Published:Updated:

`சூரரைப் போற்று' விழா விமானத்தில்... `மாஸ்டர்', `இந்தியன்-2' விழாக்களை எங்கே நடத்தலாம்?!

மாஸ்டர்
மாஸ்டர்

நெய்வேலியில் பஸ்ஸின் மீது ஏறி நின்று விஜய் தட்டிய செல்ஃபி, `செல்ஃபி புள்ள' பாடலை விட பல மடங்கு ரீச். அதிலும், புலவர் பாலபத்திர ஓணாண்டி கவிதை வாசிக்கும் முன்பு, கேஷூவலாக அமர்ந்திருக்கும் புலிகேசியின் தொனியில் வெளியான அந்த `ஒரு குட்டிக் கதை' போஸ்டரும் முரட்டு ரீச்.

`சூரரைப் போற்று' படத்தின் இசை வெளியீட்டை, நடுவானில் விமானத்தில் நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. அத்தனையும் அம்பானி மூளை, வியாபார யுக்தி. ஸாரி, ஜி.ஆர்.கோபிநாத் மூளை, வியாபார யுக்தி. இதே யுக்தியை அடுத்தடுத்து வரவிருக்கும் படங்களில் பொருத்திப்பார்த்து, கொளுத்திப்போடுவோம் எம் மக்காள்...

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

மாஸ்டர் :

மாஸ்டர்
மாஸ்டர்

நெய்வேலியில் பஸ்ஸின் மீது ஏறி நின்று விஜய் தட்டிய செல்ஃபி, `செல்ஃபி புள்ள' பாடலைவிட பல மடங்கு ரீச். அதிலும், புலவர் பாலபத்திர ஓணாண்டி கவிதை வாசிக்கும் முன்பு, கேஷூவலாக அமர்ந்திருக்கும் புலிகேசியின் தொனியில் வெளியான அந்த `ஒரு குட்டிக் கதை' போஸ்டரும் முரட்டு ரீச். எனவே, போக்குவரத்துக் கழகத்திடம் பேசி, பழைய தொடர் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்துவிட்டால் சுபம். பேருந்தின் கூரையில் மைக் ஒன்றை செட் செய்துவிட்டு, சென்னையில் ஆரம்பித்து செங்கோட்டைவரை சொற்பொழிவாற்றிக்கொண்டே போகலாம். விஜய் ஒரு குட்டிக்கதை, விஜய் சேதுபதி ஒரு கதை என மாறி மாறி மைக்கைப் பிடித்தால் போதும், இந்த ஏப்ரல் நம்மள்து! `கைதி'க்கு ஒரு லாரி, `மாஸ்டர்'க்கு ஒரு பஸ் என லோகேஷ் ரசிகர்களும் குஷியாவார்கள்.

அயலான் :

அயலான்
அயலான்

அவர்கள் ஏரோபிளேனில் ஆடியோ லான்ச் நடத்தினால், நாம் அதையும் தாண்டி ஏலியன் ஷிப்பிலேயே நடத்துவோம் என ஏலியன் லெவல் யோசனையோடு கிளம்பும் `அயலான்' டீம். இசை வெளியீட்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக ஏரியா 51 பகுதியிலிருந்து ஏலியன்களையும் வரவழைத்து மாஸ் காட்டலாம்! விழாவிற்கு வரும் ஏலியன்கள் கையில், `அகில வியாழ சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் - ஜூபிட்டர் கிரகம்', `கேடி வீனஸ் கில்லாடி மார்ஸ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூட்டமைப்பு', `வருத்தப்படாத நெப்டியூனர் சங்கம்' எனப் பதாதைகள் தயார் செய்து கொடுத்துவிட்டால் போதும், அதைக் கண்டு அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவாவே மிரண்டு போவார்.

அமெரிக்க ராணுவத்தை அலெர்ட் செய்த ஏரியா 51 போராட்டம்.. என்ன ஆனது?

