Published:Updated:

“நான் பாலாவின் ரசிகன்!”

சார்லஸ்

பிஷேக் பச்சன்... இப்போ செம பிஸி அண்ணாச்சி. கபடி லீக்கில் ஜெய்ப்பூர் அணி, சாம்பியன் பட்டம் தட்டியது ஒரு பக்கம், அக்டோபர் மாதம் தொடங்கப்போகும் 'ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் போட்டி’க்காக சென்னை டைட்டன்ஸ் கால்பந்து அணியை வாங்கி, அதற்கான பிளேயர்களை ஏலத்துக்கு எடுக்கும் வேலைகள் இன்னொரு பக்கம். ஷாரூக்கானுடன் இணைந்து நடித்திருக்கும் 'ஹேப்பி நியூ இயர்’ படம் தீபாவளி ரிலீஸுக்கு ரெடி. இதற்கிடையில் 'ஒமேகா வாட்ச்’ அறிமுக விழாவுக்காக சென்னைக்கு வந்தவரிடம் பேசினேன்...

''கபடி லீக், ஃபுட்பால் லீக்னு பரபரப்பா இருக்கீங்களே?''

''கபடி, எனக்கு ரொம்பப் பிடிச்ச விளையாட்டு. கிரிக்கெட்டைத் தாண்டி இந்தியாவில் விளையாடப்படும் பல விளையாட்டுகள் இருக்கு. அது கிரிக்கெட் அளவுக்கு பிரபலம் ஆகலை. அதைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கோம். இப்போ ஃபுட்பால் லீக்ல கவனம் இருக்கு. அடுத்ததா கோகோ விளையாட்டிலும் இறங்கப்போறேன்!''

“நான் பாலாவின் ரசிகன்!”

''கால்பந்து லீக்கில் சென்னை அணியை வாங்க என்ன காரணம்?''

''குழந்தையில் இருந்தே அப்பா, அம்மாவுடன் அடிக்கடி சென்னை வந்திருக்கேன். சென்னை எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். அதேபோல் சென்னை ரசிகர்கள், விளையாட்டின் பிரமாதமான காதலர்கள். கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் என்று இல்லை. ஹாக்கி, டென்னிஸ், கால்பந்துனு எல்லா விளையாட்டுகளையும் ரொம்ப என்ஜாய் பண்ணி ரசிப்பாங்க. அதனாலதான் சென்னை அணியை வாங்கினேன்!''  

''தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கா?''

''நிச்சயமா! தமிழ்ப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரஜினி, கமல் படங்களில் இருந்து மணிரத்னம், ஷங்கர், பாலா படங்கள்னு எல்லா பெரிய படங்களையும் பார்த்திடுவேன். நான், பாலாவின் ரசிகன். அவரோட எல்லா படங்களும் படுவித்தியாசமா இருக்கும். லிங்குசாமியோட 'ரன்’ படத்தை இந்தியில் ரீ-மேக் பண்ணி நடிச்சிருக்கேன். இப்போ தமிழில் நிறைய புது இயக்குநர்கள் பிரமாதமா படம் எடுக்கிறாங்க. வித்தியாசமான கதையா இருந்தா சொல்லுங்க... நடிக்க நான் ரெடி!''

''இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் நீங்கள். அதனாலேயே உங்கள் மீதான எதிர்பார்ப்பும், ஓர் ஒப்பீடும் எப்போதும் இருந்துட்டே இருக்குமே?''

''அபிஷேக்கின் அப்பா அமிதாப்னு சொல்றதைவிட,  அமிதாப்பின் மகன் அபிஷேக்னு சொல்றதுதான் எனக்குப் பெருமை. நான் குழந்தையாக இருக்கும்போதே, 'அப்பா மாதிரி இருக்கானா? அப்பா மாதிரி நடிக்கிறானா?’னு ஒப்பீடு ஆரம்பிச்சிருச்சு. அது நிச்சயம் என் கடைசிப் படம் வரைக்கும் இருக்கும். அதைப் பத்தி நான் கவலைப்பட ஆரம்பிச்சா, ஒழுங்கா வேலை செய்ய முடியாது. எனக்கு என்ன வருதோ, அதை நான் பண்ணுவேன். அவ்வளவுதான்!''

“நான் பாலாவின் ரசிகன்!”

''உங்கள் பொண்ணு ஆரத்யா எப்படி இருக்காங்க? நீங்க, ஐஸ்வர்யா நடிச்ச படங்கள் எதுவும் பார்த்தாங்களா?''

''ஆரத்யா செம க்யூட் அண்டு நாட்டி. இதுவரைக்கும் எந்த சினிமாவையுமே ஆரத்யாவுக்குக் காட்டலை. சினிமாவைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு அவ இன்னும் வளரலை. அவளோட ரூம்ல கார்ட்டூன் சேனல்களைத் தாண்டி வேறு எந்த சேனலும் ஓடாது!''

''ஷாரூக்கோட 'ஹேப்பி நியூ இயர்’, அமீர்கானோட 'தூம்-3’-ல் நடிச்ச அனுபவம் எப்படி?''

''சூப்பர்ப்... ரெண்டு பேருமே யுனிக். ரெண்டு பேரையுமே ஒரே ஸ்கேல் வெச்சு அளக்க முடியாது. அமீர்கான் கம்மியாப் பேசுவார்... ஆனா, நிறையக் கேட்பார். யார் என்ன பேசினாலும் காது கொடுத்துக் கேட்கணும்கிறதை அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். எவ்வளவு வேலை இருந்தாலும், எப்படி உற்சாகமா இருக்கிறதுனு ஷாரூக்கிட்டே இருந்து கத்துக்கிட்டேன். என்னைப் பொறுத்தவரை ரெண்டு பேருமே, ஒவ்வொரு பல்கலைக்கழகம்!''

''உங்களுடைய மிகப் பெரிய ரசிகர், விமர்சகர் யார்?''

''மிகப் பெரிய ரசிகர் யார்னு தெரியலை. ஆனால், மிகப் பெரிய விமர்சகர், என் அப்பாதான். அவர் சொல்ற ஒவ்வொரு விமர்சனமும், என்னை அடுத்த கட்டத்தை நோக்கி ஓடவெச்சுக்கிட்டே இருக்கு!''

''உலக அழகியைத் திருமணம் செஞ்சிருக்கீங்க. எப்படிங்க சமாளிக்கிறீங்க?''

''(சிரிக்கிறார்). என்னைப் பொறுத்தவரை மனைவியைச் சந்தோஷப்படுத்த அன்பா இருந்தாலே போதும். அது நிபந்தனைகள் இல்லாத அன்பா இருக்கணும். அன்புக்கு, நாம எல்லோருமே அடிமை. ஐஸ்வர்யாவும் அப்படித்தான்!''

அடுத்த கட்டுரைக்கு