Published:Updated:

'இது ரஜினி சொன்ன இறைவன் இல்லை, நிஜ இறைவன்!' - கருணாநிதியின் கலகல பக்கங்கள்

``இளம் ஜோடிகள்தான் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்குப் பிரியப்படுவார்கள். பத்திரிகையாளர்கள் என்னைக் காதலிக்கவா செய்கிறார்கள்.? விருப்பப்படுகிறார்கள்'’னு சொல்லுய்யா.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

``முன்னாள் முதல்வரும் தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி, தன் வாழ்வில் பல இக்கட்டான தருணங்களை தனது நகைச்சுவை உணர்வின் மூலம் கடந்தவர். சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்! முறைத்துக் கொண்டே திரியும் எதிர்க்கட்சியினரைக்கூட தன் நகைச்சுவை மூலம் கிச்சுக் கிச்சு மூட்டிவிடுவதில் அவர் கில்லாடி!கலைஞருடனான மறக்க முடியாத நகைச்சுவை சம்பவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்..."

ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்.பி, நாகப்பட்டினம்.

``2000-ம் ஆண்டு முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தலைவர் டெல்லி வந்திருந்தார். அவரிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அறையில் நுழைந்த டி.ஆர்.பாலு தலைவரை உபசரிக்கும் நோக்கில், "சூப்பு..சீப்பு ஏதும் வந்ததா " என்று கேட்டார். உடனே" சூப்பு வந்துட்டு.. அடுத்து ஒண்ணு சொன்னியே... அதான் வரலை' என்றார் கலைஞர். அறையில் சிரிப்பு அடங்க ரொம்ப நேரமாச்சு...

ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்.பி, நாகப்பட்டினம்
ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் எம்.பி, நாகப்பட்டினம்

ஒரு முறை தலைவரிடம், அப்போது ஸ்ரீபெரும்புதூர் எம்.பியாக இருந்த கிருஷ்ணசாமி, ``நாம அறிவிக்கிற திட்டங்கள் எல்லாம் கவர்ச்சியா இருக்கணும் தலைவரே " என்றார். அதற்கு, `கவர்ச்சி இறந்து ரொம்ப நாளாச்சேய்யா...' என்றார் தலைவர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. அவர் சில்க் ஸ்மிதாவைச் சொல்லியிருக்கிறார் என்பது நீண்ட நேரத்துக்குப் பிறகு தெரிந்து சிரித்தோம்.

தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்.

ஒருமுறை கருணாநிதியிடம் அவரது உதவியாளர் ஒரு டப்பாவைக் கொடுத்தார். தலைவர் பலமுறை முயன்றும் அந்த டப்பாவைத் திறக்க முடியவில்லை. இதைச் சிறிது நேரம் கவனித்த நான் வேகமாகச் சென்று திறந்து கொடுத்துவிட்டு நான் இருந்த இடத்துக்கே திரும்பினேன்.

தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்.
தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்.

அப்போது `தென்னரசு இங்கே வா!’ என அழைத்து டப்பாவிலிருந்து ஆப்பிள் துண்டுகளை எடுத்து என்னிடம் கொடுத்தார். எனக்கு ஏன் எனப் புரியவில்லை. அப்போது, 'பழம்பெரும் தலைவனிடம் பழம் பெறுபவன் நீ' என்றார்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் – தி.மு.க செய்தி தொடர்பாளர் :

ஒருமுறை கலைஞரைச் சந்திப்பதற்காக கோபாலபுர வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். இதை தலைவருக்குத் தெரியப்படுத்துவதற்காக வீட்டிற்குள் சென்ற நான், “தலைவரே பத்திரிகையாளர்கள் உங்களைச் சந்திக்கப் பிரியப்படுகிறார்கள்” என்றேன்...

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

அதற்கு அவர் , “இளம் ஜோடிகள்தான் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்குப் பிரியப்படுவார்கள். பத்திரிகையாளர்கள் என்னைக் காதலிக்கவா செய்கிறார்கள்.? விருப்பப்படுகிறார்கள்'னு சொல்லுய்யா. என்றார் சிரித்துக் கொண்டே... அதைக்கேட்டதும் பேராசிரியர் உட்பட அருகில் இருந்த எல்லோரும் கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இறைவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர், தஞ்சாவூர்

இறைவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர், தஞ்சாவூர்.
இறைவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர், தஞ்சாவூர்.

''நான் நகர்மன்றத் தலைவருக்குப் போட்டியிட்டபோது என்னை ஆதரித்து கலைஞர் பிரசாரம் செய்தார். அப்போது, `நான் எனக்காக ஓட்டு கேட்டிருக்கிறேன். மற்ற மனிதர்களுக்காகவும் ஓட்டு கேட்டிருக்கிறேன். வாழ்கையில் முதல் முறையாக இப்போது இறைவனுக்காக ஓட்டு கேட்கிறேன். இது ரஜினி சொன்ன இறைவன் இல்லை. நிஜ இறைவன்' எனச் சொல்ல ஒட்டுமொத்த கூட்டமுமே கைதட்டிக் கொண்டாடியது''.

இரா.பெர்னாடு, தி.மு.க. மாநில மீனவர் அணிச் செயலாளர்.

''நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, இந்துக்கள் பூசும் விபூதிக்கு வரி போடப்பட்டிருந்தது. அப்போது தென்காசி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் சட்டசபையில், 'தங்களுக்கு மத நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்து மத மக்கள் பூசும் விபூதிக்கு வரி போட்டுள்ளீர்களே. அதை நீக்க வேண்டும்' எனக் கேட்டார். அதற்கு கலைஞர், "விபூதிக்கு வரி விலக்கு கேட்கிறார் ஈஸ்வரன். அந்த ஈஸ்வரனே கேட்கிறபோது நான் சாதாரண மனிதன் மறுக்க முடியுமா" எனக்கூறி விபூதிக்கான வரியை ரத்து செய்தார்.

