Published:Updated:

சினிமா விமர்சனம் : போட்டாபோட்டி

சினிமா விமர்சனம் : போட்டாபோட்டி

பிரீமியம் ஸ்டோரி
##~##

கிரிக்கெட் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கிராமத்தில், ஒரு கிரிக்கெட் ப்ளேயர் சிக்கினால்?!

 ஊர்ப் பெரியவரின் மகளை மணம் முடிக்க இரண்டு முறைப் பையன்களுக்குள் போட்டா போட்டி. 'கிரிக்கெட் போட்டியில் ஜெயிப்பவருக்குத்தான் பெண்’ என்று முடிவு எடுக்கிறார்கள். அந்தக் கிராமம் வழியாகச் செல்லும் கிரிக்கெட் ப்ளேயர் சடகோபன் ரமேஷ் ஒரு அணியிடம் சிக்க, அவரை அடைத்துவைத்து கிரிக்கெட் கற்றுக்கொள்கிறார்கள். எதிர் அணியின் 'கோல்மால் கோச்’ மயில்சாமி. இதற்கிடையில், அந்த ஊர் மலையை அபகரிக்க முயல்கிறது ஒரு பகாசுர நிறுவனம். காதலையும், ஊரையும், மலையையும், சடகோபன் காப்பாற்றினாரா என்பதே கதை!

கிரிக்கெட்டைக் கையில் எடுத்து, நிறைய நகைச்சுவையும் கொஞ்சம் மெசேஜுமாக 'லகான்’ பிடித்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் யுவ்ராஜ்.  

சினிமா விமர்சனம் : போட்டாபோட்டி

கதை நாயகனாக முன்னாள் கிரிக்கெட்டர் சடகோபன் ரமேஷ். 'எல்லோரும் முதல்ல வார்ம்-அப் பண்ணுங்க!’ என்று எல்லோரையும் ஓடச் சொல்லிவிட்டு, எதிர் திசையில் ஓடித் தப்பிக்க முயற்சிப்பது, ஹீரோயின் அப்பாவுக்குப் பயந்து கிணற்றில் ஒளிந்து அங்கே பாம்பைக் கண்டு பயந்து நடுங்குவது எனக் கலகலப்பூட்டுகிறார். ஆனால், படத்தின் பெரும்பாலான நேரங்களில் ஒரே விதமான எக்ஸ்பிரஷனுடனேயே இருக்கிறாரே... ஏன்?

'நான் கிரிக்கெட் கோச்!’ என்று சடகோபன் ரமேஷிடமே மைல்கணக்கில் ரீல் விடுபவராக மயில்சாமி. கிரிக்கெட் கற்றுத் தரும் கோதாவில் அஞ்சாறு ஜூஸை நீளமான ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது, 'நாம ஜெயிக்கிறோம்’ என்று அடிக்கடி தோளைத் தூக்கும் வில்லனிடம் பம்முவது என்று அட்ட காசம் செய்பவரை, இன்னும் நல்லா அடிச்சு ஆடவிட்டு இருக்கலாமே!  

சினிமா விமர்சனம் : போட்டாபோட்டி

வெகுளி மைனராக ஆர்.சிவம். அடிக்கும் கலரில் சட்டை, புலிப் பல் செயின், கழுத்தில் கர்ச்சீப், பாதிக் கண் கள் தெரியும் கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு, ரன் எடுக்க ஓடாமல், 'அட சிக்ஸ், ஃபோரா எடுப்போம்பா’ என்று அசட்டு அசால்ட் காட்டும் இடத்தில் சிரிப்பு சிக்சர் அடிக்கிறார். எதிர் அணி முரட்டு வில்லன் உமர் அவ்வப்போது விறைப்பும் முறைப்புமாக வருகிறாரே தவிர, வில்லனுக்கு உரிய விபரீத வியூகங்களே இல்லை!

அறிமுக இசையமைப்பாளர் அருள் தேவின் இசையும், அமர்நாத்தின் ஒளிப்பதிவும், இந்த கேலி கிரிக்கெட்டுக்கு ஜாலி ஃப்ளட் லைட்ஸ்!

கிச்சுகிச்சு மூட்டினாலும் அநியாயத்துக்குக் 'கடி’க்கும் ஜோக்குகள், சடகோபனுக்கும் ஹரிணிக்கும் இடையிலான அழுத்தம் இல்லாக் காதல், திடீர் மலை அபகரிப்பு பிளான் என ஏகப்பட்ட பவுன்சர்களுக்கு இடையில் சிலபல சிக்சர், பவுண்டரிகளைப் 'போட்டா போட்டி’யோடு அடிக்கத்தான் செய்கி றார்கள் சிரிப்பு பேட்ஸ்மேன்கள்!  

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு