Published:Updated:

கமல், சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார்... இலுமினாட்டிகளா மூவரும்? சில மீமாய்வுக் குறிப்புகள்!

Suriya
Suriya

இதுவரை நடந்த மீமாய்வில், கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சூர்யா ஆகியோர் மிகப்பெரும் இலுமினாட்டிகளாகக் கண்டறியப்பட்டுள்ளார்கள். அவர்கள் அப்படி எதை, எங்கே, என்று, எப்படி, அன்றே சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

`அன்றே சொன்னார் மகான்' என இத்தனை நாளும் கவுண்டமணி காமெடிகளை மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், மீம் க்ரியேட்டர்களின் டெம்ப்ளேட் தேடுதல் வேட்டை மூலம் அடுத்தகட்ட நிலையை எட்டியிருக்கிறது. இதுவரை நடந்த மீமாய்வில், கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சூர்யா ஆகியோர் மிகப்பெரும் இலுமினாட்டிகளாகக் கண்டறியப்பட்டுள்ளார்கள்.

Suriya
Suriya

எப்போது வெட்டுக்கிளிக் கூட்டம் வெறிக்கொண்டு பறந்து வந்ததோ, அப்போதே `இலுமினாட்டி' அந்தஸ்த்தை அடைந்துவிட்டார் சூர்யா. `காப்பான்' படத்தில் அந்தக் கடைசி வெட்டுக்கிளியைக் கூட சூர்யா தீ வைத்துக் கொளுத்தியபோது சிரித்தவர்கள், இப்போது மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள்.`அன்றே சொன்னார் நம் சூர்யா அண்ணார்' என ஆளாளுக்கு அடிமட்டம் வரைக்கும் போய் அலசியதில் வேறு சில ஸ்பெஷல் பலகாரங்களும் மாட்டியிருக்கின்றன. `சிங்கம் 3' படத்தில் வரும் `கொலைப்பசியில இருக்கேன்' எனும் வசனம் கூட, வெட்டுக்கிளியைக் குறிப்பிடுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.

இன்று உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி, சூர்யா `ஏழாம் அறிவு' படத்திலேயே எச்சரித்தார். மக்கள் அறிவுக்குதான் அது எட்டவில்லை எனச் சிலர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவின் கொடுமைக்கு பயந்து, சர்வ வல்லமை படைத்த அமெரிக்காவே அஞ்சி நடுங்கும். அமெரிக்காவே முடங்கும் என்பதைத்தான் `நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்' என்ற வரிகளின் மூலம் தெரிவித்தார் என்கின்றனர். `நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவத்தியும் தனிமை தனிமையோ' என்கிற வரிகள், க்வாரைன்டனைக் குறிப்பதாகவும், மெழுகுவத்தி என்பது ஊரடங்கினால் உயரும் வறுமையையும் குறிக்கிறதாம். இதுபோதாது என, `சிங்கம் 3' படத்தில் மாஸ்க் வேறு அணிந்திருக்கிறார் சூர்யா.

Suriya
Suriya

`ஒருமாலை இளவெயில் நேரம்' பாடலில் தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சூர்யா, கூட்டமாக நின்று சல்யூட் அடிக்கும் தன் தொழிலாளர்களை, `கிளம்புங்கள்' என சைகை மொழியில் சொல்வார். தமிழகத்தின் தர்பூசணி சீசனில் மக்களைக் கூட்டம் சேரவிடாமல் விதி சதி செய்யும் என அவர் குறிப்பால் உணர்த்தியும், நாம் சுதாரிக்கவில்லை என்கின்றனர் மீம் ஆய்வாளர்கள். `சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலோ `இன்செப்ஷன்' லெவல் குறியீடு. சொடக்கு என்பது தானோஸைக் குறிக்கிறது. தானோஸ், உலக உயிர்களின் அழிவைக் குறிக்கிறார். `பிதாமகன்' படத்தில், அவர் உருட்டி விளையாடிய விளையாட்டைத்தான், நாம் `லூடோ' என்ற பெயரில் தற்போது விளையாடுகிறோமாம்.