இரா.பெர்னாடு, தி.மு.க. மாநில மீனவர் அணிச் செயலாளர்.
இரா.பெர்னாடு, தி.மு.க. மாநில மீனவர் அணிச் செயலாளர்.

கலைஞருக்கு ஆளுயர மாலை போடும்போது, 'குள்ளமான மனிதர் உயருவதற்கு ஆள் உயர மாலை போடுகிறீர்கள்" எனச் சிரிப்பலையை ஏற்படுத்துவார்.

மீனாலோகு, முன்னாள் கவுன்சிலர் கோவை

'நான் கவுன்சிலரான பிறகு, தலைவரைச் சந்திக்க முதல் முறையாக சென்னை சென்றேன். தலைவர், சி.ஐ.டி காலனியில் கார் ஏறுவதற்கு வந்தார். அதற்கு முன்பு நான் அவரை அவ்வளவு அருகில் இருந்து பார்த்ததில்லை. உடனே, 'ஐயா உங்களைப் பார்த்தது அப்படியே கடவுளைப் பார்த்தது போல் இருக்கிறது' என்று கூறினேன். அதற்கு தலைவர், `கடவுளை அடிக்கடி பார்ப்பாய் போல' என்று சிரித்தார்...

மீனாலோகு, முன்னாள் கவுன்சிலர் கோவை
மீனாலோகு, முன்னாள் கவுன்சிலர் கோவை

மற்றொருமுறை தலைவரை பார்க்கச் சென்றிருந்தபோது, என் கணவரிடம், `சீக்கிரம் வாங்க.. தலைவரைப் பார்க்கணும்' என்று அழுத்தமான குரலில் அழைக்க, அது தலைவருக்குக் கேட்டுவிட்டது உள்ளே சென்றதும், 'உங்க வீட்டில் சிதம்பரம் ஆட்சி இல்லைபோல, மீனாட்சி ஆட்சி தானா?' எனக் கேட்டார். அது எனக்குப் புரியவே சற்று தாமதமானது. அவரைப் போல ஆன் ஸ்பாட்டில் கலாய்க்க யாராலும் முடியாது.

கே.சி.பழனிசாமி, கரூர்.

கே.சி.பழனிசாமி, கரூர்.
கே.சி.பழனிசாமி, கரூர்.

"பழைய தினகரன் பத்திரிகையின் திருச்சி பதிப்பு துவக்க விழா. அதன் உரிமையாளர் கே.பி.கந்தசாமி, கலைஞர், குன்றக்குடி அடிகளார்னு பலர் கலந்துகிட்டாங்க. விழா தொடங்குவதற்கு முன்பு, கலைஞர் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது, கீழே வந்த கே.பி.கந்தசாமி, 'விழா தொடங்கணு ம். ஸ்டேஜூக்கு போகலாமா?'னு கேட்டார். அதுக்கு கலைஞர் சற்றும் யோசிக்காமல், 'நீங்க முன்னேறணும்னா, எந்த ஸ்டேஜூக்கும் போகலாம்' என டைமிங், ரைமிங்காக டயலாக் பேசினார். எல்லோரும் சிரிச்சுட்டோம்"

ஒருமுறை சென்னை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்தார் கலைஞர். அவரைப் பார்க்க ஏராளமான கூட்டம்... வயதான ஒருவர், கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வந்து... உங்களைப் பாக்கிறதுக்காக, பெரிய குளத்திலிருந்து நேரா வர்றேன் தலைவரே எனச் சொல்ல... அடுத்த நொடியே 'நனையாமல் வந்திருக்க.?' எனக் கேட்டார் கலைஞர். முதியவருக்கோ எதுவும் புரியவில்லை. யோவ்... குளத்திலிருந்து வந்திருக்கேன்'னு சொன்னீயே அதைக் கேட்டேன்யா... என்று சிரித்தார் கலைஞர், சுற்றி நின்றவர்களும் உடல் அதிரச் சிரித்தார்கள்.

சுப.சீதாராமன்,தி.மு.க தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர்

'நான் அரசு ஊழியர் சங்கத் தலைவராக இருந்தபோது ஊழியர் சங்க மாநாடு நடந்தது. கலைஞர் பங்கேற்ற அந்த மாநாட்டில் நான் பேசும்போது, 'தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் பிற துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். 'தலைவர் கலைஞர் முருகனைப் போல இருக்கிறார். அவருக்கு தெய்வானை மீது பற்றும் பாசமும் அதிகம் இருக்கிறதே தவிர வள்ளியைக் கண்டுகொள்வதே இல்லை’ என்றேன்.

சுப.சீதாராமன்,தி.மு.க தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர்
சுப.சீதாராமன்,தி.மு.க தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர்

எனது பேச்சுக்கு கலைஞர் பதில் அளிக்கையில், ’சுப.சீதாராமன் முருகன், வள்ளி, தெய்வானை எனப் பேசிட்டுப் போயிட்டார். ஆனால், முருகன் வள்ளியை அடைய என்ன பாடுபட்டான் தெரியுமா? வேலனாக, வேடனாக, விருத்தனாக, கடைசியில் அண்ணன் விநாயகன் துணையுடன் வள்ளியைக் கரம் பிடித்தான். அதனால் பிற துறைகளின் ஊழியர்கள் மீதும் எனக்குப் பற்று அதிகம்’’ எனப் பேசி பார்வையாளர்களைக் கலகலக்க வைத்தார்.