Published:Updated:

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

Published:Updated:

தன் அப்பாவுக்கு அவப்பெயர் சுமத்தி, மரண தண்டனை அளிக்கப்பட காரணமாக இருந்தவர்களை வீழ்த்த மகன் ஆடும் போர் தாண்டவமே 'கோச்சடையான்’!

சிம்பிளாக, 'மோஷன் கேப்ச்சர்’ உத்தியில் ரஜினியை வைத்து ஓர் 'அம்புலி மாமா’ சினிமா!

இந்தியாவின் முதல் 'மோஷன் கேப்ச்சர்’ படத்தில் ரஜினியை 'நடிக்க’வைத்து கவனம் ஈர்த்ததற்கும், நாகேஷ§க்கு 'உயிர்’ கொடுத்து பரவசமளிக்கும் அனுபவத்தின் சாம்பிள் காட்டியதற்கும், தமிழ் மன்னர்களின் கலாசாரத்தை சினிமாவின் நவீன உத்தியில் பதிவுசெய்ததற்கும்... அறிமுக இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வினுக்கு வாழ்த்துகள்! ஆனால், படத்தின் ஆன்மாவான 'சலனப் பதிவாக்க’ உத்தியில்... சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடிக்க, இன்னும் பயிற்சியும் முயற்சியும் அதிஅவசியம்.

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

அநாதை சிறுவன் ராணா கலிங்கபுரியில் தஞ்சமடைந்து, போர் வித்தைகள் பயில்கிறான். மாபெரும் வீரனாக உருவாகி, நாட்டின் போர்ப்படைத் தளபதி ஆகிறான். கலிங்கபுரியில் அடிமைகளாக இருக்கும் கோட்டைப்பட்டினத்து வீரர்களைக் கொண்டு ஒரு படை அமைக்கிறான். கலிங்கபுரியின் பரம்பரை விரோதியான கோட்டைப்பட்டினம் மீது படையெடுத்துச் செல்கிறான். தொடரும் திருப்பங்களில் இரு நாட்டு மன்னர்களுமே ராணாவைக் கொல்லக் குறிவைக்கிறார்கள். ராணா ஏன் இரு மன்னர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டும்... இருபுறத் தாக்குதல்களில் இருந்து தப்பித்தானா என்பதே படம்!

மன்னன், தளபதி, துரோகம், பழிவாங்கல்... என பழக்கமான கதைக்கு, அட்டகாச அரண்மனைகள், ஆயிரக்கணக்கில் மோதும் போர் வீரர்கள், பாயும் குதிரைகள், பிளிறும் யானைகள்... என பிரமாண்ட கேன்வாஸ் அமைத்திருக்கிறது புதிய தொழில்நுட்பம்!

'ஆஹா..! படத்தில் ரஜினியின் நடிப்பு அட்டகாசம், ஸ்டைலில் பட்டையைக் கிளப்பிவிட்டார், தீபிகாவின் அழகும் ஆக்ஷனும் ஆசம்’ என்றெல்லாம் குறிப்பிட முடியாதே 'கோச்சடையான்’ விமர்சனத்தில்! இவர்கள் யாரும்தான் படத்தில் நடிக்கவில்லையே. சம்பந்தப்பட்டவர்களின் உடல் மொழிகளைக்கொண்டு 'அனிமேஷன் இன்ஜினீயர்கள்’தானே நடிகர்களின் 'நடிப்பை’ப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

மறைந்த கலைஞர் நாகேஷ் மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் கற்பனையைச் சாத்தியப்படுத்தியது அழகு. ஆனால், ஹாலிவுட் அனிமேஷன், சி.ஜி., 'மோஷன் கேப்ச்சர்’ படங்களை 'ஜஸ்ட் லைக் தட்’ பார்த்துப் பழகிய கண்களுக்கு 'கோச்சடையானின்’ சலனப் பதிவாக்கம் ஏமாற்றமே. ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன், ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி.... என முகச் சுருக்கம் முதல் உடல்மொழி வரை ப்ளாஸ்டிக் எக்ஸ்பிரஷன்கள். 'மோஷன் கேப்ச்சரிங்’ என்றால் வெறும் நடை, ஓட்டம் உள்ளிட்ட அசைவுகள் மட்டுமா..? புருவச் சுழிப்பு, உதட்டின் நெளிவு, நெற்றிச் சுருக்கம் வரையிலும் உள்ளடக்கியதுதானே! அவ்வளவும் ப்ளாஸ்டிக் எக்ஸ்பிரஷன்களாக இருப்பது நெளியவைக்கிறது.  

