Published:Updated:

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு!

 சாய்ஸ் காமெடிகள்
பிரீமியம் ஸ்டோரி
சாய்ஸ் காமெடிகள்

சாய்ஸ் காமெடிகள்

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு!

சாய்ஸ் காமெடிகள்

Published:Updated:
 சாய்ஸ் காமெடிகள்
பிரீமியம் ஸ்டோரி
சாய்ஸ் காமெடிகள்

`இன்ஜினீயரா, டாக்டரா... உனக்கு என்னவா ஆகணும்?’ என்று பள்ளி இறுதியில் என்னை அப்பா கேட்டார். 90-களில் அந்த இரண்டும்தாம் குழந்தை வளர்ப்பின் உச்சக்கட்ட லட்சியம். `அவளுக்கு ரத்தத்தைப் பார்த்தா பயம்; இன்ஜினீயரிங் படிக்கட்டும்!’ என்று அம்மா வந்து கொடுக்கப்பட்ட இரண்டு சாய்ஸில் ஒன்றை மடக்க, மீதியிருந்த ஒன்றை நிம்மதியாகத் தேர்ந்தெடுத்தேன். வாழ்க்கை எப்போதும் அப்படி எளிமையாக இருப்பதில்லை; சாய்ஸ் கொடுத்தே விரட்டியும் அடிக்கிறது.

ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒற்றை அட்டை மெனு கார்டை பல முறை திருப்பிப் பார்த்துவிட்டு, `ரவா தோசை' சொல்லும் தலை முறை நம்முடையது. நவீன உணவகங்களிலோ கத்தையாக பைண்டு செய்து புத்தகம்போல தருகிறார்கள். புத்தகம் தண்டியாக இருந்தால், அதைத் திறப்பதற்கு முன்பே எனக்கு கண்கள் சொக்கிவிடும். பரீட்சையில் கடைசி நிமிடம் வரை எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கிக்கொண்டே இருக்கும் பெண்தான், நம் ஊரில் முதல் மாணவியாக வருவாள் என்பதை ஹோட்டல் முதலாளிகள் மறப்பதாகவோ மறுப்பதாகவோ இல்லை. என் மகளும் மகனும் கத்தை மெனு கார்டு தரும் உணவகம்தான் சிறப்பு என நம்புவதால், அதைப் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கி முன்பே போகவேண்டியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்குத் தெரிந்து, தோசை என்றால் சாதா தோசை, மசால் தோசை, நெய் ரோஸ்ட், ரவா, ஆனியன் ரவா, ஊத்தப்பம் அவ்வளவுதான். இப்போது, தோசை வகையறாக்களுக்காகவே ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றில் 500 வகை தோசைகள், எங்களிடம் `ஒரு வாழ்நாளுக்குள் சாப்பிட முடியுமா?’ என்று சவால்விடுகின்றன. பனீர், காலிஃபிளவர், கேப்ஸிகம் என விதவிதமாக தோசைக்குள் இன்னொரு சமையலையே நடத்துகிறார்கள். ஆனாலும், அந்த சாக்லேட் தோசை கண்டுபிடித்தவரை மட்டும் என்னால் இன்று வரை மன்னிக்க முடியவில்லை.

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு!

மட்டன் பனீர் மசாலா, பனீர் புர்ஜி, கடாய் பனீர் எனப் பெயரில் எந்த இடத்திலாவது பனீரைக்கொண்டிருக்கும் 50 பதார்த்தங்களில் ஒன்றைத் தேர்வுசெய்கிறாள் மகள். வளர்ந்த பிறகுதான் பெயர் சூட்டுவது என்ற வழக்கம் இருந்திருந்தால், அவளுக்கு `பனீர் செல்வி’ என்று காரணப்பெயர் சூட்டியிருப்பேன். வீட்டிலேயே சமைத்து என் பனீர்செல்வியை மகிழ்விக்கலாம் என்றால், அந்த 50-க்கும் யூடியூபில் 5,000 ரெசிப்பிகள் இருப்பது, என் அடுத்த குழப்பம்.

