Published:Updated:

சலீம் - சினிமா விமர்சனம்

சலீம் - சினிமா விமர்சனம்

சலீம் - சினிமா விமர்சனம்

சலீம் - சினிமா விமர்சனம்

Published:Updated:

னிதாபிமான மருத்துவர் விஜய் ஆண்டனி, நோயாளிகளிடம் கட்டணக் கொள்ளைக்கு உடன்படாததால், அவரை அதட்டுகிறது மருத்துவமனை நிர்வாகம். 'ரொம்ப நல்லவனா இருக்க... உன்னைக் கட்டிக்கிட்டா வாழ்க்கையில பெப்பர்-சால்ட்டே இருக்காது’ என்று விட்டுவிலகுகிறாள் வருங்கால மனைவி. பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு பெண், சிகிச்சைக்கு நடுவே திடீரென காணாமல்போகிறாள். ட்ரிபிள் மன உளைச்சலில், ட்ரிக்கர் அழுத்தி விஜய் ஆண்டனி வெடிக்கும் அதிரடியே பின்பாதி!

விஜய் ஆண்டனியின் 'நான்’ படத் தொடர்ச்சியாகவும், 'எக்கச்சக்க’ வித்தியாச கதைக் களத்துடனும் படத்தைப் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நிர்மல் குமார். நச்சரிக்கும் காதலி, எச்சரிக்கும் நிர்வாகம், துச்சமாக மதிக்கும் சமூகம்... என ஓர் அப்பாவி சாமான்யனின் தினசரி சங்கடங்களை நிறுத்தி நிதானமாக டீடெய்ல் செய்கிறது முன்பாதி.

சலீம் - சினிமா விமர்சனம்

சின்சியர் டாக்டராகவும், மிரட்டல் கிரிமினலாகவும் விஜய் ஆண்டனி... செம காஸ்ட்டிங்! காதலியின் உதாருக்குப் பம்மிப் பதுங்குவதும், பார்ட்டியில் 'என்னா...’ என்று ஒற்றை வார்த்தையில் உறுமுவதும், 'ரெஸ்பெக்ட்... ரெஸ்பெக்ட் வேணும்’ என்று கடத்தல் டீல் ஆரம்பிப்பதும்... அட்டகாசம்!

படத்தின் இரண்டாவது ஹீரோ... பின்பாதி திரைக்கதையும், செந்திலின் வசனங்களும்தான். கடத்தல் பேச்சுவார்த்தையில் 'சூடாக டீ’ கேட்பதும், 'நீ அடங்க மாட்ட... வாசலுக்கு போய்ப் பாரு’ என்று மந்திரியை முந்திரிபோல உருட்டுவதும், எதிர்பாராத நபர் மந்திரி மகனைப் பற்றிய ரகசியத்தை விஜய் ஆண்டனிக்கு ஹின்ட் கொடுப்பதுமாக... செம ரேஸ் ஸ்க்ரீன்ப்ளே!

'சந்தோஷப்பட்டிருப்பேங்கிறதைக்கூட 'உடம்பு சரியில்லை’ங்கிற மாதிரி சொல்றியே!’, 'இவ்வளவு சத்தமாப் பேசுறதுக்கு எதுக்குடா தனியாப் போனீங்க?’, 'சலீம்ங்கிறது வெறும் பேர்தான் சார். வேணும்னா நீங்க என்னை விஜய்னு கூப்பிடுங்க... இல்லை ஆண்டனினு கூப்பிடுங்க’, 'அங்கே என்னய்யா புடுங்கிட்டு இருக்கீங்க? ஏன், நீ வேணும்னா வந்து கொஞ்ச நேரம் புடுங்கிப் பாரேன்!’ என அப்ளாஸ் வசனங்கள்.

கொஞ்சநஞ்சமல்ல... படம் முழுக்கவே லாஜிக் பஞ்சம். இரவின் சில மணி நேரங்களிலேயே மாநிலத்தையே கிடுகிடுக்கும் திட்டத்தைத் தீட்டி, அதைக் கடைசி திருப்பம் வரை கச்சிதமாகச் செயல்படுத்துவது இத்தனை ஈஸியா என்ன? ஒற்றை அறையில் ஒற்றை துப்பாக்கியை வைத்திருக்கும் விஜய் ஆண்டனியை எத்தனை வழிகளில் பிடிக்க முடியும்? ஆனால், அத்தனை புத்திசாலி ப்ளஸ் துப்பாக்கி போலீஸோ அவருக்கு வழிவிட்டு தேமே என்று வேடிக்கை பார்ப்பது என்ன லாஜிக்ஜி?  

மந்திரியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், நடிப்பில் அராஜகம் பண்ணியிருக்கிறார். 'என்ன சொல்றார் உங்க சி.எம்?’ என்று போலீஸ் உயர் அதிகாரிகளை வறுப்பதும், 'என்னப்பா பேசிட்டு

சலீம் - சினிமா விமர்சனம்

இருக்கும்போதே கட் பண்ணிட்ட. உனக்கு என்ன வேணும்?’ என்று விஜய் ஆண்டனியிடம் பம்முவதுமாக ஸ்கோர் செய்கிறார். கொழுக் மொழுக் நாயகி அக்ஷா அலட்டலும் அதட்டலுமாக 'அன்லைக்’ குவிக்கும் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க மிரட்டி விரட்டுகிறது. ஒற்றை ஹோட்டல் அறை, கட்டுப்பாட்டு அறை, மாடி ஜன்னல்... என மினி ஸ்க்ரீன்களிலும் சினிமாஸ்கோப் காட்டுகிறது கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு.

'நல்லது செய்தல் நலம்... சமயங்களில் கெட்ட காரியம் மூலமாகவும்!’ என்ற மெசேஜை அக்கறையுடன் பதிவுசெய்த சலீமுக்கு... சலாம்!

- விகடன் விமர்சனக் குழு