Published:Updated:

மகளிடம் ரஜினி கேட்ட பரிசு!

க.நாகப்பன், படங்கள்: தேர்ட் ஐ பிரகாஷ்

ஷாரூக் கான், ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன்... என மும்பை நட்சத்திரங்களும், கே.பாலசந்தர்,  கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து... என தென்னிந்தியக் கலைஞர்களும் ஒரே மேடையில். வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் இணைத்த அந்தக் காந்தம்... ரஜினிகாந்த். 'கோச்சடையான்’ பட இசை வெளியீட்டு விழா!

படத்தின் இயக்குநராக முதலில் மைக் பிடித்தார் சௌந்தர்யா. ''படத்தில் கே.எஸ்.ரவிகுமார் அங்கிள், 'வாய்ப்புகள் தானா அமையாது; அதை நாம்தான் அமைத்துகொள்ள வேண்டும்’னு ஒரு வசனம் எழுதியிருப்பார். அது எனக்கு ரொம்பப் பிடிச்ச வசனம்!'' என்றவர் ரஜினியைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் 'ப்பா, ப்பா’ என்றே சொல்ல, கண்கள் பனிக்க அதை ரசித்துக்கொண்டிருந்தார் ரஜினி.

ஏவி.எம்.சரவணன், எஸ்பி.முத்துராமனுக்குப் பின் பேச வந்தார் தீபிகா படுகோன். ''ரஜினி, என்னை இன்னொரு மகள்போல பார்த்துக்கொண்டார். ரஜினி வீட்டு ரசம் எனக்கு அவ்வளவு பிடிக்கும்'' என்றார்.

மகளிடம் ரஜினி கேட்ட பரிசு!

பலத்த கைதட்டல்களுக்கு நடுவே பேச வந்த ஷாரூக் கான், ''24 வருஷத்துக்கு முன்னாடி  இந்தி படப்பிடிப்பு ஒன்றில் ரஜினிகாந்தை முதன்முதலாகப் பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன். ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர், நடிகைகள் எல்லோரும் லன்ச்சுக்குப் போயிட்டாங்க. ரஜினி மட்டும் சாப்பிடாமல், சிகரெட்டை ஸ்டைலாகத் தூக்கிப்போட்டுப் பிடிச்சிட்டு இருந்தார். அப்போ இருந்தே நான் ரஜினி ரசிகன் ஆகிட்டேன். இங்கே நான் ரஜினி ரசிகனா மட்டுமேதான் வந்திருக்கேன்!'' என்று அப்ளாஸ் அள்ளினார்.

தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறு வேகத்தில் மேடையேறினார் ரஜினி.  ''எனக்கு எப்பவுமே ராஜா-ராணி கதைனா ரொம்பப் பிடிக்கும். 150 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். ரசிகர்களுக்காக நிறையப் படங்கள் பண்ணிருக்கேன். ஆனா, இதுவரை எனக்குப் பிடிச்ச ஒரு ராஜா-ராணி கதைகூடப் பண்ணினதே இல்லைங்கிற ஆதங்கம் மனசுல இருந்துச்சு.

தமிழ் சினிமாவில், ஏன் இந்தியாவிலேயே யாருமே பண்ணாத ராஜா-ராணி படம் ஒண்ணு பண்ணணும்னு முடிவு பண்ணித்தான் 'ராணா’  ஆரம்பிச்சோம். ஆனா, அந்தப் படம் தொடங்கின நேரத்துலதான் எனக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அதுக்குப் பிறகு என்னல்லாம் ஆச்சுனு உங்களுக்கே தெரியும். சிங்கப்பூர்ல சிகிச்சை முடிந்து திரும்பி வந்தாலும், 'ராணா’ கதையைத் தொடங்க முடியலை. ஏன்னா... அதில் நடிக்க நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு.

ஒருநாள் முரளி மனோகர் எனக்கு போன் பண்ணி, 'கே.எஸ்.ரவிகுமார் 'கோச்சடையான்’னு ஒரு கதை பண்ணியிருக்கார். கேட்டுப் பாருங்க’னு சொன்னார். 'இப்போ ராஜா-ராணி கதை பண்ண முடியாது. குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஆகும்’னு சொன்னேன். 'நீங்க முதல்ல அதைக் கேளுங்க. அப்புறம் எப்படிப் பண்ணலாம்னு முடிவு செஞ்சுக்கலாம்’னு சொன்னார் முரளி.

மகளிடம் ரஜினி கேட்ட பரிசு!

ரவிகுமார், கதை சொன்னப்ப, 'ராணா’வைவிட 'கோச்சடையான்’ கதை ரொம்ப நல்லா இருக்கேனு தோணுச்சு. 'இந்தப் படத்தை எப்படிப் பண்ணலாம்?’னு ரவிகுமார்கிட்ட கேட்டப்ப, 'இதை சௌந்தர்யாவை டைரக்ட் பண்ணச் சொல்லலாம். மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் இந்தப் படத்தை உருவாக்க லாம்’னு சொன்னார். நமக்கு டெக்னாலஜி பத்தி ஒண்ணும் தெரியாதேனு ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட ஒப்பீனியன் கேட்டேன். 'அவர்தான் நீங்க தைரியமாப் பண்ணுங்க சார். நிச்சயம் நல்லா வரும்’னு நம்பிக்கை  கொடுத்தார். சௌந்தர்யாகிட்ட, 'இந்தப் படத்தில் உனக்குப் பெரிய பொறுப்பு இருக்கும். அதைத் தாங்கிப் பண்ண முடியுமா?’னு கேட்டேன். 'நிச்சயமா முடியும்’னு அவங்க உறுதியா சொன்னாங்க. அங்கே ஆரம்பிச்ச இந்தப் படம், இந்த அளவுக்கு வரக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் அந்த உற்சாகமான ஊக்கம்தான்!

என் பொண்ணுங்க ஐஸ்வர்யா, சௌந்தர்யா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்கனா, அதுக்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர்தான் காரணம். அவங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் இன்னும் நிறையப் படங்கள் பண்ணணும்.

'கோச்சடையான்’ ரிலீஸ் ஆன பிறகு சௌந்தர்யாகிட்ட நிறையப் பேர் படம் இயக்கச் சொல்லிக் கேட்பாங்க. ஆனா, ரெண்டு குழந்தைகளைப் பெத்து என்கிட்ட கொடுத்துட்டு அதுக்குப் பிறகு நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க!'' என்று வாய் கொள்ளாச் சிரிப்போடு ரஜினி முடிக்க, மலர்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சௌந்தர்யா.

'கோச்சடையான்’ டிரெய்லர் திரையில் ஒளிபரப்பாகி முடியும் தருணத்தில், கண்களில் துளிர்த்திருந்த நீரைத் துடைத்துக்கொண்டார் ரஜினி. அது 'ரஜினி’ என்ற நடிகனின் கண்ணீர் அல்ல; தன் மகளின் உழைப்பை நினைத்துப் பூரிக்கும் 'ரஜினி’ என்ற அப்பாவின் பெருமிதம்!