தொடர்கள்
Published:Updated:

வண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்!

குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பம்

‘அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட்’ எனும் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோதான் சமீபத்திய சென்சேஷன் காரணம், அலெக்ஸாண்டர் பாபு.

ப்படியொரு தனிக்குரல் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழகம் பார்த்ததேயில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அலெக்ஸ் செய்யும் அட்ராசிட்டீஸுக்கு உலகத் தமிழர்கள் ஆதரவு எக்கச்சக்கம். அலெக்ஸை அவரது குடும்பத்துடன் சந்தித்தேன்.

வண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்!

‘`எனக்கு 40 வயசு ஆனது, ஐடி வேலை பிடிக்காம சென்னைக்கு வந்தது, ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆனதுன்னு எல்லாத்தையுமே நீங்க ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ ஷோலயே பார்த்திருப்பீங்க... நீங்க அதில் பார்க்காதது என் குடும்பம்தான். என் குடும்பத்தை இங்கே அறிமுகப்படுத்துறேன். என் மனைவி சுமிதா. பசங்க ஆதவன், வருண். ஆதவனுக்கு ஓவியம் வரையப் பிடிக்கும். வருணுக்கு சயின்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆசை’’ என்றவரிடம் ‘`கல்யாணக் கதையோட ஆரம்பிக்கலாம்’’ என்றேன்.

‘`எங்க வீட்டுல நான்தான் கடைக்குட்டி. வீட்டுல இருக்கிற எல்லாரும் வலைபோட்டுப் பொண்ணு தேடினாங்க. அவங்க எல்லாரையும் ஸ்டாப் பண்ணச் சொல்லிட்டு நானே எனக்கான மனைவியைத் தேட ஆரம்பிச்சேன். என்னைப் பத்தின முழு பயோவையும் மேட்ரிமோனியல் சைட்ல பதிவு பண்ணிட்டு வெயிட் பண்ணினேன். அப்போதான் சுமிதா பத்தின விவரங்கள் வந்துச்சு. அவங்க வீட்டுக்கு போன் பண்ணிப் பேசினேன். சுமி நம்பர் கொடுத்தாங்க. என் மனைவியை செல்லமா சுமின்னுதான் கூப்பிடுவேன்’’ என அலெக்ஸ் மனைவி சுமிதாவைப் பார்க்க, சுமிதா தொடர்கிறார்.

‘`இவர் என்கிட்ட போன் பேசுனப்போ நான் யு.எஸ்-ல வேலை பார்த்துட்டு இருந்தேன். அவர் பெங்களூரில் இருந்தார். பாட்டெல்லாம் பாடி ஒரே போன்கால்ல என்னைக் கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வெச்சிட்டார். ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ இந்தப் பாட்டுதான் முதல்முறையா என்கிட்ட பாடினார்’’ என சுமிதா வெட்கப்பட்டுச் சிரிக்க, இப்போது அலெக்ஸின் முறை.

வண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்!

‘`எங்க வீட்டுல பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். சுமி வீட்டுல இருந்து என்னை பெங்களூரு வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் போன்ல மட்டும்தான் பேசினோம். நேர்ல பார்க்கல. யெஸ்... அதேதான்... ‘வாரணம் ஆயிரம்’ கதைதான். விசா பிரச்னைகளால இவங்களை லண்டன் வரச்சொல்லிட்டு நான் லண்டன் கிளம்பிப்போயிட்டேன். அங்கேதான் ரெண்டு பேரும் நேர்ல பார்த்துக்கிட்டோம். அங்கேயும் பாட்டுப்பாடிதான் இவங்கள இம்ப்ரஸ் பண்ணினேன்’’ எனக் கன்னம் சிவக்க அலெக்ஸ் சொல்ல, அலெக்ஸின் கனவுகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் சுமிதா.

‘`எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே இவரோட கலை ஆர்வத்தைப் பத்தியெல்லாம் என்கிட்ட சொல்லியிருந்தார். எப்படியிருந்தாலும் கொஞ்ச வருஷத்துல நான் இந்த ஐ.டி வேலையை விட்டுரு வேன்னு உண்மையைச் சொன்னார். நானும் நம்ம பொருளாதாரச் சூழலைச் சரிபண்ணிட்டு உங்களுக்கான கனவு நோக்கிப் போங்கன்னு சொன்னேன்’’ என சுமி சொல்ல ‘கல்யாணம் டு கனவு’ கதை சொன்னார் அலெக்ஸ்.

வண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்!

