கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

கமல், எடப்பாடி
பிரீமியம் ஸ்டோரி
News
கமல், எடப்பாடி

ஓவியங்கள்: ராஜா

து தேர்தல் பிரசாரங்களின் 2.0 காலம். பிரிட்டனின் பியர் க்ரில்ஸுடனே இந்தியில் உரையாடிய மோடி, தமிழ்நாட்டில் திக்கித்திணறி திருக்குறள் சொல்கிறார்; ஆத்திசூடி சொல்லி ஆத்துகிறார். ‘நியூஸ்பேப்பரு எனக்கு, நியூஸ் சேனல் உனக்கு’ என ஏரியா பிரித்து, தலைவர்கள் ஓட்டு கேட்கிறார்கள். அதில் முக்கால்வாசி, முன்னோர்கள் சொன்ன பழமொழிபோல பழைய ஐடியாக்களாக இருப்பதால் ஸ்டாலினின் புதுமொழிகள்போல சில புது ஐடியாக்களை நம் பங்குக்குச் சொல்லலாம் என ஆளே இல்லாத பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமர்ந்து யோசித்ததிலிருந்து...
அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

ஸ்டாலின்

‘உ
ங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என ஊர் ஊராய் வரும் ஸ்டாலின் அடுத்து ‘உங்கள் வீட்டில் ஸ்டாலின்’ என்கிற புதிய திட்டத்தோடு வரலாம். ‘காலை டிபன் சாப்பிட நான் ரெடி... தர நீங்க ரெடியா?’ என நம் வீட்டுக் கிச்சனில் வந்து நிற்பார். ‘மாவுல தோசை சுடமாட்டாங்க, ஆனா தோசைல மாவு இருக்கு’ என எக்குத்தப்பாய் எகிறி அடித்து கேமராக்கண்களை எப்போதும் தன்மீதே வைத்திருக்கலாம். அடுத்தடுத்து இப்படியாக, ‘உங்கள் வீட்டு கிரஹ பிரவேசத்தில் ஸ்டாலின்’, ‘உங்கள் இல்லக் காதணி விழாவில் ஸ்டாலின்’ என இறங்கி அடிக்கலாம். என்ன ஒன்று, விசேஷத்துக்கு அழைக்கும் முன், குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். இல்லைனா, ‘கவிதா அவர்களின் குழந்தை பாலு!’ என்று சொல்லும்போது, ‘பெண் குழந்தையாம்மா?’ என்று கேட்ட காமெடி நடந்துவிடும். தட் ‘முருகேசின்னு வெச்சுக்க’ மொமண்ட்!

‘ரைசிங் சன்’ என கின்னஸ் சாதனை முயற்சியோடு சேர்த்து, ‘ஆயிரம் பேருக்குத் தாலி எடுத்துக் கொடுத்த ஸ்டாலின்’, ‘ஒரு லட்சம் பேருக்கு தாய் மாமன் ஸ்டாலின் சீரு’ எனப் புகுந்து புறப்பட்டு வரலாம். பின்னணியில் ‘ஸ்டாலின்தான் வாராரு, சீரு தரப்போறாரு’ என வசதிக்கேற்றபடி ரீமிக்ஸ் செய்துகொள்ளலாம்.

அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

எடப்பாடி

ரப்புரை போகும் இடமெல்லாம் ‘இதெல்லாம் ரொம்பத் தவறுங்க!’ டோனில் முகத்தை ஆக்ரோஷமாய் வைத்து ஸ்டாலினை வாரிவிடும் எடப்ஸ் இப்போதெல்லாம் டிவியைத் திறந்தாலே, ‘வெற்றி நடைபோடும் தமிழகமே...’ எனச் சொல்லி, புன்முறுவலோடு நம் கண்ணைக் குத்துகிறார்.

