சினிமா விமர்சனம் : காஞ்சனா
##~## |
தன் கனவைச் சிதைத்த வில்லன்களை லாரன்ஸின் உடலில் புகுந்து பழி தீர்க்கும் திருநங்கை ஆவி... 'காஞ்சனா’!
அதே முனி அ(ந)டிக்கும் கதைதான்... இம்முறை, இடம், பொருள், ஏவல் மட்டும் வேறு வேறு! முதல் பாகமான 'முனி’யில் டைமிங் சரியாக அமையாத காமெடி ப்ளஸ் த்ரில் கூட்டணியை 'காஞ்சனா’வில் கச்சிதமாகக் கைகோக்கவைத்து இருக்கிறார் இயக்குநர் லாரன்ஸ். திகில் நேரத்தில் குபீர் காமெடியும் சிரித்து முடிப்பதற்குள் வரும் வீல் திகிலுமாகப் படம் பரபர ஜெட் வேகத்தில் பறப்பதுதான் மகா ப்ளஸ்!
லாஜிக் இன்ன பிற சங்கதிகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டுப் போனால், 'காஞ்சனா...’ ஜாலி திகில் மசாலா. இந்த வயதிலும் 'உச்சா’ போகத் துணை தேடும் மகன், கொங்கு தமிழில் நொங்கெடுக்கும்

அம்மா, எதற்கெடுத்தாலும் மாமியார் காலில் விழும் சிரிப்பு மருமகள், 'ஆவி’ தம்பியைப் பார்த்தாலே வாய் கோணி தரையில் விழும் அண்ணன், கோரஸாக பேய் கதை சொல்லும் சுட்டீஸ்... என அதகள காம்பினேஷன்!
பயத்தில் அருகில் இருக்கும் பெண் களின் இடுப்பில் தாவியேறும் அம்மாஞ்சி லாரன்ஸ், ஆவிகள் ஊடுருவியதும் திருநங்கையாக, இந்தி பேசுபவராக, மன வளர்ச்சி குன்றிய இளைஞனாக வெளுத்துக் கட்டும்போது சபாஷ்! (அதற்காக ரொம்பவும் குழந்தைத்தனமாக கொஞ்சிக் குலாவுவது... ஓவர் டோஸ் பாஸ்!)
படத்தின் நாயகி லட்சுமி ராய்... அல்ல. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்து இருக்கும் 'கோவை’ சரளாதான். 'சாமி, உங்க டெஸ்ட் எல்லாம் ரொம்ப டிபிகல்ட்டா இருக்கு’, 'மாட்டுக்கு மீல்ஸ் வைக்கிறேன்... பேய் வருதானு பார்க்கலாம்’ என அம்மணியின் பேய் பீதி காமென்ட்டுகள் லக லக கல கல! சரளாவுக்கு இணையாகக் கலக்கி இருப்பவர் அண்ணியாக வரும் தேவதர்ஷினி. தூங்கும் கணவன் வாய்க்குள் பூ போட்டு எழுப்ப முயற்சிப்பதும், பேய் பயத்தில் சரளாவைச் சரமாரியாக அடித்து உதைப்பதுமாக காமெடி கரகம் சுமக்கிறார்.
'திருநங்கை’யாக சரத்குமார்! அவ்வளவு ஆஜானுபாகுவான உடலில் பெண் தன்மை பிரதிபலிக்க நடித்து பிரமாதப்படுத்துகிறார் சரத்! 'உஸ்ஸு, ஒம்போதுனு கூப்பிட்டு எங்களைக் கேவலப்படுத்துறாங்க. அழகா திருநங்கைனு கூப்பிட வேண்டியதுதானே!’ என்று சரத் கண் கலங்கக் கேட்கும் இடத்தில் அவ்வளவு நேர அதிர்வேட்டு ஆரவாரம் மறந்து அமைதியாகிறது தியேட்டர்.
பேய் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான். ஆனால், அதற்காக சாமியோடு பேய் டீலிங் பேசுவது எல்லாம் 'ஆந்திர கோங்குரா மசாலா’! அம்மா கோவை சரளாவை நீச்சல் உடையில் கற்பனை செய்வது, குடும்ப உறுப்பினர்கள் சகஜமாகத் தங்களுக்குள் டபுள், ட்ரிபிள் மீனிங்கில் பேசிக்கொள்வது

எல்லாம் டூ, த்ரீ மச் லாரன்ஸ்!
பேய்ப் படத்துக்கான திக் திகில் பின்னணி இசையில் மட்டும் கவனம் ஈர்க்கிறது தமனின் இசை. பிரகாச வெளிச்சமோ, அரை இருட்டோ தேவைப்படும் சமயங்களில் மட்டும் ஆவி பயம் ஊட்டி அடங்கிவிடு கிறது வெற்றியின் கேமரா.
படம் பார்த்தவர்கள் ஒன்று, ஆவியைப் பார்த்துச் சிரிப்பார்கள். அல்லது திருநங்கைகளைப் பார்த்தால் மரியாதை கொடுப்பார்கள். இந்த இரண்டுமே 'காஞ்சனா’வுக்குக் கிடைத்த வெற்றிகள்!
- விகடன் விமர்சனக் குழு