Published:Updated:

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்

Published:Updated:
##~##

ல்யாணங்களால் ஒரு காதல் துளிர்விட்டால்... அதுவே 'ஆஹா கல்யாணம்!’  

வாணி கபூருக்கு (அறிமுகம்), கல்யாண வேலைகளை முடித்துக்கொடுக்கும் 'மேரேஜ் பிளானிங் கான்ட்ராக்டர்’ ஆகவேண்டும் என்பது கனவு. 'ஃபைனான்ஸும் ரொமான்ஸும் ஒண்ணு சேரக் கூடாது’ என்ற கடும் நிபந்தனையோடு நானியைச் சேர்த்துக்கொள்கிறார் வாணி. இருவரின் பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் காரணமாக, 'கெட்டிமேளம்’ நிறுவனம் விறுவிறு வளர்ச்சி அடைகிறது. ஒரு கட்டத்தில் இருவரிடையே 'மெயின் ரொமான்ஸ்’ நடந்துவிடுகிறது. அதன் பிறகு யார் முதலில் காதலைச் சொல்வது என்பதில் முட்டி முளைக்கும் ஈகோ, 'கெட்டிமேளம்’ நிறுவனத்தையே இரண்டாக ஆக்குகிறது. காதலும் கம்பெனியும் என்ன ஆனது என்பது 'டும்டும்’ சுபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியில் ஹிட் அடித்த 'பாண்ட் பாஜா பாரத்’ படத்தை 'மேளதாளம்’ பிசகாமல் ரீ-மேக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கோகுல் கிருஷ்ணா. பளீர் பஞ்சுமிட்டாய் நிறங்கள், மும்பை, ஆந்திரா ஆர்ட்டிஸ்ட்கள், தட்டுத்தடுமாறும் 'டமில்’ என முதல் சில நிமிடங்கள் படத்தோடு ஒட்ட முடியாத அந்நியத்தனம். ஆனால், 'மேரேஜ் பிளானிங்’ சவால்கள், நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி, கலகல வசனங்கள் ஈர்த்து இழுத்துக்கொள்கின்றன!  

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்

'தமிழை, தெலுங்கு மாதிரி பேசாதடா’ என்று படத்திலேயே வசனம் வைக்கும் அளவுக்குத் தட்டுத்தடுமாறுகிறார் நானி. ஆனா, அதுவே ஒரு கட்டத்தில் நமக்குப் பிடித்துப்போகவும் செய்கிறது. 'செஷனுக்கு’ப் பிறகு வாணி முதல்முறையாக 'என்னங்க...’ என்று அழைக்கும்போது பதறுவதும், 'பாய்ய்ய்ய்ய்’ என்று கோபத்தோடு அழைத்து, பின் 'பை’ என அடிக்குரலில் பம்முவதுமாக... நானியின் பாடி லாங்வேஜ், படத்துக்கு செம எனர்ஜி மைலேஜ்.

நானிக்குக் கொஞ்சமும் சளைக்காமல் ரசிக்கவைக்கிறார் வாணி. துள்ளல் இசைக்கு அவருடைய ஆட்டம்பாட்டம்... ஹைவோல்ட்டேஜ் கபடி. காதல், கண்ணீர், உருக்கம், நெருக்கம் என எல்லாவற்றிலும் விதவித எக்ஸ்பிரஷன்களில் எக்ஸ்பிரஸ் ஓட்டுகிறது பொண்ணு. தமிழ் சினிமாவுக்கு... வெல்கம் வாணி!

படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர்ப்புடன் பயணிக்கவைக்கிறது ராஜீவ் ராஜாராமின் வசனங்கள். 'திடீர்னு டீ போட்டுக் கொடுக்கிறா.. 'என்னங்க’னு கூப்பிடுறா. ஆனா, டீ சகிக்கலை’, 'அது பிசினஸ் யுக்தி இல்லை... திருட்டுப் புத்தி’, 'நீ டயர்டா வந்தா, நான் காபி போட்டுத் தருவேன். நீ டயர்டா இல்லைன்னா, உன்னை டயர்ட் ஆக்குவேன்’ என அடிக்கடி தியேட்டரை திமிறவைக்கிற வசனங்கள்.    

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம்

தரண்குமார் இசையில் பாடல்களில் கல்யாண பேண்ட் உற்சாகம். தமிழ் சினிமா பன்ச் வசனங்களாலேயே எழுதப்பட்ட, 'தலடா, நண்பன்டா’ பாட்டு செம ரகளை. ரிச், கிளாசிக் என கல்யாண வீட்டுப் பிரமாண்டத்தை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பரப்புகிறது லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு.

டேட்டிங்கை 'டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்கிறார் வாணி. அவரிடம் காதலைச் சொல்வதில் நானிக்கு என்ன தயக்கம்? அத்தனை சீரியஸ் பிரச்னைகளுக்குப் பிறகும் இருவரும் காமெடி பண்ணிக்கொண்டிருப்பது... அய்யோடா!

சுவாரஸ்யக் களம், இனிக்கும் கெமிஸ்ட்ரி, ஜாலி ரைடு என்று அசத்தும் இந்தக் கல்யாணத்துக்குத் தாராளமாக 'மொய்’ வைக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு