Published:Updated:

கானல் கனவுகளின் கதை!

ப்ரியாதம்பி

கானல் கனவுகளின் கதை!

ப்ரியாதம்பி

Published:Updated:
கானல் கனவுகளின் கதை!

1983 -ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கிறது. அந்த வெற்றி, இந்தியாவில் கிராமங்கள் வரை ஏராளமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. குக்கிராமங்களில்கூட குட்டிக் குட்டியாக கிரிக்கெட் மைதானங்கள் முளைக்கின்றன. கிட்டத்தட்ட அதே ஆண்டுகளில்தான் தூர்தர்ஷன் பரவலாக கிராமங்களுக்குள் வருகிறது. டி.வி. பெட்டி, கிரிக்கெட்டை மட்டுமல்ல ஏராளமான கனவுகளையும் விதைக்கத் தொடங்குகிறது. இளைஞர்களும் சிறுவர்களும் கையில் பேட்டோடு தங்களை கபில்தேவாக நினைக்கத் தொடங்கினர். 

1983-ல் சச்சினுக்கு 10 வயது. அப்போது அவர் மும்பையில் டி.வி-யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த சில வருடங்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்குச் சாத்தியமானது. அவரைப் போலவே கனவும் வெறியும்கொண்டு ரத்தம் முழுவதும் கிரிக்கெட் வெறியோடு திரிந்த, திரியும் இளைஞர்களின் கதையே இந்தப் படம். அவர்களின் பிரதிநிதியாக ரமேஷன் (நிவின் பால்) வாழ்வைச் சொல்கிற படம். 1983-ம் ஆண்டு வெற்றியின்போது சச்சினைப் போலவே ரமேஷனுக்கும் வயது 10.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'1983’ என்ற இந்தப் படம் முழுக்க சச்சினின் வாழ்க்கை நிகழ்வுகளும், அவரது மேற்கோள்களும் வருகின்றன. சச்சினை வாழ்க்கையில் கொண்டாடி, அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட அப்ரித் ஷைனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும். கால்பந்து ரசிகர்களால் நிரம்பி வழியும் கேரளத்தில் இருந்து கிரிக்கெட்டைக் கொண்டாடி ஒரு படம்.

கானல் கனவுகளின் கதை!

எஸ்.எஸ்.எல்.சி-யில் குறைவான மார்க், பி.யு.சி ஃபெயில், அப்பாவின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கனவைப் பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு மண்டை முழுக்க கிரிக்கெட், பேட்டும் கையுமாக இருப்பதால் வீட்டில் சதா நேரமும் திட்டு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிரிக்கெட்டில் திளைத்துக்கிடக்கிறார் ரமேஷன். பள்ளித் தோழி காதலியாகி, தன் மாஸ்டர்ஸ் டிகிரியை முடித்துவிட்டு ''வீட்ல கல்யாணம் பேசுறாங்க, நான் என்ன பண்ணட்டும்?'' என்று வந்து நிற்கும்போது, பதிலே இல்லாமல் சைக்கிள் கேரியரில் கட்டிய கிரிக்கெட் பேட்டும், சிறுவனின் மனநிலையுமாக எதிர்கொள்கிறார் ரமேஷன். பெண்ணை மட்டும் அல்ல, கிரிக்கெட்டைக்கூட ஆத்மார்த்தமாகக் காதலிக்க முடியும்தானே!

படிப்பு, காதல், வேலை என நாம் வாழ்வில் முக்கியமானதாக நினைக்கும் எல்லா விஷயங்களையும் கிரிக்கெட்டுக்காகக் கோட்டைவிட்டவன் ரமேஷன். ஆனால், இந்த நிலையைத் துயரமாக, அழுகையாகக் காட்சிப்படுத்தாமல் வாழ்க்கையின் இந்த அபத்தங்களையும் கொண்டாட்டமாக்கி இருப்பதுதான் ஸ்பெஷல்.

சச்சினைப் போல கிரிக்கெட்டில் புகழும் பணமும் பெற்றவர்கள் கிரிக்கெட் விளையாடுவது சரி. தினமும் சாப்பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிற ரமேஷன் ஏன் விளையாட வேண்டும் என்பதே அவர் குடும்பத்தின் கேள்வி. வாழ்க்கையின் சந்தோஷங்களை வெற்றி, தோல்விகளா நிர்ணயிக்கின்றன?

ரமேஷனுக்குத் திருமணம் முடிந்து முதல் இரவில் அறைக்குள் மனைவி வருகிறாள். அங்கே சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் படத்தைப் பார்த்து மனைவி 'யார்?’ எனக் கேட்க, அதிர்ச்சி அடைகிறான். தான் காதலித்த பெண்ணை அவள் குழந்தையோடும் கணவனோடும் பார்க்கும்போதுகூட இவ்வளவு அதிர்ச்சி அடையாதவன். கிரிக்கெட் பற்றி எந்த விவரமும் தெரியாத, கணவனின் கிரிக்கெட் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடியாத அந்தப் பெண், அதே கிரிக்கெட்டுக்காகத் தன் வளையலைக் கழற்றித் தருவாள்.

ரமேஷனின் மகன் பேட் பிடிக்கத் தொடங்குகிறான். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை சச்சின் அணி கைப்பற்றும்போது ரமேஷனின் மகனுக்கு 10 வயது. ரமேஷன், அவன் வாழ்க்கையில் தோற்றுப்போனதாகக் குடும்பம் கருதினாலும், அதுபற்றி எந்தப் புகார்களும் அற்ற ரமேஷன் தன் மகனை கிரிக்கெட்டில் ஊக்கப்படுத்துவதும், அந்த ஏழைத் தந்தை தன் மகனுக்கு கிரிக்கெட் கோச்சிங் கொடுக்க எடுக்கும் முயற்சிகளும்தான் மீதிப் படம்.

ரமேஷனின் மகன் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுவிட்டான்; கேலரியில் உட்கார்ந்து மகனின் சிக்ஸர்களை ரமேஷன் பார்த்து கண்ணீர் வடிக்கிறான் என்றெல்லாம் படம் முடியவில்லை. ஆனால், அப்படியான சினிமாத்தனங்கள் எதுவும் இன்றி 'உன் கனவுகளை நேர்வழியில் துரத்து’ என்ற சச்சினின் வாசகத்தோடு படம் முடிகிறது.

'என் மகன், அவன் லட்சியத்தை நிறைவேற்ற மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அவனது பயணத்தில் நான் எப்போதும் உடன் இருப்பேன்’ என்ற ரமேஷனின் குரல் நிறைவான உணர்வைத் தருகிறது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தியாவில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை எப்படி தன் வாழ்க்கைக்கான இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்வது என்பதை மிக மிக பாசிட்டிவாகச் சொன்னதில்தான் இந்தப் படம் வித்தியாசப்படுகிறது... ஜெயிக்கிறது!