Published:Updated:

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

Published:Updated:

பிரியத்தை, கோபத்தை, அக்கறையை, அன்பை... வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையே இல்லை என்று சொல்ல 'வாயை மூடி பேசி’யிருக்கிறார்கள்!

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

பனிமலை என்கிற மலைக் கிராமத்தில் குரல் இழப்பு உண்டாக்கும் வித்தியாசமான நோய் பரவுகிறது. நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை ஊருக்குள் யாரும் பேசக் கூடாது என்று தடை உத்தரவு விதிக்கிறது அரசு. அந்த 'மௌன யுகத்தில்’ ரேடியோ ஜாக்கி கனவில் இருக்கும் துல்கர் சல்மான் (அறிமுகம்), பிடிக்காத திருமணத்தை மறுக்க முடியாத நஸ்ரியா, நியூக்ளியர் ஸ்டாருக்காக முட்டி மோதிக்கொள்ளும் இளைஞர்கள், குடும்பத் தலைவியாக தன்னைச் சுருக்கிக்கொண்ட எழுத்தாளர் மதுபாலா, சுகாதாரத் துறை அமைச்சர் போன்ற பலரின் நிலை என்ன ஆகின்றன என்பதே படம்!

'காதலில் சொதப்பி’க் கவனம் ஈர்த்த பாலாஜி மோகன், இந்த முறை 'சவுண்டு, ம்யூட்’ என ஷோ காட்டியிருக்கிறார். ஒரு கலாட்டா கற்பனையில் மனிதர்களின் உறவுச் சிக்கல்கள், சினிமாப் பித்து, ஊடக உள்குத்து, அரசியல் பஞ்சாயத்து... எனப் பல விஷயங்களை பார்சல் செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்கப் பேச்சு, இரண்டாம் பாதியில் மௌனம் என வித்தியாசமான ட்ரீட்மென்ட் பிடித்திருப்பது நச். ஆனால், எந்த அழுத்தமும் இல்லாமல் ஒவ்வொரு சம்பவமும் கடப்பது... ப்ச்!

ஜில் பார்வையும் ஜிலீர் புன்னகையுமாக எனர்ஜி அறிமுகம் துல்கர் சல்மான். அந்த வெடவெட உடம்பும் 'வெல்கம்’ கண்களும்... 'பேச்சு தீவிரவாதி’ பாத்திரத்துக்கு பர்ஃபெக்ட்! முதல் பார்வையிலேயே ஈர்த்து, குட்டிக் குட்டிச் சேட்டைகளில் கவர்ந்து முழுப் படத்தையும் தன் தோளில் தாங்குகிறார்.

துறுதுறு பட்டாம்பூச்சியாக பார்த்துப் பழகிய நஸ்ரியா, இதில் '24*7’ சோகம் ததும்ப வலம் வருகிறார். 'எனக்கு மாடர்ன் டிரெஸ் ஓ.கேவா?’ எனக் கேட்கும் இடத்தில் மட்டும்... ஹண்ட்ரட் வாட்ஸ் பிரகாசம்!

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

மீடியாவிடம் குழப்ப ஆடியோவாக உளறிவைக்கும் பாண்டியராஜன், குடிகாரர்கள் சங்கத் தலைவராகச் சலம்பி அலம்பும் ரோபோ சங்கர், களேபர நியூக்ளியர் ஸ்டார் ஜான் விஜய், ஃபிகர் பார்த்தாலே உளறும் அர்ஜுனன் என ஆங்காங்கே ஸ்மைலி ஸ்டிக்கர்கள். 'கம்பேக்’ மதுபாலா பாந்தமாக இருக்கிறார்... அவ்வளவே!

அசரவைக்கும் ட்விஸ்ட்கள் இல்லாத படத்தின் கேன்வாஸை ரசிக்கவைப்பது சௌந்தர்ராஜனின் 'லவ்லி’ ஒளிப்பதிவு.

இந்தக் கற்பனை கதைக்கு லாஜிக் தேவை இல்லையென்றாலும், திரைக்கதையில் ஆங்காங்கே மேஜிக் செய்திருக்கலாம். அத்தனை பேரும் பேசாமல் இருக்கும் காட்சிகளில் 'விஷ§வல் விருந்து’ வைக்காமல், அப்போதும் சைகை மூலம் சவசவ என 'பேசிக்கொண்டே’ இருக்கிறார்கள்.

எதிர்பார்க்கும் சம்பவங்கள் எதிர்பார்க்கும் விதத்திலேயே நடந்து முடிகின்றன. இதற்கு ஏன் அந்த 'மௌனப் புரட்சி’?

- விகடன் விமர்சனக் குழு