Published:Updated:

சிகரம் தொடு - சினிமா விமர்சனம்

சிகரம் தொடு - சினிமா விமர்சனம்

காக்கிச் சட்டை மீது வெறுப்போடு இருக்கும் ஹீரோ, பின்னர் காவல் துறையில் சிகரம் தொடும் அதே போலீஸ் கதை!

கடமை தவறாத போலீஸ் சத்யராஜ். குழந்தை பிறந்தவுடனேயே அவனுக்கு கற்பனையில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி ரசிக்கும் அளவுக்கு காவல் துறை மீது அவருக்குக் காதல். ஆனால் மகன் விக்ரம் பிரபு, அப்பாவுக்காக போலீஸ் வேலையில் சேருவதுபோல நடிக்கிறார்; திடீர் திருப்பத்தில் போலீஸும் ஆகிவிடுகிறார். ஒரே மாதத்தில் வேலையில் இருந்து விலகிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கும்போது, ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய வழக்கு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அது, அவர் உடலில் போலீஸ் யூனிஃபார்மை எப்படி கவசகுண்டலம்போல ஒட்டவைக்கிறது என்பதுதான் மீதிக் கதை!

சிகரம் தொடு - சினிமா விமர்சனம்

காதலும் காக்கியும் கலக்கும் 'காக்கிச் சட்டை போட்ட மச்சான்’ வகைக் கதைதான். அதில் ஏ.டி.எம் திருட்டு எனும் கிரைம் சுவாரஸ்யம் சேர்த்து, வெரைட்டி ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கௌரவ். சீட்டைப் பிரிக்காமலேயே அதை சாமியார் படிக்கும் வித்தையை அம்பலப்படுத்துவது, ஏ.டி.எம் கார்டு தகவல்களை அலேக் பண்ணும் ரகசியத்தை உரித்துக் காட்டிய விதம்... செம பதம்!    

ஹீரோவைவிட குறைந்த அளவே வந்தாலும் படத்தின் ஜீவன் என்னவோ சத்யராஜ்தான். 'சட்டைல ஸ்டார் குத்தணும்னா, உண்மைலயே ஸ்டாரா இருக்கணும்’ என்று சத்யராஜ் பேசும் இடங்களில் ஒரு போலீஸுக்கே உரித்தான வேட்டை, வேட்கை மிளிர்கின்றன. அப்பாவை ஏமாற்றும் மகன், காதலன், சின்சியர் போலீஸ்... பச்சக்கென ஃபிக்ஸ் ஆகிறார் விக்ரம் பிரபு. அதுவும் போலீஸாக விக்ரம் பிரபுவின் அசாத்திய உயரம்... அபாரம்! ஆக்ஷன் காட்சிகளில் புலிப் பாய்ச்சல் காட்டுபவர், சென்டிமென்ட்களின்போது பம்மிவிடுகிறார். அழகிய கண்களும், கொழுக்மொழுக் துறுதுறுப்புமாக மோனல் கஜ்ஜார்... ஜோர்!  

காமெடியில் பட்டாசு கிளப்புகிறார் சதீஷ். 'நீ வாஜ்பாய்... நான் பிளேபாய்’,  'நீ இதை மாமா வேலைனுகூடச் சொல்லிக்கோ... எங்களுக்கு இது மார்க்கெட்டிங்’,  'நாளைக்கு என் ஜிம்முக்கு நமீதா வர்றாங்க. என்ட்ரன்ஸை இடிச்சுக் கட்டணும்!’ எனப் படம் நெடுக சிரிப்பு மத்தாப்பு!  

சிகரம் தொடு - சினிமா விமர்சனம்

இமானின் இசையில் 'டக்குனு...’, 'பிடிக்குதே...’, 'சீனு சீனு...’ பாடல்கள் மனதைத் தொடுகின்றன. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு ஹரித்துவார் பிரதேச அழகை அப்படியே அள்ளிவந்திருக்கிறது.  

இத்தனை சுலபமாக ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் கருவிகளைப் பொருத்த முடியுமா என்ன, அது எந்த கேமராவிலும் பதிவு ஆகாதா என்ன, கொள்ளையர்களை போலீஸ் படையே சுற்றிவளைக்க வாய்ப்பு இருந்தும் விக்ரம் பிரபு  மட்டும் தனியாக டீல் செய்வது என்ன, கொள்ளையர்கள் பிடிபட்டதும் போலீஸ் முதலில் பணத்தைத் தேட மாட்டார்களா என்ன? இப்படி... படம் முழுக்க ஏகப்பட்ட 'என்னென்ன?’

சிகரத்துக்கான பயணத்தில் சின்னச் சின்ன சறுக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், படம் பார்த்த பிறகு ஏ.டி.எம்-மில் 'பாஸ்வேர்டு’ அடிக்கும் முன் எச்சரிக்கையுடன் சுற்றுமுற்றும் நோட்டம் விடுவது... படத்துக்கான பாஸ்மார்க்!

- விகடன் விமர்சனக் குழு

அடுத்த கட்டுரைக்கு