ஆனால், இரு நாட்டு மன்னர்களுக்கும் 'ராணா’ கொடுக்கும் ட்விஸ்ட் செம அசத்தல். கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதையும், ரஹ்மானின் பின்னணி இசையுமே நம்மை படத்துக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன.

தன் குரலால், திரையின் அனிமேஷனுக்கு அத்தனை ஜீவன் சேர்த்திருக்கிறார் ரஜினி. நாகேஷ§க்கு குறும்புக் குரல் கொடுத்த 'நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்திக்கு ஸ்பெஷல் சபாஷ்.

'மயில் நடன’ தீபிகா, தந்தையைக் கொல்ல வரும் மர்ம நபரிடம் காட்டும் அதிரடி, மரண மேடையில், 'கடவுள்கிட்ட பத்திரமாப் போயிட்டு வாங்கப்பா’ என்று தந்தையை வழியனுப்பும் மகனின் சென்டிமென்ட், க்ளைமாக்ஸில் இரண்டாம் பாகத்துக்கான  ட்விஸ்ட் என 'ராஜா-ராணி’ கதையிலும் கரகர மசாலா!

ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியின் கிளாசிக் ஆல்பம் இது. ஆனால், முணுக்கென்றால் 'ஒலியும்-ஒளியும்’ போடும் அவ்வளவு பாடல் காட்சிகள் அலுப்பு!  

ரஜினி, தீபிகாவின் முகங்கள் ரியல் பொலிவுடன் இருக்க, நாசர், சரத்குமார், ருக்மணி, ஜாக்கி ஷெராஃப், ஆதி ஆகியோரை குரலை வைத்தே 'ஓ... இவரா?’ என்று 'கன்ஃபார்ம்’ செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதே போல ரஜினி, தீபிகா உருவங்களின் டீட்டெய்லிங்கை படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்வதுதானே நியாயம்? ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரஜினி பளிச்சென்று இருக்க, சுற்றிலும் நிற்பவர்கள் 'மொழுமொழு’ பொம்மை கணக்காக ஆக்ஷன், ரியாக்ஷன் எதுவும் இல்லாமல் 'மிக்ஸர்’ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே! 'சோட்டா பீம்’ கேரக்டர்களே இதைவிட எக்ஸ்பிரஸ்ஸிவ்வாக இருப்பார்களே!

காட்டாற்று வெள்ளத்தில் ராணா அடித்துச் செல்லப்படும், வெள்ளை மயிலோடு தீபிகா நடனமாடும், கோச்சடையானின் ருத்ர தாண்டவம், குதிரையில் பறக்கும் ராணா... எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளில் மட்டும் விசிலடிக்கவைக்கிறது '3டி’ விஷ§வல்! 'ப்ளாஸ்டிக் எக்ஸ்பிரஷன்களை’ மறந்து படத்தோடு ஒன்றச் செய்வதில் ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு செய்திருப்பது 'மாஸ்டர் பீஸ்’ சாதனை.

கோச்சடையான் - சினிமா விமர்சனம்

'எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு. முதல் வழி மன்னிப்பு’, 'வாய்ப்புகள், அமையாது; நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்’... என்ற வசனங்களே, 'ரஜினி பன்ச்’ இல்லாத குறையை சரிகட்டுகின்றன.

புதிய தொழில்நுட்பம் மூலம் இந்திய சினிமாவில் 'சலனத்தை’ உருவாக்க முயன்றிருக்கிறான் 'கோச்சடையான்’. முனைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள். ஆனால், 'டெக்னிக்கல் பிரில்லியன்ஸே’ இல்லாமல் ஒரு டெக்னிக்கல் சினிமா ஏன்? அசாத்தியமான விஷயங்களை அசரடிக்கும் வகையில் சாதித்திருக்க வேண்டும். அது மிஸ்ஸிங்!

- விகடன் விமர்சனக் குழு