தொலைக்காட்சியில் சேனல் என்றால் தூர்தர்ஷன் மட்டும்தான் என்றிருந்த காலத்தில், ராமாயண ஒளிபரப்பின்போது தெருவெல்லாம் வெறிச்சோடியிருக்குமாம். சீதையாக நடித்தவர் நிஜ வாழ்வில் ஜீன்ஸ் அணிந்ததைக் கண்டித்த கதையெல்லாம் உண்டு. இப்போது, எல்லா சேனல்களும் ஆளுக்கொரு கடவுளைத் தத்தெடுத்து, அவர்கள் வாழ்க்கை வரலாற்றை மசாலா மணத்தோடு ஒளிபரப்புகின்றன. அரைகுறை ஆடை அணிந்த தேவிகளும் சிக்ஸ் பேக் கொண்ட தேவர்களும், தங்களது நடுஹாலில் காதல் செய்வதைப் பார்த்துத் திகிலடைந்து தெருவை நோக்கி ஓடுகிறார்கள் மக்கள். பாடல்களுக்கு என 15 சேனல்களும் செய்திகளுக்கு என 20 சேனல்களும் இருக்கும் இந்தக் காலத்தில், ரிமோட்டைத் தொடாமல் அரை மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பவரையே புதிய தெய்வமாக்கலாம்.

பெருநகரங்களில் வசிப்பதிலுள்ள அசெளகர்யம் என்னவென்றால், 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 15 பள்ளிகள் இருப்பது. குழந்தைகளுக்கு சரியான பள்ளியைத் தேர்ந்தெடுப்பது பெற்றோருக்கான சவால். ஒரு பள்ளியில் விளையாட மைதானமே இல்லை. இன்னொன்றில் மழைக்காலம் என்றால் மைதானத்தில் படகு விடுகிறார்கள். `ஹோம்வொர்க் அதிகம் கொடுப்பாங்க, ஃபீஸ் அதிகம், டீச்சர்ஸ் அடிப்பாங்க, சனிக்கிழமைகூட ஸ்கூல் உண்டு, ஏஸி இருக்கு... ஆனா இல்லை, லஞ்ச் பாக்ஸ் உணவை ஆயா சாப்பிடுறாங்க, இந்தி டீச்சரே தமிழும் எடுக்குறாங்க, டாய்லெட் சுத்தமா இருக்காது, பிரின்ஸிபல் முசுடு’ என்று இணையத்தில் பெற்றோர்கள் தாங்கள் சேர்த்த பள்ளியில் வேறு யாரும் சேர்க்காமலிருக்கப் போராடுகிறார்கள். எந்தப் பள்ளியில் சேர்த்தாலும் அது சரியான பள்ளிதானா என நாம் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, குழந்தை 12-வது வந்திருக்கும்.

பக்கம் பக்கமாக விடைத்தாள் எழுதிய நாள்களை இப்போது நினைத்துப்பார்த்தாலும் சுகமாக இருக்கிறது. இக்கால தகுதித்தேர்வுகள், மல்டிபிள் சாய்ஸ் வகையைப் பின்பற்றுகின்றன.

இவற்றில் எது சரியான விடை?

அ) எல்லாம்

ஆ) மேலிருக்கும் ஏதோ ஒன்று

இ) கீழிருக்கும் ஒன்று

ஈ) எதுவுமில்லை

உ) அ மற்றும் ஈ

ஊ) ஆ மற்றும் இ

எனக்கோ போன நூற்றாண்டில் பிறந்த தற்காக நிம்மதியாக உள்ளது. நம்மைப்போல 12 அல்லாமல் 24 ஸ்கெட்ச் பேனாக்கள் கையாளும் இந்தத் தலைமுறையால் மட்டுமே ஒரே மாதிரியான பல விடைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்க முடியும்.

சிறிய வயதில் தம்பியை ஹேர்கட்டுக்கு அப்பாதான் அழைத்துப் போவார். அம்மா போக மாட்டார். ஒருநாள் அவர்கள் திரும்பிவர வெகுநேரமாகிவிட்டதால், அம்மா என்னைப் பார்த்துவரச் சொல்லி அனுப்பினார். அப்பாவோடு, அம்மா ஏன் போவதில்லை என்ற கேள்விக்கு பதிலும் கிடைத்தது. சலூன் சுவர் முழுவதும் ஆளுயர போஸ்டர்களில் அரை நிர்வாண அழகிகள், வாடிக்கையாளர் காத்திருப்பை இனிமையாக்கிக்கொண்டிருந்தனர். ஹேர்கட் என்று சொன்னால் மட்டும் போதும், ஒட்டவெட்டி அனுப்பிவிடுவார்கள். வேறு ஸ்டைல் என்றால், அது மொட்டைதான். இன்றைய சலூன்களின் பெயர், `சலான்' ஆனதும், பெண்களும் போக முடிகிறது. ஹேர்கட் என்றதும், ஸ்ட்ரெயிட் கட்டா, லேயரா, ஸ்டெப் கட்டா, வீயா, டீப் வீயா, யூவா, டீப் யூவா என்கிறார்கள்.