‘`எங்க கல்யாணம் சுமி ஊரான முசிறியில் நடந்தது. இதுக்கு இடையில் ‘நஞ்சுபுரம்’ங்கிற படத்துல நடிச்சேன். படம் ரிலீஸாகவே நாலு வருஷம் ஆச்சு. இதுக்குப் பிறகு சினிமா மேலே ஒரு சின்ன பயம் வந்துடுச்சு. பெரிய ரிஸ்க் எடுக்குறோமோன்னு தோணுச்சு. 2010-க்குப் பிறகுதான் டிஜிட்டல் மீடியம், யூடியூப் சேனலெல்லாம் பூம் ஆச்சு. இந்தத் தளம் நமக்குச் சரியா இருக்கும்னு தோணவே 2014-ல வேலையை விட்டுட்டேன்’’ எனச் சொல்லி விட்டு சுமியின் ரியாக்‌ஷனைக் கவனிக்கிறார் அலெக்ஸ்.

‘’என்னோட குடும்பமும், நண்பர்களும் சேர்ந்ததுதான் நான்’’

‘`இவர் வேலையை விடுறேன்னு சொன்னப்போ ரொம்ப அதிர்ச்சியெல்லாம் ஆகல. ஏன்னா, அதுக்கு முன்னாடியே ப்ளான் பண்ணி எங்களோட செலவை யெல்லாம் குறைச்சு, கொஞ்சம் பணம் சேர்த்திருந்தோம். இவரோட கனவு என்னன்னு எனக்குத் தெரிஞ்சி ருந்ததனால அவரோட விருப்பத்துக்கு ஏற்ப எங்க வீட்டைப் பழக்கியிருந்தோம்’’ என சுமிதா இடைவெளி விட, அலெக்ஸ் தொடர்ந்தார்.

வண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்!

‘`வேலையை விட்டவுடனே என்னோட ஸ்க்ரிப்ட் வேலைகளில் இறங்கிட்டேன். பத்து நிமிஷம் புரொகிராம் பண்ண கிட்டத்தட்ட ஒரு மாசம் வரைக்கும் வேலை பார்ப்பேன். என்னோட புரொகிராம் மேடை யில் அரங்கேற்றம் பண்றதுக்கு முன்னாடி இவங்ககிட்டதான் பேசி நடிச்சுக் காட்டு வேன். இவங்க சரியா என்னை விமர்சனம் பண்ணுவாங்க. ரொம்ப நேர்மையா இருக்கும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க. சுமி எனக்கு இறைவன் கொடுத்த வரம்’’ என அலெக்ஸ் ஃபீல் செய்ய,‘`இவர் பண்ற எல்லா லைவ் புரொகிராமுக்கும் நான் பசங்களைக் கூட்டிட்டுப் போயிருவேன். இவரோட வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்தே பார்க்கறதனால இப்போ இவருக்குக் கிடைக்குற வரவேற்பு எனக்கு ஆச்சர்யமில்ல. ஏன்னா, எந்தக் கூட்டத்தில் இவர் நின்னுட்டிருந்தாலும் எல்லாருடைய கவனமும் இவர் மேல வரவெச்சிடுவார்’’ எனச் சொல்லும் சுமிதாவின் குரலில் டன்கணக்கில் வழிகிறது பெருமை.

‘`என் குடும்பமும் நண்பர்களும் சேர்ந்ததுதான் நான். என் நண்பன் ஷ்யாம் ரெங்கநாதன்தான் ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ங்கிற பெயரை செலக்ட் பண்ணிக் கொடுத்தான். சுமிக்கும் பிடிச்சி ருந்தது. அதனால இந்தப் பேரை வெச்சிட்டோம். எனக்கு முறையா பாட்டு க்ளாஸுக்குப் போன அனுபவமெல்லாம் இல்லை. எல்லாமே கேள்விஞானம்தான். இப்போதான் பாட்டு க்ளாஸுக்குப் போயிட்டிருக்கேன்’’ என அலெக்ஸ் பிரேக் எடுக்க, சுமிதா தொடர்ந்தார்.

வண்ணம் கொண்ட வெண்ணிலா குடும்பம்!

‘`இவரோட நிகழ்ச்சி இப்போ ஹிட் அடிச்சதுக்கு அப்புறம் கவிதாலயா நிறுவனம் தயாரிக்குற வெப் சீரிஸுக்கு டைட்டில் கார்டு பாட்டைப் பாடியிருக்கார். இவரோட இந்த வளர்ச்சியை என் அப்பா இருந்து பார்த்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பார். அவர் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். ஆனா, என் அம்மா மற்றும் இவங்க வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். வாழ்க்கை இப்ப அர்த்தமுள்ளதா போயிட்டிருக்கு’’ என சுமிதா சொல்ல, அலெக்ஸ் ‘`வண்ணம் கொண்ட வெண்ணிலவே... வானம் விட்டு வாராயோ’’ என ஹம் செய்ய, குழந்தைகள் இருவரையும் கட்டி அணைக்க... உண்மை யிலேயே அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்தான்!