Published:Updated:

`பிகில்' கதை, `சக்தே இந்தியா' கதை மட்டுமல்ல... இந்தப் படங்களின் கதையும்தான்!

பிகில்
பிகில்

ஸ்போர்ட்ஸ் படங்களில் அப்படி என்னதான் கதை இருக்கும்?!

`கனா' கதைதான் `பிகில்' கதையும், `சக்தே இந்தியா' கதைதான் `கனா' கதையும் என குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். உண்மையிலேயே, `சக்தே இந்தியா' கதைதான் `பிகில்' கதையா? எனக் கேட்டால் `பிகில்', `கனா', `சக்தே இந்தியா' மட்டுமல்ல, உலகம் முழுக்க ஸ்போர்ட்ஸ் டிராமா என்றால் ஒரே கதைதான். அது இந்தக் கதைதான்...

சக்தே இந்தியா
சக்தே இந்தியா

இந்தக் கட்டுரையில் `ஹீரோ' எனும் வார்த்தை வரும் இடங்களை `ஹீரோயின்' என மாற்றிப் படித்தால், `வுமன் எம்பவர்மென்ட்' நாடி, நரம்புகளில் ஓடுவதை உணரமுடியும். ரெடி... ஸ்டெடி... கோ!

டீமாகச் சேர்ந்து விளையாடுகிற விளையாட்டு என்றால், ஹீரோ இருக்கும் டீம்தான் இருப்பதிலேயே டொக்கு டீமாக, மக்கு டீமாக இருக்கும். இல்லையென்றால் திறமைக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்க்கையே வெறுமையாகிப் போன இருன்மையான டீமாக இருக்கும். யாராவது இந்த இருட்டில், இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட மாட்டார்களா எனக் காத்திருப்பார்கள். தனியாக விளையாடுகிற விளையாட்டென்றால், ஹீரோ இயற்கையிலேயே ஒரு அத்லெட்டாக இருப்பார். அந்த விஷயம் யாருக்கும் தெரியாது. ஏன், ஹீரோவுக்கே தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன்..!

மான் கராத்தே
மான் கராத்தே

ஸ்போர்ட்ஸ் படங்களில் ஹீரோக்களுக்கு வருகிற முதல் பிரச்னை, அவர்களுடைய அப்பா-அம்மா. ``நமக்கு இந்த விளையாட்டுலாம் தேவையாப்பா" என சோகக்குரலில் பேசி அழவைப்பார்கள். ஆனால், காதலர்கள் அப்படியல்ல, நம் ஹீரோவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவார்கள். knee கேப், அப்டமன் கார்டுலாம் நொறுக்குத்தீனி வாங்க வைத்திருந்த காசில் வாங்கித்தருவார்கள். அதை அணிந்துகொண்டுதான் எதிரணியின் டவுசரைக் கிழிப்பார் நம் ஹீரோ. ஒரு கொசுறுத்தகவல்... இந்த மௌத் கார்ட் வாங்கித் தருவதெல்லாம் வீண் வேலை. ஏனென்றால், எப்படியும் வில்லன் மேல் கொலைவெறியாகும் கணம், அதைத் துப்பி விட்டுதான் ரத்தக்காவு கேட்பார் ஹீரோ சார்.

போட்டிக்குப்போகும் இடமெல்லாம் பொறைமண்டையில அடி வாங்கிக்கொண்டிருக்கும் ஹீரோ டீம். அப்போதுதான் கதைக்குள் ஒரு கோச் வருவார், மாரி பொழியும்! அந்த கோச்சின் கதை, இந்த டீமின் கதையைவிட பெருஞ்சோக, பெருங்காயக் கதையாக இருக்கும். விளையாட்டுத் துறைக்குள் நடக்கும் அரசியலால் அவர் வாழ்க்கையே பாழாகியிருக்கும். திறமையிருந்தும் வறுமையில், ஒரு குடிசையில் வாழ்ந்துகொண்டு இருப்பார். ப்ச்ச்...

கனா
கனா

``இந்த உலகம் ஜெயிச்சுருவேன்னு சொன்னா கேட்காது. ஆனா, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்." அதனால், துறைக்குள் நடக்கும் அநியாயங்களை எல்லாம் வெளியுலகத்திற்குச் சொல்வதற்காகவே, ஹீரோ டீமை ஜெயிக்கவைக்கப் பாடுபடுவார் நம் கோச். இதனால்தான், எல்லா கோச்சும் சுடலைமுத்துவை விட ஸ்ட்ரிக்டாக இருப்பார்கள். பன்ச் டயலாக்காகப் பேசிப் பேசியே மண்டையைக் கழுவி மனித வெடிகுண்டாக வீரர்களை மாற்றும் வல்லமையும் அவர்களிடம் உண்டு.

