Published:Updated:

அற்புதமான அங்கீகாரம்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

1842 -ல் நடக்கிறது கதை. தச்சு வேலை செய்யும் சாலமன், ஓய்வுப் பொழுதுகளில் வயலின் வாசிக்கும் அமெரிக்க கறுப்பினத்தவர். ஆனால், யார் கட்டுப்பாட்டிலும் இல்லாத சுதந்திரமானவன் (ஃப்ரீ மேன்)!

மனைவி, இரண்டு குழந்தைகள் என நிம்மதியாக வாழ்ந்துவந்தவனை, 'இரண்டு வார வேலை. பணக்காரர்கள் மாளிகையில் வயலின் வாசிக்கவேண்டும்’ என ஆசைக்காட்டி, நியூயார்க்கின் நியூ ஆர்லீயன்ஸுக்கு அழைத்துச் செல்கிறார்கள். முதல் நாள் ராஜமரியாதையோடு ஒயின் பார்ட்டியில் கௌரவிக்கப்படுகிறான் சாலமன். ஆனால், போதை அதிகமாகி நினைவிழப்பவன், காலையில் கண் விழிக்கும்போது இருண்ட அறையில், முரட்டுச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருக்கிறான். ஓர் இரவுக்குள் அவன் அடிமையாக்கப்பட்டிருக்கிறான்.

அற்புதமான அங்கீகாரம்!

'நான் அடிமை இல்லை. ஃப்ரீ மேன். என்னை விடுங்கள்’ என உரிமை கோரும் அவனது ஒவ்வொரு குரலுக்கும், 'நீ ஃப்ரீமேன் இல்லை; ஜார்ஜியாவில் இருந்து தப்பிவந்த அடிமை’ என்ற பதிலுடன் முதுகில் விழுகிறது சவுக்கடி. அங்கே ஆரம்பிக்கும் சாலமனின் அடிமை வாழ்க்கை, 12 ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் தொடர்கிறது. சாலமனின் ரத்தமும் சதையுமான 12 வருட வாழ்க்கையே '12 Years a Slave’ அமெரிக்கத் திரைப்படம்!

'கேப்டன் ஃபிலிப்ஸ்’, 'கிராவிட்டி’, 'அமெரிக்கன் ஹஸல்’, 'பிலோமினா’, 'தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’... என எந்த வருடமும் இல்லாமல் ஆஸ்கர் விருதுக்கு இந்த முறை கடும் போட்டி. ஆனால், ஆஸ்கர் லாபி, டெக்னாலஜி மிரட்டல்... என அத்தனை நெருக்கடிகளையும் தாண்டி சிறந்த பட விருதை வென்றிருக்கிறது '12 Years a Slave’.

சிறந்த படம், நடிப்பு, திரைக்கதை... உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை... என மூன்று விருதுகளைக் குவித்திருக்கிறது.

மெரிக்காவில், 1800-களில் கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக வளர்க்கப்பட்டு (!) வந்தனர். 1808-ல் பிறந்த சாலமன் நார்த்தப், ஆப்பிரிக்க - அமெரிக்கக் கறுப்பினத்தைச் சேர்ந்த சுதந்திர மனிதன். அடிமைகள் பற்றாக்குறையால் ஃப்ரீ மேன்களையும் அமெரிக்கர்கள் பொய் சொல்லி, ஏமாற்றிக் கடத்திவந்து அடிமைகளாக்க, அப்படி அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவன் சாலமன். ஏமாற்றி அடிமையாக்கப்பட்ட சாலமன், தன் முழுக் கதையையும் '12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ என்ற பெயரிலேயே எழுதிவைக்க, அதை அப்படியே படமாக்கியிருக்கிறார் இங்கிலாந்து இயக்குநர் ஸ்டீவ் மெக்குயின். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் 'உண்மை’ சுடுகிறது!

பொய் சொல்லிக் கடத்திவரப்படும் சாலமன், அடையாளங்கள் அழிக்கப்பட்டு 'பிளாட்’ என்ற பெயரில் அடிமையாக்கப்படுகிறான். சிறை வாழ்க்கை, அலுமினியத் தட்டில் சோறு, மலிவாக்கப்பட்ட நிர்வாணம், கொடூரக் கட்டுப்பாடுகள்... என 12 ஆண்டுகளும் வெவ்வேறு முதலாளிகளுக்கு விற்கப்படும் சாலமனின் வாழ்க்கை, வெறும் பிண்டங்களாகவே பார்க்கப்பட்டு, அடித்து, உதைத்து வேலைவாங்கி, பின் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரமாயிரம் கறுப்பின மக்களின் வரலாற்று சாட்சி.

அம்மாக்களிடம் இருந்து பிரிக்கப்படும் குழந்தைகள், நிர்வாணமாக நிற்கவைத்து, பல் பார்த்து, பேரம் பேசி விற்கப்படும் பெண்கள், வயல்வெளிகளில், கட்டடங்களில், காடுகளில் மாடு போல வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் படும் ஆண்கள்... எனப் படம் முழுக்க விரிகிறது அடிமைகளின் வாழ்க்கை.

கும்பல் கும்பலாக அடிமைகள் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டாலும் யாருமே விடுதலைக்காகவோ, அடிமை வாழ்க்கையை எதிர்த்தோ போராடுவது இல்லை. சாலமனும், 12 ஆண்டுகளும் தனக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்ற கோபம் அவ்வப்போது பொங்கி எழுந்தாலும், வேலை செய்யும் முதலாளிகளுக்கு விசுவாசமாகவே இருக்கிறான்.

அற்புதமான அங்கீகாரம்!

'2012’ படத்தில் உலகம் அழியப்போகும் ஆபத்தைச் சொல்லி உலக மக்களைக் காப்பாற்ற போராடும் விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்த சிவெட்டெல் எஜியோஃபார்தான், '12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ படத்தின் சாலமன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோட் சூட் சகிதம் மிடுக்காக வலம்வருவது, கசையடி வாங்கிக்கொண்டு முதலாளியிடம் பம்முவது, கோபத்தில் திமிருவது... என கண் இமையின் புருவங்களைக்கூட துடிதுடிக்கவைத்திருக்கிறார்!

இயக்குநர் ஸ்டீவ் மெக்குயினுக்கு இது மூன்றாவது படம். கிட்டத்தட்ட 16 வருடங்கள் குறும்படங்களை மட்டுமே இயக்கிவந்த ஸ்டீவ், 2008-ல் இயக்கிய முதல் முழுநீளப் படம் 'ஹங்கர்’ ஐரிஷ் உண்ணாவிரதப் போராட்டப் போராளியான பாபி சாண்ட்ஸின் வாழ்க்கையைப் பற்றியது. இரண்டாவது படம் 'ஷேம்’ காம வேட்கை போதையாக மாறுவதை நுணுக்கமாகப் பேசியது. மூன்றாவது படம்... '12 இயர்ஸ் எ ஸ்லேவ்’. ஆஸ்கருக்கு முன்னரே உலகம் முழுக்க 50-க்கும் மேற்பட்ட கௌரவமான விருதுகளைக் குவித்துவிட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம். பணம், புகழ் வெளிச்சத்தைப் பொழியும் ஒரு துறை. ஆனால், அதை மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உண்மைகளுக்காகப் பயன்படுத்திய ஸ்டீவ் மெக்குயின் குழுவினருக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம்... உண்மையில் அற்புதமானது!