ஒரு வாஷிங்மெஷின் வேலைசெய்யவில்லை என்றால்கூட வாழ்க்கை ஸ்தம்பித்துவிடுகிறது. மெஷினோடு டோல்ஃப்ரீ நம்பரும் தந்திருக்கிறார்கள். அழைத்தால், `உங்கள் மொழி இந்தி என்றால், எண் பூஜ்ஜியத்தை அழுத்தவும். தமிழ் என்றால், எண் ஒன்றை அழுத்தவும். ஆங்கிலம் என்றால், எண் இரண்டை அழுத்தவும்...’ என்று எந்த நூற்றாண்டிலோ பதிவுசெய்த குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. அழுத்தியதும், `சர்வீஸ் என்றால், எண் ஒன்றை அழுத்தவும். என்கொயரி என்றால், எண் இரண்டை அழுத்தவும். வேறு சேவை என்றால், எண் மூன்றை அழுத்தவும்.’ அதைத் தாண்டியதும் மேற்கத்திய இசையை ஒலிக்கச்செய்கிறார்கள். ஒரு யுகம் காத்திருந்ததும், கீச்சென பெண் குரல் கேட்கிறது. `சொல்லுங்க என்ன பிரச்னை, தண்ணி வரலியா, மெஷின் ஓடலியா, லீக்கேஜா, சரியா டிரையின் ஆகலியா...’ இதற்குள் நமக்கு எனர்ஜி டிரையின் ஆகிவிடுகிறது.

சிதம்பரத்தில் இருந்த வரை, சீனிவாச ஐயங்கார் கடையில்தான் மளிகைப் பொருள்கள் வாங்குவோம். லிஸ்ட்டை முதலில் கொடுத்துவிட்டு நானும் அப்பாவும் பெஞ்சில் அமர்ந்து வரிசையில் காத்திருந்த நாள்கள் அவை. கடையில் வேலைசெய்பவர் சரசரவென பொருள்களை கூம்பு வடிவமாக்கப்பட்ட செய்தித்தாளில் வைத்து, மேலிருந்து தொங்கும் சணல் கயிற்றை லாகவமாக இழுத்து பொட்டலம் கட்டுவதை ஆல்பகோடா பழம் சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்த்தால், நேரம்போவதே தெரியாது. அப்போதெல்லாம் பிராண்டு என்று தனியே இல்லாமல், எல்லாமே ஐயங்கார் கடை பொருள்தான்.

இப்போது, சூப்பர் மார்கெட்டுகள் காபிக்கு 10 சாய்ஸும், டீக்கு 20 சாய்ஸும், ஷாம்புக்கு 100 சாய்ஸும் தருக்கின்றன. என்னை அழகாக்க 100 கம்பெனிகள் போட்டிபோடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில், வாங்கவேண்டியதை மறந்துபோய் தேவை யில்லாததையெல்லாம் வாங்கிவிடுகிறேன். நானாவது பரவாயில்லை, கணவரிடம் `any sunflower oil’ என எழுதிக் கொடுத்தனுப்பினால், கடை முழுவதும் அலசி, ` `எனி’ என்ற பெயரில் எந்த எண்ணெய் கம்பெனியும் இல்லை’ என்று திரும்பி வந்துவிடுகிறார்.

எங்கள் திருமணமும் பெற்றோர் முடிவு செய்ததுதான். எலைட் மேட்ரிமோனி, ஐயர் மேட்ரிமோனி, ஐயங்கார் மேட்ரிமோனி, வடகலை மேட்ரிமோனி, தென்கலை மேட்ரிமோனி என என்னையே தேடச் சொல்லியிருந்தால், ஒளவையார் மேட்ரிமோனியில் சேர்ந்திருப்பேன். கூரைப்புடவை என்றால் மெரூன் வண்ணம் என்றிருந்த காலத்தில் திருமணம் செய்ததுதான் அன்று எனக்கிருந்த செளகர்யம். உலகில் உள்ள எல்லா வண்ணங்களிலும் பெர்முடேஷன்-காம்பினேஷனில் இப்போது புடவைகள் வருகின்றன. நான் தேர்ந்தெடுத்து முடிப்பதற்குள் முகூர்த்த நேரம் முடிந்திருக்கும்.

