அரசியல்
Published:Updated:

“எப்பவுமே உள்ளுக்குள்ளே ஒரு கரன்ட்!”

ம.கா.செந்தில்குமார்

'என்னை இங்கேயே கொன்னுடு.  உசுரோட விட்டா, 'ஏண்டா இவனை உயிரோட விட்டோம்’னு பின்னால வருத்தப்படுவ!’ - 'தில்’, 'தம்மாத் துண்டு பிளேடு மேல வெச்ச நம்பிக்கையை உன்மேல வைடா!’ - 'கில்லி’, 'நமக்குக் கீழ இருக்கிறவனை நாம எப்படிப் பார்த்துக்கிறமோ, அதை வெச்சுதான்டா நமக்கு மேல இருக்கிறவன் நம்மளைப் பார்த்துக்குவான்!’ - 'வீரம்’... இப்படி மாஸ் பல்ஸ் பிடிக்கும் பன்ச் வசனங்கள் பரதனின் அடையாளம். 'அழகிய தமிழ் மகன்’ படத்துக்குப் பிறகு பெரிய இடைவெளி விட்டு 'அதிதி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'காக்டெயில்’ படத்தின் தமிழ் ரீமேக் 'அதிதி’.

''விருந்தினர்களை 'அதிதி’னு சொல்வாங்க. சந்தோஷமாப் போயிட்டு இருக்கும் ஹீரோ - ஹீரோயின் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஒரு அதிதி வர்றான். அவன் உண்டாக்கும் விளைவுகள்தான் படம். கதையின் 70 சதவிகிதக் காட்சிகள், காலை 8 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி 12 மணிக்குள் முடியிற மாதிரி இருக்கும்.

“எப்பவுமே உள்ளுக்குள்ளே ஒரு கரன்ட்!”

'காக்டெயில்’, மலையாளத்துல டிரெண்ட் செட்டர் படம். படத்தை டி.வி.டி-ல பார்க்க ஆரம்பிச்சபோ, நடுவுல ஒரு போனுக்கோ, ஒரு மெசேஜுக்கோக்கூட கவனம் கலையலை. அப்படி முதல் சீன்ல இருந்தே பரபரனு கதை ஆரம்பிச்சிடும். அந்தக் கதையைச் சிதைக்காம, நம்ம ஸ்டைலுக்கு திரைக்கதை அமைக்கிறதே பெரிய சவாலா இருந்துச்சு.

முருகதாஸ் சார் சொன்னார்னு நினைக்கிறேன்... 'ஒரு கோடு போடு’னு சொன்னா டக்குனு போட்டுருவோம். ஆனா, ஒரு கோடு போட்டுட்டு அதுக்குப் பக்கத்துல 'அதே மாதிரி இன்னொரு கோடு போடு’னு சொன்னா, 'அதே மாதிரி கோடு வரையணுமே’னு டென்ஷன் ஆகிடுவோம்ல... ரீமேக் படங்கள் பண்றது அப்படி ஒரு டென்ஷன். 'ஒரிஜினல் மாதிரி இல்லையே?’னு ஒரு வரில ஈஸியா கமென்ட் அடிச்சிடுவாங்க. அதனால ஒரிஜினலைவிட ரீமேக் பண்றப்போ, பார்த்துப் பார்த்துப் பண்ணணும்!''

''ரீமேக்ல என்ன வித்தியாசப்படுத்தப்போறீங்க?''

