ஸ்பெஷல் -2
Published:Updated:

“பிடிச்ச சினிமாவை படிச்சா தப்பில்லை!”

கி.கார்த்திகேயன்

##~##

 ''நான் இந்தப் படத்துக்கு டைரக்டர்... ஆனா, ஷூட்டிங்ல 'ஆக்ஷன், கட், டேக் ஓ.கே’னு சொல்றது நான் இல்லை. இதோ இவர்... படத்துக்கு கேமராமேன். ஆனா, கேமரா ஆங்கிள் செட் பண்றது மட்டும்தான் இவர் வேலை. வியூ ஃபைண்டர்ல சீன் பார்த்து ஓ.கே. பண்றது இவர் இல்லை. அது எல்லாத்தையும் எங்க அசிஸ்டென்ட்ஸ் பார்த்துக்கிறாங்க!' - வடிவேல் சொல்வதை அப்படியே  வழிமொழிகிறார் ஸ்ரீராம சந்தோஷ்.

''கள்ளப்படம்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் படப்பிடிப்புத் தகராறு சம்பந்தமாக ஏதோ பேசுகிறார்களே... இது ஜூ.வி. ஏரியாவாச்சே’ என்ற சந்தேகத்துடன், ''ஏன் என்ன பிரச்னை?'' என்று கேட்டால், ''ஏன்னா... நாங்கதான் கேமரா முன்னாடி நடிச்சிட்டு இருப்போமே!'' என்று கள்ளச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.

'நந்தலாலா’, 'முகமூடி’, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என மூன்று படங்கள் மிஷ்கினிடம் வேலை பார்த்துவிட்டு இயக்குநர் அவதாரத்துடன் அரிதாரமும் பூசியிருக்கிறார் வடிவேல். பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யன் ஸ்ரீராம சந்தோஷ், ஒளிப்பதிவாளர் கம் நடிகராக அறிமுகமாகிறார். இருவரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் பேட்ச்மேட் தோழர்கள்!

''படத்தின் இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின்... இவங்களும் எங்களோட நடிக்கிறாங்க. ஆஃப் த ஸ்க்ரீன்... ஆன் த ஸ்க்ரீன் எங்க அராஜகம்தான்!' என்கிறார்கள் உற்சாகமாக.

“பிடிச்ச சினிமாவை படிச்சா தப்பில்லை!”

''சரி விஷயத்துக்கு வாங்க... நீங்களே உருவாக்கி நீங்களே நடிக்கிற அளவுக்கு அப்படி என்ன கதை?'

''எங்க கதைதான். மிஷ்கின் சார்கிட்ட இருந்து வெளியே வந்து ஒரு ஸ்க்ரிப்ட் பண்ணேன். அதை சில தயாரிப்பாளர்கிட்டயும் ஹீரோக்களிடமும் சொல்றதுக்கு நான் பட்ட பாடு! ஒரு ஹீரோ பேர் சொல்ல விரும்பலை... ரொம்ப அலட்சியமா, பொதுவில் சொல்லத் தயக்கமா இருக்கிற ஒரு வேலை பண்ணிட்டே கதை கேட்டார். சுள்ளுனு கோபம் வந்திருச்சு. பாதியிலேயே கதையை நிப்பாட்டிட்டேன். 'அவ்ளோதானா கதை?’னு கேட்டார். 'இதுவே அதிகம்’னு சொல்லிட்டு வந்துட்டேன். இத்தனைக்கும் நடிச்ச படம் பேர் சொன்னாத்தான் ஆளைத் தெரியும்கிற அளவுக்கு வளர்ந்துட்டு வர்ற நடிகர் அவர். அவரே அந்த பந்தா பண்ணினார்.

தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லப் போனா, 'குறும்படம் பண்ணியிருக்கீங்களா? டீஸர் மாதிரி எதுவும் இருக்கா? லிங்க் மெயில் பண்ணுங்க... பார்த்துட்டுச் சொல்றேன்’னு வேறுவிதமா சுத்தல்ல விட்டாங்க. அந்த வெறுப்பான மனநிலையில் மூணு வேளையும் சினிமா பார்த்துட்டு சுத்திட்டே இருந்தோம் நானும் ஸ்ரீயும். அப்போ ஒருநாள் படம் பார்த்துட்டு பைக்ல வந்துட்டு இருந்தப்போ ஏதோ ஒரு நினைப்புல, 'நாமளே நடிச்சா என்னடா?’னு கேட்டேன். சட்டுனு பைக்கை நிறுத்தி, 'சூப்பர் மச்சி... அப்படியே ஸ்க்ரிப்ட் பிடிச்சிரு. உடனே ஷூட்டிங் போயிரலாம்’னு சொன்னான். அடுத்த ரெண்டு வாரத்துல ஃபைனல் ஸ்க்ரிப்ட் ரெடி. தயாரிப்பாளர் ஆனந்துக்கும் படத்தோட ஐடியா, கதை எல்லாமே பிடிச்சிருந்தது. பரபரனு வேலை நடந்து நாப்பது நாள்ல ஷூட்டிங் முடிச்சுட்டோம். சினிமா எடுக்க ஆசைப்படும் நாலு இளைஞர்கள் தங்கள் கனவை நனவாக்கினாங்களா... இதுதான் படம்!''

