Published:Updated:

இது ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சினிமா!

க.நாகப்பன்

''ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஓவியக் கல்லூரி அல்லது விஸ்காம் படிப்பு... ரெண்டுல ஏதாவது ஒண்ணுல சேரணும்னு முயற்சி பண்ணேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கலை. தொலைதூரக் கல்வியில் பி.காம்., சேர்ந்துட்டு, பொழுதுபோகாம கார்ட்டூன்கள் வரையப் பழகினேன்.

2004-ம் ஆண்டு தேர்தல் சமயம், அரசியல் ஜோக்குகள் பல வரைஞ்சு விகடனுக்கு அனுப்பினேன். நான் எதிர்பார்க்கவே இல்லை... சில ஜோக்குகள் பிரசுரமாச்சு. என் கற்பனையை அச்சில் பார்த்தப்ப வந்த சந்தோஷம்... அதுவரை நான் அனுபவிக்காதது. தொடர்ந்து விகடன்ல நான் வரைஞ்ச கார்ட்டூன்கள் வந்தன. அந்த உற்சாகம் கொடுத்த தூண்டுதலில் பல கிரியேட்டிவ் வேலைகள் பார்த்துட்டே இருந்தேன். அப்போ 'நாளைய இயக்குநர் சீஸன் 2’-வில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீஸன்ல போட்டியிட்ட 142 படங்களில், நான் இயக்கிய 'முண்டாசுப்பட்டி’ சிறந்த படத்துக்கான விருது ஜெயிச்சது. யூ-டியூப்ல அஞ்சு லட்சம் ஹிட்ஸ். அந்த அங்கீகாரம் தந்த தன்னம்பிக்கையோட இதோ வெள்ளித்திரைக்கு வந்துட்டேன்!'' ஒவ்வொரு வார்த்தையிலும் உற்சாகம் புதைத்துப் பேசுகிறார் ராம். குறும்படப் போட்டியில் விருது வென்ற 'முண்டாசுப்பட்டி’யை அதே பெயரில் சினிமாவாக இயக்கிக்கொண்டு இருக்கிறார்.

இது ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சினிமா!

''குறும்பட அனுபவங்கள் மட்டுமே சினிமா இயக்குநர் ஆவதற்குப் போதுமானதா?''

''அது மட்டும் போதாது. ஆனா, அதுகூட இல்லைன்னா, நல்லா இருக்காதே! 'சைனா டீ’-னு நான் இயக்கிய குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. ஒரு டீக்கடைல டீத்தூள் தர்றவர் ஒருநாள் புது டீத்தூள் தர்றார். அந்த டீத்தூள்ல போட்ட டீயைக் குடிச்ச ஒரு பெரியவர் செத்துடுவார். புது டீத்தூள் டீ குடிச்சதாலதான் அவர் செத்துட்டார்னு ஊரே பரபரப்பாகிரும். ஆனா, அந்தப் பெரியவரோ கடன் பிரச்னையால் விஷம் குடிச்சிட்டு டீ குடிக்க வந்திருப்பார். இதை காமெடியாச் சொல்லியிருப்பேன். இந்தக் கதையைக் குறும்படமா மட்டும்தான் எடுக்க முடியும். ஏன்னா, இது ஒரு சம்பவம். சினிமா வுக்கான ஸ்கோப் இதில் இல்லை. ஆனா, சினிமாவுக்கான ஸ்கோப் இருக்கும் குறும்படங்களை பக்காவா ட்யூன் பண்ணா, நிச்சயம் ஹிட் சினிமா உருவாக்கலாம்.

இது ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சினிமா!

இயக்குநர் ஆசை வந்ததும் 'சூதுகவ்வும்’ நலன் குமரசாமிகிட்ட அசோசியேட்டா வேலை பார்த்தேன். அந்த அனுபவங்களும் குறும்படப் பரிச்சயமும் ஒரு சினிமா இயக்கத்துக்குத் தேவையான தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கு!''

''அப்போ 'முண்டாசுப்பட்டி’ குறும்படத்தில் எதை எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கீங்க?''

இது ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சினிமா!

''இது 80-களில் நடக்கிற கதை. கேமராவால் போட்டோ பிடிக்கக் கூடாதுங்கிறதை ஊர்க் கட்டுப்பாடா வெச்சிருக்கும் கிராமம்தான் முண்டாசுப்பட்டி. அங்கே ஒரு பெரியவர் இறந்துடுறார். பெரியவரின் பூத உடலை போட்டோ எடுக்க ஹீரோ தன் உதவியாளரோட போறார். அப்போ எங்கே நம்மளை போட்டோ புடிச்சிருவானோனு ஊரே அவனைப் பார்த்து ஒளியுது. ஒருவழியா பெரியவரை போட்டோ எடுத்துட்டு வந்தா, அது சரியா பிரின்ட் ஆகலை. இதனால ஊருக்குள்ள ரசாபாசம் ஆகுது.

பெரியவர் குடும்பத்தோட கோபத்துல இருந்து தப்பிக்க ஹீரோவும், அவர் ஃப்ரெண்டும் ஊரைவிட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாங்க. ஆனா, ஊர் மக்கள் பிடிச்சு தண்டனை கொடுக்கிறாங்க. அந்த ஊர்ல இருந்துட்டே தண்டனை அனுபவிக் கும்போது, ஹீரோவுக்குக் காதல் வருது. அந்தத் தண்டனை என்ன ஆச்சு... காதல் என்ன ஆச்சு? இதை குறும்பட ட்விஸ்ட், சினிமா த்ரில் எல்லாம் சேர்த்துச் சொல்லியிருக்கேன். ஒவ்வொரு கால் மணி நேரமும் ஒவ்வொரு குறும்படமா உங்களை ஈர்க்கும்!''