‘குறுக்கே இந்த கௌசிக் வந்தா...’ மோடில் பன்னீரும் பூமித்தாய்க்கு வீரவணக்கம் வைத்து வெந்நீர் ஊற்றுகிறார். என்ன பண்ணலாம்னா... சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஸ்டைலில், ‘பிரமாண்டமாய்’ மேக் ஓவர் செய்து பாப் ஸ்டைலில் பாட்டுகள் ரெடி செய்து டிவிகளில் தெறிக்க விடலாம்.

‘எம் பேரு பழனிசாமி...

எனக்கீடு யாரு காமி!

நான்தான் டா சி.எம்...

நாளை ஆவேன் பி.எம்!’ என அனிருத் வாய்ஸில் ஃபாஸ்ட் பீட் போட்டு ‘யோ யோ’ என ஆட்டம் போடலாம். கோரஸுக்குத்தான் இருக்கவே இருக்கிறார்கள் கொங்கு பிரதர்ஸ் தங்கமணியும் வேலுமணியும். என்ன, ‘என்னம்மா அங்க சத்தம்?’ என டெல்லியிலிருந்து உடனே ட்ரங்க்கால் வரும். வழக்கம்போல உடம்பை ஏ4 ஷீட்டு போல எட்டாய் மடித்து கை ரெண்டையும் கூப்பி வடக்குப்பக்கமாய் தாமரை நமஸ்காரம் பண்ணிவிடவேண்டியதுதான்.

அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

கமல்

‘உ
ங்கள் நான்’ உலகநாயகன் எல்லாவற்றிலும் முன்னோடியல்லவா? எப்பவுமே அவர் படங்கள் பத்து இருபது வருஷத்துக்கு முன்னாடியே ரிலீஸ் ஆவதைப்போல அவர் பிரசாரமும் அட்வான்ஸ்டாகவே இருக்கும். ‘நல்லவர்களோடு மட்டுமே கூட்டணி’ என்ற வாசகத்தை வேறுமாதிரி சொல்வார். ‘இப்பூலோகத்தில் ஊழல் இல்லாத இடம் கிடையாது. அதனால் இனி ஏலியன்களோடு மட்டுமே கூட்டணி!’ என சமூக வலைதளங்களில் டார்ச் லைட் அடித்து அவரே ஏலியன் வேஷம் போட்டும் வரலாம்.

‘என்னை முதல்வராக்கினால் ‘உங்களில் யார் அடுத்த உலகநாயகன்’னு ஒரு ஷோ நடத்தி அதில் ஜெயிப்பவரை கலைத்துறையில் என் வாரிசாக அறிவிப்பேன்!’ எனச் சொல்லலாம். இதெல்லாம் நடக்குமான்னு எல்லாம் கேட்கக்கூடாது. ஏற்கெனவே ஆண்டவர் ஆரம்பிச்ச பத்துப் படங்கள் டைட்டிலோடு நிக்குது. அதுக்காக அவர் அடுத்தடுத்து அறிவிக்காமயா இருக்கார். நம்பிக்கை, அதானே எல்லாம்!

அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

சீமான்

கன் காதுகுத்தையே ‘மரபுவழிப் பண்பாட்டு மீட்டுருவாக்க முன்னெடுப்பு விழா’ என முழங்கும் அண்ணன், அடுத்து விதம்விதமா சோப்பு, சீப்பு, கண்ணாடிகளை எடுத்து விடுவார். தாய்மாமனின் தார்மீகக் கடமை விழா, ஒன்றுவிட்ட சித்தப்பா எனும் சிறப்பு விழுமிய விழா, மைத்துனன் எனும் முன்நவீனத்துவ கலாசார அமைப்பியல் விழா என அசத்தலாம். இதுவரை அண்ணன் தன் தம்பிகள் முன்னால் அவிழ்த்துவிட்ட கதைகளை எல்லாம் புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகமாகவே வெளியிடலாம். ‘ஆட்சி இல்லாதப்பவே இவ்ளோ சிரிப்பு மூட்டுறாரே, ஆட்சிக்கு வந்தா என்னலாம் காமெடி பண்ணுவாரு’ என ஓட்டுகள் விழ வாய்ப்பிருக்கிறது. முடிந்தால், கமல் ஸ்டைலில், ‘சீக்கிரமே என் வாழ்க்கை வரலாற்றைப் படமா எடுக்கப்போறேன்’ என அறிவிப்பு மட்டும் விடலாம். ‘ஐயோ அந்தக் கொடுமையப் பாக்குறதுக்கு ஆட்சியிலேயே உட்கார வச்சுடலாம், நேரம் கிடைக்காம படம் பண்ணமாட்டாருல’ என மானாவாரியாய் தமிழ்ச்சமூகம் ஓட்டு குத்திவிடும்.

அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

எல்.முருகன்

ண்ருட்டி வேல்முருகனுக்குப் போட்டியாக டோல்கேட்டில் வேலேந்தி வாக்கு சேகரிக்கலாம். சிங்கம்புணரி தங்கராசு குழுவினரையும் பா.ஜ.க உறுப்பினர் அட்டை கொடுத்து கட்சியில் சேர்த்துப் பேட்டி கொடுக்கலாம். கட்சியில் பாடாவதி சினிமா/சீரியல் எடுக்க, நடிக்க என அத்தனைக்கும் ஆள் இருப்பதால் தமிழ்நாட்டுத் தாய்மார்களைக் கவர சின்னத்திரை, ஓடிடியில் அடுத்தடுத்து புராஜக்ட்களை இறக்கி வாக்கு சேகரிக்கலாம். எங்களுக்கு ஓட்டு போடும் நல்லுள்ளங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து கவர்னராக்குவோம் (வித் கன்டிஷன்ஸ் அப்ளைடு) என இதுவரை பார்த்திடாத அறிவிப்பை வெளியிடலாம்.

அவங்க நம்மளை நோக்கித்தான் வர்றாங்க!

ராமதாஸ்

ல்லோருக்கும் ஒரே சாய்ஸ் என்றால் ராமதாஸுக்கு எப்போதும் இரண்டு சாய்ஸ்...

அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்ந்தால் ‘அ.தி.மு.க அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி; அவர்களை வெல்ல வைப்பது அன்புமணி’ என்று மணிமணியாய்ப் பிரசாரம் செய்யலாம். ‘ஓவியா ஆர்மியால் உள்நாட்டுப்பாதுகாப்புக்கு ஆபத்து’ என்று பொளேர் பிரசாரம் செய்து பகீர் கிளப்பலாம். மக்கள் தொலைக்காட்சியில் ‘தினம் ஒரு திருக்குறள்’, ‘அன்றாடம் ஆத்திசூடி’, ‘சின்னத்திரையில் சிலப்பதிகாரம்’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி அதில் மோடியையும் பங்குபெறவைக்கலாம். பிரசாரம் செய்தது போலவும் ஆச்சு; பி.ஜே.பி காரர்களையும் மக்கள் டி.வி பார்க்க வைத்தது போலவும் ஆச்சு!

வழக்கம்போல் தேர்தல் சமயத்தில் யு-டர்ன் அடித்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால்...

‘மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டவர் அமைச்சர் என்றால் அந்த ஆட்சி அழுகிய ஆட்சி’ என்று கடும் தாக்குதல் தொடுக்கலாம். ‘இவர்கள் தொட்டுக் கும்பிட்டு கும்பிட்டு டயரே தேய்ந்துவிட்டதே, தமிழகம் மட்டும் எப்படி வெற்றிநடை போடும்?’ என்று கண்டபடி கவுண்டர் கொடுக்கலாம்.

எதே, மறுபடி ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ பிரசாரம் செய்வாரா? ந்நோ தமிழ்நாடு தாங்காது சாமி!