இந்தியன் - 2 :

இந்தியன் - 2
இந்தியன் - 2

எப்படியும் 8,000 லிட்டர் பெயின்ட்டைக் கொட்டி பிரமாண்டமான இசை வெளியீடாகத்தான் நடத்துவார்கள். பர்மாவே சும்மா பதறும்ல! இசை வெளியீடுக்கு வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் ராணுவ உடையை அளவெடுத்து, வெட்டி, ஒட்டி, தைத்து மாட்டிவிட்டு ஆர்மி ஒன்றையே உருவாக்கி கெத்துக் காட்டுவார்கள். ``இது இந்தியன்-2 ஆர்மி இல்லை. இது இந்தியாவோட 2-வது ஆர்மி" எனக் கமல் பன்ச் அடித்து, கண்ணடிக்க, திரையுலகமே மிரண்டுபோய் நிற்கும். அப்படியே `தான் இன்னும் பழசை மறக்கலை' எனச் சிரித்துவிட்டு அனிருத்தின் இடுப்பில் வர்மக்கலை ஒன்றைச் செய்துக்காட்டினால் போதும் மக்கா. ட்விட்டர் தெறிக்கும், ஃபேஸ்புக் வெடிக்கும்.

தலைவர் 168 :

தலைவர் 168
தலைவர் 168

`சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, ஊர் திருவிழாவாகவே நடத்திவிடலாம். ராட்டினத்தில் ஏறி சுற்றிக்கொண்டே ஒரு பாடலை வெளியிடுவது, பஞ்சுமிட்டாய் தின்றுக்கொண்டே இன்னொரு பாடல் வெளியிடுவது, குழாய் ஸ்பீக்கர் செட் செய்து உரையாற்றுவது, இடையிடையே திருவிழாவில் தொலைந்து போனவர்கள் பற்றிய அறிவிப்பையும் சொல்வதென முழுக்க முழுக்க திருவிழா செட்டப்பிலேயே நடத்தி ஹிட் அடிக்கலாம். படத்தில் ரஜினியின் குடும்பத்தினராக அவரது ஆறு பெட்ரூம் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் 630 நடிகர்களுக்கும் ஜிகுஜிகு சட்டை, பட்டுப் புடவை, கூலிங் க்ளாஸ், கவரிங் நகை என எடுத்துக்கொடுத்து பிரமாதப்படுத்தலாம்.

பொன்னியின் செல்வன் :

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

வந்தியத்தேவன் வழியில் ஒரு இசை வெளியீட்டு விழா என அறிவித்துவிட்டு, விழா பத்திரிகையைப் புறா காலில் கட்டி தூதுவிடுவதில் ஆரம்பித்து வேற லெவல் பண்ணலாம். அரண்மனை செட் ஒன்று அமைத்து, மன்னனின் அவையில் இசை அரங்கேற்றம் நடப்பதுபோல், வெளியாகவிருக்கும் பாடல்களை எல்லாம் லைவாக வாசித்துக்காட்டி, மன்னரிடம் பொன்மூட்டை வாங்கலாம். விழாவுக்கு வரும் ரசிகர்களுக்குப் பருத்திப்பால், சுக்குநீர், பானக்கரம், ஓமத்திரவம் போன்ற திரவங்களை விருந்தாகக் கொடுத்து விருந்தோம்பல் செய்யலாம். எல்லா நடிகர்களும் பேசி முடித்தபின் கடைசியில் இயக்குநர் உரையாற்றுவார் என அரசாணை வாசித்துவிடலாம். எல்லா நடிகரும் பத்துப்பத்து நிமிடங்களில் பேசினாலும், மொத்தமாய்ப் பத்து மணி நேரமாகிவிடும். இயக்குநரின் பேச்சைக் கேட்க, அது அத்தனையும் தாங்கிக்கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். கடைசியில், இயக்குநர் மைக்கைப் பிடித்து, `நாம பேசக்கூடாது. நம்ம படம் பேசணும். நன்றி வணக்கம்' எனச் சொல்லிவிட்டு லைட் ஆஃப் செய்து கிளம்பினால், அடுத்த மூன்று நாள்களுக்கு டிரெண்டிங் நாமதான்!

அடுத்த கட்டுரைக்கு