கோச் வேலை என்பது, ஹீரோவை கம்பியில் தொங்கவிட்டு கட்டையைக் கொண்டு அல்லையில் அடிப்பதும், சாத்துக்குடி ஜூஸ் போட்டுக்கொடுப்பதும் மட்டும் அல்ல; மேட்ச் நடக்கும்போதெல்லாம் கம்பி மேல் நடப்பதுபோல் திகிலாகவே இருக்கும். எப்போது, கோச் போஸ்ட்டிங்கைப் பிடுங்குவார்கள், ரூமுக்குள் பூட்டி வைத்து வெளி தாழ்ப்பாள் போடுவார்கள், உருட்டுக் கட்டையால அடிப்பார்கள் என பயத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு திரிவார்கள் நம் கோச்கள். ஹீரோ / ஹீரோ டீம் ஜெயிப்பதற்காக எந்தத் தியாகத்தை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் பரிசுத்த ஆத்மாக்கள் அவர்கள்.

இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று

கம்பி, கட்டை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. போட்டிக்காக ப்ளேயர்ஸ் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் எல்லாம் வெறித்தனமாக இருக்கும். தண்டவாளத்தில் ரயிலுக்கு வழிவிடாமல் ஓடுவது, கையில் ரோட் ரோலரை விட்டு ஏற்றுவது, வயிற்றில் எருமை மாடுகளை நடக்கவிடுவதென பயங்கரமாய் வெறிபிடித்து உருமாற அலைவார்கள். இது போதாதென புதிதாக, புத்திசாலித்தனமாக முயற்சி செய்கிறேன் என நாயைத் துரத்த விடுவது, கங்காருவுடன் பாக்ஸிங் செய்ய வைப்பதென தினுசா தினுசாக இறங்குவார்கள் நம்ம கோச்சர்கள். ``ஏய்யா அண்ணாமல... இப்படி ப்ராக்டீஸ்லேயே ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, அப்புறம் யாருய்யா அந்த மேட்ச்ல ஆடுறது!''

டோர்னமென்ட் தொடங்கும்போது ஹீரோ / ஹீரோ டீமைப்பார்த்து `யார்றா இவனுங்க கோமாளி' என மைதானமே கைகொட்டி சிரிக்கும். முதல் மேட்ச் முடிந்தபிறகு, சிரித்துக்கொண்டு இருந்த அத்தனை வாயும், `பே' எனப் பிளக்கும். கைகொட்டி சிரிக்கும் ஒலி கொஞ்சம் கொஞ்சமாய்க் கைதட்டி... ஆர்ப்பரிக்கும் ஒலியாய் மாறும்.

வெண்ணிலா  கபடிக்குழு 2
வெண்ணிலா கபடிக்குழு 2

செமி ஃபைனல்ஸில் தோற்றாலும் ஃபைனல்ஸில் ஹீரோ / ஹீரோ டீம் விளையாடியே ஆக வேண்டும் என்பதுதான் ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களின் விதி. அதில் நிச்சயம் வில்லன் டீம்தான் எதிர்த்து ஆடும் என்பது வில்லன்களின் தலைவிதி. ஃபைனல்ஸின், முதற்பாதி முழுக்க எதிரிகளிடம் செம அடி வாங்கும் ஹீரோ டீம். இன்டர்வெல்லுக்கு மூணு செகண்ட் முன்புதான், முதல் பாயின்டையே எடுக்கும். சரி, இனி பிக்கப் ஆகிடும் எனப் பார்த்தால் செகண்ட் ஆஃப் ஸ்டார்ட்டிங்கிலும் செம அடி வாங்கும் ஹீரோ டீம். கடைசியில், தர்மம்தான் ஜெயிக்கும் என வாங்கிய அத்தனை அடியையும் வட்டியும் முதலுமாய்த் திருப்பிக் கொடுப்பார்கள். எஸ், கர்மா இஸ் அதர்வா படம்!

ஃபைனல்ஸில் தன் பலவீனத்தை பலமாக மாற்றித்தான் ஹீரோ கப் அடிப்பார். டீமிலேயே மொக்கை ப்ளேயர் ஒன்று கண்டிப்பாக இருக்கும். அந்த பீஸை பக்காவாக யூஸ் பண்ணுவார் ஹீரோ. கோச் என்றைக்கோ சொல்லிக்கொடுத்த ட்ரிக்ஸை, புருவத்துக்கு மத்தியில் கொண்டு வந்து நிறுத்திச் செயல்படுத்தி செஞ்சுவிடுவதுதான் நம் ஹீரோக்களின் வழக்கம். இவை எல்லாவற்றையும் விட ஸ்பெஷல் அயிட்டம் என்னவென்றால், படத்தின் இடையிலேயே இறந்துபோன அல்லது கழண்டுபோன ஜீவன், ஆடியன்ஸ் வரிசையில் வந்து `ஆல் தி பெஸ்ட்' காட்டும். அப்புறம் என்ன, ரெஸ்ட் இஸ் ஹிஸ்ட்ரி...

நட்பே துணை
நட்பே துணை

இப்போ சொல்லுங்க மக்களே, `பிகில்' கதை `சக்தே இந்தியா' கதை மட்டும்தானா..?

அடுத்த கட்டுரைக்கு