''கொஞ்சம் குறும்படம் சாயல் இருக்கே..!''

''கதையை ஒன்லைன்ல கேட்டா, அப்படித் தோணலாம். ஆனா, காமெடி, கிரைம், ஆக்ஷன்னு படத்துல ஒவ்வொரு நிமிஷத்திலும் ஏதோ ஒரு எமோஷனை பார்சல் பண்ணியிருக்கோம்.

கூத்துக் கலைதான் படத்தோட கேன்வாஸ். சினிமா எல்லாம் வர்றதுக்கு முன்னாடி தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு... கூத்து. திருவிழாக் கொண்டாட்டங்கள்ள விடிய விடியக் கூத்துப் பார்த்து வளர்ந்தவங்க நம்ம பாட்டன் பூட்டன்லாம். ஆனா, சினிமா ஒரே அடியில அந்தக் கலையைச் சாய்ச்சிடுச்சு. சினிமா வீழ்த்திய அந்தக் கலைக்கு சினிமா மூலமாகச் சின்ன மரியாதை பண்ணியிருக்கோம்.

கூத்தாடிகள், கூத்தை வெறும் தொழிலா நினைக்கிறதில்லை. சம்பளம் கிடைக்காதுன்னு தெரிஞ்சாலும், வயித்தைப் பட்டினி போட்டுட்டு, அரிதாரம் பூசி உயிரை உருக்கி நடிச்சுக் கொடுத்துட்டுப் போறவங்க அவங்க. அந்த ஆன்மா இந்த சினிமாவிலும் அப்படியே பிரதிபலிக்கும்!''

“பிடிச்ச சினிமாவை படிச்சா தப்பில்லை!”

''ஒரு இயக்குநர்கிட்ட ஆறேழு வருஷம் உதவியாளரா இருந்து சினிமா கத்துக்கிறது சினிமாவில் பாரம்பரியப் பழக்கம். முதல் படத்திலேயே நடிச்சு, இயக்கி உலகத்துக்கு ஏதோ செய்தி சொல்றது 'குறும்பட இயக்குநர்கள்’ ஃபார்முலா. இது ரெண்டையும் நீங்க கலந்துகட்டிப் பண்றீங்களே!''

''யார்கிட்டயும் உதவியாளரா இல்லாம சினிமாவில் ஜெயிப்பது ஒண்ணு ரெண்டு பேருக்கு சாத்தியமாகி இருக்கலாம். ஆனா, சினிமாவில் அதன் அடிப்படை நுணுக்கங்களைக் கத்துக்காமப் போயிட்டா, அடுத்தடுத்த படங்களில் தடுமாறிடுவோம். அந்த அடிப்படை நுணுக்கங்களைக் கத்துக்கிறதுக்கு ஒரு நல்ல இயக்குநர்கிட்ட வேலை பார்க்கிறது நல்லது. பசுமை விகடன்ல வேலை பார்த்துட்டு இருந்த எனக்கு, சினிமான்னா என்னன்னே தெரியாது. 'அஞ்சாதே’ முதல் நாள் முதல் ஷோ பார்த்து அசந்துபோய் அப்படியே மிஷ்கின் முன்னாடி போய் நின்னவன் நான். 'படம்

“பிடிச்ச சினிமாவை படிச்சா தப்பில்லை!”

சூப்பர்... எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’னு சொன்னேன். 'ஏன் பிடிச்சிருக்குனு 10 காரணங்கள் சொல்லு’னு கேட்டார் அவர். அந்தக் கேள்விக்குப் பதில் யோசிச்சப்பதான், சினிமாவின் பிரமாண்டம் எனக்குப் புரிஞ்சது. ஒரு சீன் ரசிகனுக்குப் பிடிக்கிறதுக்கும் பிடிக்காமப்போறதுக்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு. அந்தக் காரணங்களை யோசிக்கிறதும் சினிமா மேக்கிங்ல முக்கியம். அது மிஷ்கின் சார்கிட்ட வேலை கத்துக்கிட்டதால்தான் எனக்கு கை வந்தது. சைக்கிள் ஓட்டவே ஒரு ஆள் துணைக்குத் தேவைப்படுறப்போ, சினிமாவின் அடிப்படைகளைக் கத்துக்க எவ்ளோ விஷயங்கள் தேவைப்படும்!'' என்ற வடிவேலை சட்டென இடைமறிக்கிறார் சந்தோஷ்...

''ஹலோ... நம்ம நாலு பேர்ல நீங்கதான் ஹீரோனு யாராச்சும் சொன்னாங்களா... பேச்சு ஓவரா இருக்கே!'' என்று அவர் சலம்ப... ''ஃப்ரெண்ட்ஸா சேர்ந்து படம் பண்ணா, அதோட சைட் எஃபெக்ட் இப்படித்தான் இருக்கும்'' என்று சிரிக்கிறார் வடிவேல்.