Published:Updated:

‘அப்பு இல்லைனா சீதாராமன்!’

ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.கேசவசுதன்

‘அப்பு இல்லைனா சீதாராமன்!’

ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.கேசவசுதன்

Published:Updated:

'''எப்பிடிடா இவர்கிட்ட வேலை செய்றீங்க?’னு ஒரு இயக்குநர் எங்ககிட்ட ஒருதடவை வாய்விட்டே கேட்டுட்டார். ஏன்னா, தமிழ் சினிமால யாருக்கு பிறந்த நாள் வந்துட்டாலும், நாங்க பரபரப்பாயிடுவோம். பிறந்த நாள் பிரபலங்களே ரிலாக்ஸா இருக்கும்போது, அவங்களுக்கு புதுமையா என்ன பரிசு தரலாம்னு மண்டையைப் பிச்சிட்டு யோசிப்போம்.

இப்படித்தான் ஒருதடவை, 'பொங்கல் அன்னைக்கு 100 பிரபலங்களுக்கு ஆவி பறக்க சூடா பொங்கல் அனுப்புறோம்’னு சொல்லிட்டுப் போயிட்டார். அதிகாலை          3 மணிக்கு பொங்கல் பொங்கி, அதை 100 மண் குவளைகள்ல பேக் பண்ணி ஹாட் பாக்ஸ்ல வைச்சு, 100 ஆட்டோக்களை வாடகைக்குப் பிடிச்சு, மணிரத்னம் தொடங்கி எல்லார் வீட்டுக்கும் ஆவி பறக்க பொங்கல் கொடுத்தோம். இப்படி ஒவ்வொரு நாளும் 'இன்னைக்கு என்ன புதுமை?’னு சவாலோட ஆரம்பிச்சு சவாலோட முடிப்பார் பார்த்திபன்!’ - தன்னைப் பற்றி தன் முன்னாள் உதவி இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுவதை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் பார்த்திபன்.

‘அப்பு இல்லைனா சீதாராமன்!’

தன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பிரபல இயக்குநர்களின் 'கதை விவாதத்தை’ அரங்கேற்றியது பார்த்தி  பனின் அன்றைய சவால்!

கலைஞானம், விக்ரமன், பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், பிரகாஷ்ராஜ், லிங்குசாமி, சுசீந்திரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.அதியமான், பிரபு சாலமன், ஏ.எல்.விஜய், சாமி, மனோஜ்குமார், புஷ்கர்-காயத்ரி, நந்தினி, தம்பி ராமையா, தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணிதரன்... என இயக்குநர்களின் சங்கமமாகத் திகழ்ந்தது அந்த விழா.

''ஒரு தடவை, 'நம்ம கம்பெனிக்கு லோகோ தயார் பண்ணணும்’னு சொல்லி மேனேஜர் உமாபதிகிட்ட, அது சம்பந்தமா ஒருத்தர்கிட்ட விவரம் கேட்டுட்டு வரச் சொன்னார். மறுநாள், 'என்னங்க அவரைப் பார்த்தீங்களா?’னு கேட்டப்ப, 'ஒண்ணுக்கு பத்து தடவை போயிட்டேன். அவரைப் பார்க்க முடியலை’னு உமாபதி சொல்ல, 'அதுக்கு நீங்க டாக்டரைத்தான் பார்க்கணும். அவரை ஏன் பார்க்கப் போனீங்க?’னு இவர் கலாய்க்க, அந்த காமெடி புரியாம உமாபதி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல, 'ஏங்க... நான் சொன்னது இவருக்குப் புரியுதா இல்லையான்னே புரியலையே. இவரை டாக்டரைப் பார்க்கச் சொல்லுங்க’னு சொல்ல... அன்னைக்கு முழுக்க கலகலப்புதான்!'' என்று குறும்புச் சம்பவங்களை அடுக்கினார் கரு.பழனியப்பன்.

'' 'புதிய பாதை’ ரிலீஸானப்ப 'அபூர்வ சகோதரர்கள்’ படமும் ரிலீஸ் ஆகியிருந்துச்சு. அப்போ, 'அப்புவைப் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், இந்த சீதாராமனைப் பார்க்க வாருங்கள்’னு வித்தியாச விளம்பரம் பண்ணியிருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. இது 'புதிய பாதை’க்கு வெள்ளிவிழா ஆண்டு. இவ்வளவு நாள் ஒருத்தர் சினிமாவில் தன் மீதான எதிர்பார்ப்பை தக்கவைச்சிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்!'' என்று சிலாகித்தார் பிரபு சாலமன்.

‘அப்பு இல்லைனா சீதாராமன்!’

''முன்ன வாங்க ஷரத்'' என்று அறிவிப்பு வந்ததும், ''முன்னே வரத்தான் ஆசை'' என்றபடி மேடையேறினார் படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷரத்.

''பார்த்திபன் சார், 'வித்தியாசமா டியூன் வேணும்... வித்தியாசமா டியூன் வேணும்’னு கேட்டுக் கேட்டு, நான் போட்ட டியூன்களை எல்லாம் சேர்த்தால், இது குறுந்தகடாக இருக்காது. பெருந்தகடாகத்தான் இருக்கும். ஒரு கட்டத்துல இவரோட வித்தியாச வேட்கை அதிகமாக, 'திருடி டியூன் போட்டுடலாமா’னுகூட யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா, அன்பான மனுஷன்!'' என்று நெகிழ்ந்தார் ஷரத்.

''சினிமா விழாக்களுக்குக் கிளம்புறப்ப, 'சார் ஏதாவது பேசணும். கொஞ்சம் யோசிப்போமே’னு பாலாஜி சக்திவேல் சார்கிட்ட நான் சொல்லுவேன். 'யோவ் பார்த்திபன் வர்றாராம். அதெல்லாம் அவர் பார்த்துப்பார்’னு சொல்லி முடிச்சிடுவார் பாலாஜி சார். சுவாரஸ்யமே இல்லாம சம்பிரதாயமா நடக்கும் விழாக்கள்லயும் விறுவிறுப்பு சேர்க்கலாம் என்பதை பார்த்திபன் சார்கிட்ட கத்துக்கலாம்.

என் பிறந்த நாளுக்கு அவர்கிட்ட இருந்து வர்ற ஒவ்வொரு பரிசும் ரசிக்கிற மாதிரி இருக்கும். இப்படி மத்தவங்களுக்குக் கொடுக்கிறதுல அவருக்குச் சந்தோஷம். ஆனா, இப்படிச் சின்னச்சின்ன கைதட்டல்கள், சந்தோஷங்களோட அவர் திருப்திபடக் கூடாது. பெரிய கைதட்டல்களையும் பெருமகிழ்ச்சியையும் பார்த்திபன் சார் வாங்கணும். அதுக்கான எல்லா தகுதிகளும் அவருக்கு இருக்கு!'' என்ற லிங்குசாமி சொல்ல, அரங்கத்தில் எழுந்தது பெரும் கைதட்டல்!