலீஸுக்கு சத்யம் தியேட்டருக்குக்கூட வராத இந்தப் புள்ளைங்க, படத்துல சத்யமங்கலம் காட்டுக்கே சகஜமாப் போயிடுதுங்க. மொத்த பாடியையும் இரும்பாக்கி, எல்லா நாடி நரம்பையும் முறுக்கேத்தி முஷ்டியில வெறியேத்தி ஒன்றரை டன்ல வில்லன்களை ஓங்கி அடிக்க ஹீரோயின்கள் என்ன 'சிங்கம்’ பட சூர்யாவா? நல்லாப் பாருங்க மக்களே... அவங்கள்லாம் நேத்து துளிர்விட்ட வெத்தலைக் கொடிங்கய்யா!

நிஜ வாழ்க்கையில் நாய் செத்துப்போனாக்கூட நாலு மாசம் குளிக்காமக்கொள்ளாம வாழும் தெய்வங்கள் நம்ம ஹீரோயின்கள். ஆனா, சினிமாவில் பெத்த தாயோ தகப்பனோ செத்துப்போன அடுத்த காட்சியிலேயே அவங்களுக்கு ஹீரோவோட டூயட் வெக்கிறீங்களே... சட்டுனு அவுத்துத் தூக்கி எறிய அது என்ன ஊதா கலர் ரிப்பனா? ஊட்டி வளர்த்த ஆத்தா அப்பன்யா!

ஆல் ஹீரோயின்களுக்கும் கோயில் கட்டுவோம் ப்ரோ!

எல்லாப் படங்கள்லயும் வில்லன் என்ன செய்றான்? ஹீரோயினோட இடுப்பைக் கிள்ளுறான்... உடுப்பை இழுக்கிறான்... தாவணியைப் பிடுங்கிக் கையில் கட்டிக்கிறான்! ஆனா, இந்த வில்லனை அடிச்சுப் போடுற ஹீரோ, திரும்ப அதே வேலையையே ஹீரோயின்கிட்ட செய்றான். இதுக்கேன் யூ டர்ன் போட்டு, டேபிளை உடைச்சு, காத்துல பறந்து, ரத்தத்தைத் தெளிச்சு... அய்யய்யோ!

'மாற்றம் ஒன்றே மாறாதது’னு சொல்லும் செயலுமா வாழும் தெய்வம் நயன்தாராவா இருக்கட்டும், 'மாற்றம் அதிகமானா, ஏமாற்றம் வரும்’கிறதுக்கு வாழும் உதாரணமா இருக்கும் நமீதாவா இருக்கட்டும், 'ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப் பெருசாக்கும்’ நஸ்ரியாவா இருக்கட்டும், 'கண்ணால் காண்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்’னு உணர்த்துற அமலா பாலா இருக்கட்டும், 'காதலுக்கு வயசும் சைஸும் தேவை இல்லை’னு அழுத்தமா சொன்ன ஆண்ட்ரியாவா இருக்கட்டும், 'மணல்ல புரண்டு நடிச்சாலும், மக்களவையில் சவுண்டுவிட முடியும்’னு நிரூபிச்ச 'குத்து’ ரம்யாவா இருக்கட்டும், 'விளம்பரப்படுத்தினால்தான் நாம வாழுறதே தெரியும்’னு புரியவெச்ச கனகாவா இருக்கட்டும், 'வாழ்க்கையையே விளம்பரமா நடிக்க முடியும்’னு நிரூபிச்சுட்டு இருக்குற சினேகாவா இருக்கட்டும்... நடிகைகள் வெறுமனே நடிச்சுட்டு மட்டும் போகலை குமாரு... நாட்டுக்கு நாலு நல்ல விஷயங்களை நறுக்குனு இப்படி மறைமுகமாச் சொல்லிட்டும் போறாங்க!

ஆனா, அவங்களை இந்தப் பாடு படுத்துறோமே..!

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, நான் தெரியாமல்தான் கேட்கிறேன்... தமிழ் சினிமா தாய்க்குக் கண்ணில்லையா? இல்லை தமிழ் சினிமா ஹீரோயின்கள்தான் பெண்ணில்லையா?