''ஒரிஜினல்ல சின்னதா இருந்த ஒரு காமெடி கேரக்டரை, 'ஒண்டிப்புலி’னு பேர் வெச்சு படம் முழுக்க வர்ற மாதிரி டெலவப் பண்ணி இருக்கோம். அதுல என் ஃபேவரைட் தம்பி ராமையா சார் நடிக்கிறார். 'தம்பி’ அண்ணன், படத்துக்குப் பெரிய பலம். இசை, வசனம், எடிட்டிங்னு எல்லாத்தையும் புதுசாவே பண்றோம். பரத்வாஜ் சார் இசையில் வந்த பாடல்கள் எனக்கு எப்பவுமே இஷ்டம். 10 வருஷம் கழிச்சுக்கூட அந்தப் பாடல்களை ரசிக்கலாம். சாஸ்திரிய சங்கீதத்தை முறையாப் படிச்சவர். 'சந்தோஷத்தைக் கடத்துற ரீதிகௌளை ராகத்துல ஒரு பாட்டு வேணும் சார்’னு கேட்டேன். 'என்கிட்ட ராகத்தைச் சொல்லிப் பாட்டு கேட்ட முதல் இயக்குநர் நீங்கதான்’னு உற்சாகமாயிட்டார். இப்படி எங்கெல்லாம் ஸ்கோப் இருக்கோ, அங்கெல்லாம் எக்ஸ்ட்ரா மைலேஜ் சேர்த்துட்டு இருக்கோம்!''

''பளிச் பன்ச் வசனங்கள் உங்க பலம். எங்கே, எப்படிப் பிடிக்கிறீங்க அந்தப் பன்ச்களை?''

''தரணி சார்கூட 'தில்’, 'தூள்’, 'கில்லி’, 'ஒஸ்தி’, தெலுங்குல 'பங்காரம்’னு அஞ்சு படங்கள் பண்ணினேன். வசனம் எழுதும்போது எந்தக் குறுக்கீடும் இல்லாம கதை நடக்கும் சூழலோட ஒன்றினால்தான் அப்படியான பளிச் பன்ச்களைப் பிடிக்க முடியும். அந்தச் சூழல் தரணி சார் படங்களில் எனக்குக் கிடைக்கும். அதுக்காக ஒரே வாரத்துல ஒட்டுமொத்தப் படத்துக்குமான பன்ச்களையும் பிடிச்சுர முடியாது. நாம சந்திக்கிற மனிதர்கள், படிக்கிற விஷயங்கள்னு தினமும் ஏதோ ஒரு புது விஷயத்தைக் கிரகிச்சுட்டே இருக்கணும். அதுதான் ஒரு வசனகர்த்தாவுக்கு அடிப்படை வேதம். அப்படி மனசுல பதிஞ்ச, படிக்கிற, பார்க்கிற விஷயங்களை ஸ்பேஸ் கிடைக்கிறப்போ சேர்த்துடணும்.

“எப்பவுமே உள்ளுக்குள்ளே ஒரு கரன்ட்!”

'உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சதுனு எந்த ரகசியமும் கிடையாது. கடவுளையும் சேர்த்து மூணு பேருக்கு அது தெரியும்’னு எங்கேயோ படிச்சதுதான், 'நமக்குக் கீழ இருக்கிறவனை நாம எப்படிப் பார்த்துக்கிறமோ, அதை வெச்சுதான்டா நமக்கு மேல இருக்கிறவன் நம்மளைப் பார்த்துக்குவான்’னு 'வீரம்’ல எழுத வெச்சது. 'கில்லி’ல பிரகாஷ்ராஜ் 'செல்லம்... செல்லம்...’ சொன்னது நான் சேர்த்த வசனத்துலதான். அவர் ஸ்பாட்ல, எடிட்டிங்ல, அலுவலகத்துலனு எல்லா இடத்துலயும் சும்மாவே 'செல்லம்... செல்லம்...’னுதான் எல்லாரையும் கூப்பிடுவார். அதை அந்த கேரக்டருக்கு மேட்ச் பண்ணலாம்னு ஃபிக்ஸ் பண்ணது மட்டும்தான் என் ஐடியா. அந்த ஐடியா பல்ப் எரிய, எப்பவும் நமக்குள்ள ஒரு கரன்ட் ஓடிட்டே இருக்கணும்!''