சில்க்-காட்டன் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது காட்டன்-சில்க் புடவைகள் வருகின்றன. ஜியார்ஜட் தெரியும். தாவணிகூட வைத்திருந்தேன். இப்போது பனாரஸி ஜியார்ஜட் என்கிறார்கள். பார்டர் பனாரஸ் வகையாம். `காட்டன் புடவையைக் காட்டுங்க' என்றால், `கல்யாணி காட்டனா, பெங்கால் காட்டனா, செட்டிநாடு காட்டனா, சந்தேரி காட்டனா, மல்மல் காட்டனா, பாலி காட்டனா, மெர்சண்டைஸ்ட் காட்டனா, சுங்கடியா' என்று கடைக்காரர் சொல்லிக்கொண்டேபோவதில், எனக்கு மூச்சிரைக்கிறது. மூட்டைக்காரர் வீடு தேடி கொண்டுவரும் இருபது புடவைகளுள் ஒன்றை எடுக்க முடியும் என்னால், இரண்டாயிரம் புடவைகளை ஒருசேரக் காட்டினால், எதுவுமே பிடிக்காமல்போகும் மர்மம் மட்டும் விளங்கவில்லை. சாய்ஸ் என்பதை `தேர்வு’ என்று மொழிபெயர்ப்பு செய்த புத்திசாலி யாரோ?!

புடவையாவது பரவாயில்லை, எங்கள் வீட்டருகே அலைபேசிக்கென ஷோரூம் திறந்திருக்கிறார்கள். அருகில் உள்ள அநேக ஜவுளிக்கடைகளையும்விட பெரியது. நான்கு பக்கச் சுவரிலும் மேலிருந்து கீழ் வரை அடுக்கி வைக்கும் அளவுக்கு அலைபேசி வகைகள் இருக்கின்றன. சுற்றிப்பார்த்து, தலைசுற்றியதில் வீட்டுக்கு வந்து ஒன்றின் பெயரைச் சொல்லி அமேசானில் வாங்கிக்கொண்டேன். ஆன்லைனில் வாங்குவதில் சின்ன கஷ்டம்தான், ஏற்கெனவே பொருளை வாங்கியவர்கள் ஃபீட்பேக் அளித்திருப்பார்கள். மூன்று கமென்ட்டுகள் இருந்தால், அவை இவ்வாறு இருக்கும் - `ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பாக வாங்கவும்’, `பரவாயில்லை வாங்கலாம்’, `ரொம்ப மோசம் வாங்காதீங்க!’

`என்ன கார் வாங்கட்டும்' என்று தம்பி கேட்ட போதும் எனக்கு இதே குழப்பம்தான். டாடா, ஹூண்டாய், மாருதி, நிஸான், ரெனோ, ஃபோர்டு, ஹோண்டா, செவர்லே, சுஸூகி என்பதாக 10-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும், அவற்றில் மொத்தமாக நூற்றுக்கணக்கான கார் மாடல்களும் தயாரிக்கப்படுகின்றன. ஹெட்லைட் டிசைனை மட்டும் மாற்றினால்கூட அடுத்த வெர்ஷன் வந்துவிடுகிறது. பெரிய உலோக டப்பி, அதுக்கு நான்கு சக்கரம், எல்லா வாகனங்களும் செய்யப்போவது ஒரே வேலைதான், என்ன டிசைனில் இருந்தால் என்ன, எதற்காக நூற்றுக்கணக்கான டிசைனில் கார் தயாரித்து வெவ்வேறு விலையில் விற்கிறார்கள் என்று கடுப்பாக இருந்தது.

`ஸ்விகி'யில் உணவு வரவழைக்க நினைத்தால், கேஷா, பேடிஎம்மா, யூபிஐயா, கிரெடிட் கார்டா, கூகுள் பேயா என, தட்டுக்குப் பதில் முதலில் லிஸ்ட்டை நீட்டுகிறது. கால் டாக்ஸி புக் செய்தால், `மேடம்... கேஷா, கார்டா, பேடி எம்மா, வாலட்டா?’ என்று கேட்டுவிட்டே வருவதா வேண்டாமா என டிரைவர் முடிவு செய்கிறார்.

எந்தக் கட்டுரை எழுதினாலும் என் அம்மாவுக்கு படிக்கக் கொடுப்பேன். அவர் கருத்துகள்மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. இன்றும் என் முதல் வாசகியிடம், `கட்டுரையை விகடனுக்கு அனுப்பியிருக்கேன்மா’ என்றேன். அம்மா உடனே, `ஆனந்த விகடனா, அவள் விகடனா, சக்தி விகடனா, ஜூனியர் விகடனா, சுட்டி விகடனா?’ என்று கத்தையாக என் முன் அடுக்க, எடுத்தேன் அங்கிருந்தும் ஓட்டம்!