`கஜினி' படத்தில் ஏர்வாய்ஸ் நிறுவனத்தில் முதலாளி சஞ்சய் ராமசாமியைக் காதலிப்பார் அசின். நிஜத்திலும், `மைக்ரோமேக்ஸ்' நிறுவனத்தின் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டார். `நான் தம் அடிக்குற ஸ்டைலைப் பார்த்து தனலெட்சுமி விரும்புச்சு' என்கிற பாடலைப் பாடியவர் உங்கள் விஜய். அதே விஜய், `அர்ஜுனரு வில்லு' பாடலில் வாயில் தம்மோடு காரைத் தூக்கிப்பிடித்து நிற்பதைப் பார்த்துக் காதலில் விழுவார் தனலெட்சுமி. இந்த அற்புதமும் சூர்யாவின் வழியாகவே நிகழ்த்தப்பட்டது. `உன்னை நினைத்து' படத்தில், சூர்யாவை குண்டுகட்டாகத் தூக்கிக்கொண்டுபோய் கிணற்றில் வீசுவார்கள். சமீபத்தில் `காஃபின் டான்ஸ்' என்கிற மீம் பிரபலம் அடைந்ததன் பின்னாலுள்ள கதை இதுதான்!

K.S.Ravikumar
K.S.Ravikumar

இதேபோல், கே.எஸ்.ரவிக்குமாரின் விசேஷ சக்திகளை எடுத்துச்சொன்னால் மிரண்டு போவீர்கள். ஆஸ்கர் வென்ற `பாரசைட்' கதையை முன்கூட்டியே `மின்சாரக் கண்ணா' எனச் சொல்லி ஷாக் கொடுத்தவர். `வேலை விஷயமாக பெங்களூர் போகிறேன்' என வீட்டில் பொய் சொல்லிவிட்டு, பேங்காக் ட்ரிப் அடித்த அங்கிள்கள் சமீபத்தில் மாட்டிக்கொண்டதை, `பஞ்சத்தந்திரம்' படத்தில் ஏற்கெனவே சொல்லியிருப்பார். கொரோனாவை விரட்ட விளக்கேற்றும் நிகழ்வு நடக்கும் என்பதையும், விளக்கேற்றுதல் என்றால் என்ன என்பதையும், `நாட்டாமை' படத்தில் அழகாக விளக்கியிருப்பார். க்வாரைன்டனின் கொடுமையை, `படையப்பா' ரம்யாகிருஷ்ணன் மூலம் காண்பித்திருப்பார்.

இவர்கள் இந்தமாதிரி என்றால், கமல் எல்லாம் வேறுமாதிரி ரகம். எந்தேமேரி, அந்தேமேரி! `யு ஸோ நாட்டி' எனும் வசனத்துக்கு `நீங்க மட்டும் என்ன கம்மி நாட்டியா' என கவுன்டர் போட்ட கமல் ஒரு இலுமினாட்டி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் எனக் கொந்தளிப்பவர்கள் ஏராளம். சுனாமி, பணமதிப்பிழப்பு, கிரெடிட் கார்டு, பயோவார், அத்திவரதர் என ஏகபட்ட மேட்டர்கள் கமலைச் சுற்றி இருக்கின்றன. பிக்பாஸ் லோகோவில் வரும் அந்த ஒற்றைக் கண் வரையிலும், தான் ஒரு இலுமினாட்டி என்பதைக் கமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என இலுமினாட்டி ஆய்வாளர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

Kamal Hassan
Kamal Hassan

`சகுனி' படத்தில் கார்த்தியின் பெயர் கமல். அப்படத்தில் அரசியலில் ஈடுபடும் கார்த்தியின் சின்னமோ டார்ச் லைட்! எனவே, கமல் - கே.எஸ்.ரவிக்குமார் - சூர்யா மூவரும் சம்பந்தப்பட்ட, `மன்மதன் அம்பு' படத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தினால், இன்னும் பல பூதாகரமான விஷயங்கள் வெளிவரும் என்கின்றனர்.

`மன்மதன் அம்பு' எனும்போது, `நீலவானம்' பாடல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடல்தானே இப்போது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் `டெனட்' படமாக உருவெடுத்து வருகிறது. நோலனும் கமலும் வேறு சமீபத்தில் சந்தித்துக்கொண்டார்கள். ஆத்தி!
அடுத்த கட்டுரைக்கு