சினிமா
Published:Updated:

காதல் வந்திடுச்சு...

காதல் வந்திடுச்சு...
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் வந்திடுச்சு...

ஏதோ ஒரு சூழலில், ஹீரோயினின் கன்னத்தில் ஹீரோ `சப்’பென அறைய, காதல் `கப்’ எனப் பற்றிக்கொள்ளுமே. கருமத்த...

நியாயத்தைக் கண்டால் பொங்கும்போதும், அடிமனதை டச் பண்ணும்போதும், ஆபத்துக்கு உதவும்போதும் நாயகன்மீது நாயகிக்குக் காதல் வரும் என்பது தொட்டுத்தொடரும் தமிழ்ச்சினிமா பாரம்பர்யம்! ஆனால், அதையும் தாண்டி வேறு சில சம்பவ, அசம்பாவிதங்களின்போதும் நாயகிகளுக்கு நாயகனால் காதல் வைரஸ் தாக்கி, தலைகீழாகத் திருப்பி, சும்மா போட்டுத்தாக்கும். அவற்றையும் பார்ப்போம்...

ஹாலிலிருந்து படுக்கையறைக்கு லிஃப்டும் படுக்கையறையிலிருந்து சமையலறைக்கு மினி பஸ்ஸுமே விடும் அளவிற்கு மல்டி மில்லியனர் குடும்பத்துப் பெண்ணாக இருப்பார் நாயகி. நடந்துபோனால் பத்து நிமிடம் தூரத்தில் இருக்கும் பர்கர் கடைக்கு, நெயில் பாலீஸ் வண்ணத்திற்கேற்ற காரில் பறந்துபோகும் அந்தப் பணக்கார ஹீரோயினை, அரசு கொடுத்த இலவச சைக்கிளில் டபுள்ஸ் அடித்துக் கூட்டிப்போய், ரோட்டுக்கடையில் இட்லியும் கெட்டிச்சட்னியும் வாங்கித்தருவார் ஹீரோ. அதை `உச்’ கொட்டி உண்ணும் நாயகி, தானாகவே ஒரு கலக்கி, ஆம்லேட் ஆர்டர் செய்தால் காதல் பூத்துவிட்டதென அறிக.

வெற்றிலைப்பெட்டி, பித்தளைக் குண்டா என எதையாவது திருடிவிட்டுப் போக, நாயகியின் வீட்டுக்குள் நுழைவார் நாயகன். அங்கு மாட்டியிருக்கும் நாயகியின் கோல்கேட் விளம்பர டைப்பில் இருக்கும் க்ளோஸ் அப் போட்டோ ஒன்றைப் பார்த்ததும் நாயகனுக்குக் காதல் கொப்பளிக்கும். அந்தநேரம், ஆள் வருகிற சத்தம் கேட்க, கட்டிலுக்குக் கீழ் அல்லது பீரோவுக்குள் ஒளிந்துகொள்வார் நாயகன். அவர் திருட வந்த நேரம் நண்பகலோ, நடுச்சாமமோ, அதுதான் நாயகியின் குளியல் நேரம். குளித்துவிட்டு உடை மாற்றும்போது நாயகி கண்ணாடியைப் பார்க்க, கண்ணாடியை நாயகன் பார்க்க, கண்ணாடி வழியாக நாயகனை நாயகி பார்க்க... ஒரு கல், ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்!

காதல் வந்திடுச்சு...
காதல் வந்திடுச்சு...

பால்பாயசத்தில் பச்சை மிளகாய் கிள்ளிப்போடவில்லை, மீன் வறுவலில் சில்லி சிக்கன் பொடி தூவவில்லை என சில்லித்தனமான காரணங்களுக்கெல்லாம் வீட்டு வேலைக்காரர்களின் செவுனியைத் திருப்புவார் நாயகி. மண்ணெண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் பாகிஸ்தான் தோற்றால் எனக்கென்ன எனப் போவதை விட்டு, ஆப்கானிஸ்தானிடம் அயர்லாந்து தோற்றதற்கெல்லாம் டென்ஷனாகி, மீன் தொட்டியை உடைப்பார். அடிவாங்கிய வேலைக்காரர்களும் உயிர்போன மீன்களும் `உன் திமிரை அடக்க ஒருத்தன் வருவான்’ என மனதுக்குள் சாபம் விட்டதும், விதி உருண்டையை உருட்டிவிடும். ஏதோ ஒரு சூழலில், ஹீரோயினின் கன்னத்தில் ஹீரோ `சப்’பென அறைய, காதல் `கப்’ எனப் பற்றிக்கொள்ளுமே. கருமத்த...

ஒரு கல், ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்!

செவ்வாய், புதனில் வாசல் தெளித்து எட்டுப்புள்ளிக் கோலம் போடவேண்டும் என விசித்திரமான ஆசைகளோடு சுற்றிக் கொண்டிருப்பார் ஹீரோயின். செவ்வாய், புதன் என்றால் கிழமை இல்லை மக்களே, கிரகம்! கெரகத்த... இதைத் தவிர்த்து சின்னச்சின்ன ஆசைகளான பென்குயினுக்கு ஸ்வெட்டர் மாட்டி விடணும், சிங்கத்துக்குச் சிண்டு முடியணும், கரடியைக் கட்டிப்பிடித்துத் தூங்கவேண்டும் போன்றவையும் இருக்கும். இதை ஒரே ஒரு பாட்டில் புத்திசாலித்தனமாக நிறைவேற்றும் நம் ஹீரோவின் மீது நிச்சயம் காதல் ஆசை பூக்கும் நம் ஹீரோயினுக்கு. எல்லா ஆசைகளையும் எப்படியோ கோக்குமாக்காய் நிறைவேற்றிவிடும் ஹீரோவைப் பார்த்து, ஹீரோயின் கடைசியாக ஒன்று சொல்வார், ``எனக்கு ஒரேயொரு ஆசைதான். ஏழேழு ஜென்மத்துக்கும் நீ என் கூட இருக்கணும்”. லாலாலாலா...